தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண்களின் சட்ட உரிமைக்காக இறுதிவரை பாடுபட்டவர் உ.நிர்மலா ராணி

19 Jun 2026, 1:22 am
பெண்களின் சட்ட உரிமைக்காக இறுதிவரை பாடுபட்டவர் உ.நிர்மலா ராணி

பெண்களின் சட்ட உரிமைக்காக இறுதிவரை பாடுபட்டவர் உ.நிர்மலா ராணி

நினைவேந்தல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்!

திருச்சிராப்பள்ளி, ஜூன் 18- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், மகளிர் சட்ட உதவி மையத்தின் மாநிலத் தலைவருமான பெண்ணுரிமைப் போராளி வழக்கறிஞர் டாக்டர் உ.நிர்மலா ராணியின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி திருச்சியில் செவ்வாய் மாலை ஜூன் 16 நடைபெற்றது. மாதர் சங்க திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.சரஸ்வதி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.ராகீலா பானு வரவேற்றார். தோழர் உ.நிர்மலா ராணியின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து மாதர் சங்க மாநிலத் துணைத்தலைவர் கே.பாலபாரதி பேசினார். “வழக்கறிஞர் நிர்மலா ராணி அனைத்துத் தரப்புப் பெண்களின் உரிமைக்காகவும், பெண் குழந்தைகள் பாதிக்கப்படும்போதும் சட்டப்பூர்வமாகக் களமிறங்கியவர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் வெறும் சட்டரீதியான அணுகுமுறையை மட்டும் காட்டாமல், உணர்வுப்பூர்வமான தோழமையைக் கொண்டிருந்தார்.அரசு நிர்வாக அமைப்புகளோடு இணைந்து திருச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களைத் தடுப்பது, இளம் வயது விதவைகள் உருவாவதைத் தடுப்பதில் தீவிரமாகப் பணியாற்றினார். உத்தபுரம் தீண்டாமைச் சுவர் எதிர்ப்புப் போராட்டத்தின் போது, காவல்துறையினரால் தாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீதிமன்றத்தில் முன்னின்று வாதாடி, ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் நிவாரணம் பெற்றுத் தந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும். அருந்ததியினருக்கான 3 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் மற்றும் உசிலம்பட்டி ஆணவக் கொலை வழக்கிலும் அவரே முன்வந்து வழக்குகளை நடத்தி நீதியைப் பெற்றுத் தந்தார். தோழர்கள் ஆர்.உமாநாத் - பாப்பா உமாநாத் ஆகியோரின் புதல்வியான அவர், செங்கொடி இயக்கத்தின் பிள்ளையாக வளர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட தலைவராகத் திகழ்ந்தார்” என்று பாலபாரதி புகழாரம் சூட்டினார்.

பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாவலர்

மாதர் சங்க மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா பேசுகையில், “தோழர் நிர்மலா ராணி எப்போதும் ‘இரண்டாம் நிலை பாதிப்பு’ குறித்தே அதிகம் கவலைப்படுவார். தற்போதைய சூழலில், பாதிக்கப்பட்ட பெண்களையே மீண்டும் மீண்டும் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதும், அவர்களின் நடத்தையைச் சிதைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. நிர்மலா ராணி, பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டும் காயப்படுத்துவதை ஒரு நிமிடம் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்” என்றார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுபா பேசுகையில், “எந்தவொரு சமூகப் பிரச்சனையாக இருந்தாலும் அதனை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும் என்பதில் நிர்மலா ராணி தெளிவாக இருந்தார். இந்தியாவில் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகள் குறித்த ஆராய்ச்சி நூலாகவே அவரது ஆய்வறிக்கை உருப்பெற்றது. அவர் பாதியில் விட்டுச் சென்ற பணிகளை அடுத்த தலைமுறைத் தோழர்கள் முன்னெடுத்துச் செல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி” என்றார்.

ஒரு மாதத்திற்குள் நூல் வெளியிடத் திட்டம்

மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா பேசுகையில், “சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டு வர அரசாங்கம் அமைத்த கே.என்.பாஷா கமிட்டிக்கு, நிர்மலா ராணி அளித்த பரிந்துரைகளும் அவரது ஆய்வுகளும் மிக முக்கியமானவை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபட்ட அவரது எழுத்துக்களைத் தொகுத்து, மாதர் சங்கத்தின் சார்பில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நூலாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். எல்.ஐ.சி. மகளிர் துணைக்குழு உறுப்பினர் க.கலைமணி, மதுரையில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்காக நிர்மலா ராணி முன்னின்று சட்ட உதவிகள் செய்ததை நினைவுகூர்ந்தார். சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர் பேசுகையில், 1980-களில் திருச்சி மாணவர் இயக்கப் போராட்டங்களில் அவர் ஆற்றிய அரிய பங்களிப்பை விளக்கினார்.

மாதர் சங்க அகில இந்தியத் துணைத்தலைவர் சுதாசுந்தர்ராமன் பேசுகையில், “வழக்கறிஞர் தொழிலை வெறும் வருவாய் ஈட்டும் பணியாகப் பார்க்காமல், அதையே ஓர் அரசியல் வடிவமாக, இயக்கப் போராட்டமாக மாற்றிக் காட்டியவர் நிர்மலா ராணி. அவரது வழிகாட்டுதலை முன்னோக்கி எடுத்துச் செல்வதே அவருக்கு நாம் செலுத்தும் வீரவணக்கம்” என்றார். இந்நிகழ்வில் நிர்மலா ராணியின் கணவர் வழக்கறிஞர் ராஜ்குமார், மகள் மதுவந்தி, மகன் சிபிநந்தன், மாதர் சங்க அகில இந்தியத் துணைத்தலைவர் உ.வாசுகி, சோக்கோ அறக்கட்டளை நிர்வாகி செல்வகோமதி, மாதர் சங்க மத்தியக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.சசிகலா, மாநிலத் துணைச் செயலாளர் பி.பூமயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் வி.மாலதி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.