வர்க்க உரிமைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மதுரையின் மாவீரன் தியாகி பாலு! - வை.ஸ்டாலின்
21 Feb 2026, 3:26 pm
<p><strong>வர்க்க உரிமைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மதுரையின் மாவீரன் தியாகி பாலு!</strong></p>
<p>கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது வெறும் ஏட்டறிவால் வளர்ந்த தல்ல; அது தியாகி பாலு போன்ற உன்னதமான மனிதர்க ளின் இரத்தத்தாலும், தியாகத்தாலும் கட்டப்பட்டது. “என்னைத் தூக்கி லிட்டாலும் ஊக்கம் பிறக்குதம்மா” என்று மரணத்தின் விளிம்பில் நின்று பாடிய ஒரு புரட்சியாளனின் கதை, உழைக்கும் வர்க்கத்தின் அழியாத காவியம். கருவேப்பிலையில் உதித்த கனல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த கருவேப்பிலை எனும் சிற்றூ ரில் 1920-ஆம் ஆண்டு பெரிய கருப்பத்தேவர் - வீரம்மாள் தம்பதிய ருக்கு மகனாகப் பிறந்தார் பாலு. வறுமை சூழ்ந்த பின்னணியில், தனது 15-ஆவது வயதிலேயே மதுரை ஹார்வி மில்லில் அரை வேலைப் பைய னாகச் சேர்ந்தார். உழைப்பின் அடையா ளமாகத் ‘தகர வில்லை’ கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழு வேலைக்கான ‘அட்டை வில்லை’ கிடைத்தது. ஆனால், அந்த உழைப்பு நீடிக்க பிரிட்டிஷ் முதலாளித்துவம் அனு மதிக்கவில்லை. 1942-இல் ஹார்வி மில்லில் போராட்ட அலைகள் எழுந்தன. பிரிட்டிஷ் முதலாளிகள் 26 முக்கிய ஊழியர்க ளைப் பழிவாங்கும் நோக்கில் வேலை யை விட்டு நீக்கினர். உணர்ச்சி எரி மலையாக இருந்த பாலு, முதலாளிகள் தன்னை நீக்குவதற்கு முன்பாகவே தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியேறி, முழுநேரத் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். தெலுங்கானா: துப்பாக்கியைத் தாழ்த்திய அறம் பாலுவின் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம் அவர் ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்து போர்ப் பயிற்சி பெற்று, பின் தெலுங்கானாவுக்கு அனுப்பப்பட்டபோது நிகழ்ந்தது. நிலப்பிரபுத்துவக் கொடுமைக்கு எதி ராகப் போராடிய தெலுங்கானா விவசா யிகளை அடக்கப் பாலுவின் படை ஏவப்பட்டது. ஆனால், வர்க்க உணர்வு மிக்க பாலு, “உழைக்கும் விவசா யிகளைச் சுட முடியாது” என்று மறுத்தார். அதிகாரிகளின் வெறிச் செயல்களுக்குத் துணைபோக மறுத்த அந்த நேர்மைதான் ஆளும் வர்க்கத்தின் கண்ணை உறுத்தியது. பின்னாளில், ஒரு கம்யூனிஸ்டாக இருந்தார் என்பதற்காகவே அவர் மீது பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு, அவர் தூக்குமேடைக்குத் தள்ளப்பட்டார். சிறைச்சாலை பாடிய புரட்சிப் பாடல் மதுரை மத்திய சிறையில் பாலு அடைக்கப்பட்டிருந்தபோது, மரண பயம் அவரிடம் எள்ளளவும் இல்லை. தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகும் அவர் படித்துக்கொண்டும், புரட்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டுமே இருந்தார். “செங்கொடி என்றதுமே ஜீவன் பிறக்குதம்மா... என்னை தூக்கி லிட்டாலும் ஊக்கம் பிறக்குதம்மா” என்ற அவரது பாட்டு சிறைச் சுவர் எங்கும் எதிரொலித்தது. நீதித் தராசு ஓரம் சாய்ந்துவிட்டது என்பதற்குப் பாலுவின் வழக்கினைக் காட்டிலும் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. குற்றம் இழைக்காதவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான் நீதியின் அடிப்படை. ஆனால், பாலு வின் விஷயத்தில் அது ‘பாழ்பனை யாகிப்’ போனது. சிறைக்குள்ளேயே கருப்புப் பட்டை அணிந்து கம்யூனிசத் தோழர்கள் மௌன ஊர்வலம் நடத்தி பாலுவின் தியாகத்திற்குத் தலை வணங்கினர். பிப்ரவரி 22: இறுதி முழக்கம் 1950, பிப்ரவரி 22-ஆம் தேதி காலை 4 மணி. அதிகாரிகள் பாலுவைத் தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியில் இராமநாதபுரம் சதி வழக்கில் கைதாகி இருந்த பேராசிரி யர்கள் எம்.ஜி. நாயரும், ஆவுடையப்ப னும் “பாலு வாழ்க!” என முழங்கினர். உடனே பாலு, “பாலு வாழ்க என்று சொல்லாதீர்கள், ‘புரட்சி ஓங்குக’, ‘கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத்’ என்று கோஷமிடுங்கள்” என்று திருத்தினார். தனது பெயரைக் காட்டிலும் தான் சார்ந்த இயக்கமே பெரிது என்ற அந்தப் பேருள்ளம் வியக்கத்தக்கது. மரணக்குழிக்கு அருகே சென்ற போதும் அவரது குரல் தடுமாறவில்லை. “புரட்சி ஓங்குக, செங்கொடி வாழ்க!” என்ற அந்த இறுதி முழக்கம் பெரிய மதில் சுவர்களைக் கடந்து எதிரொ லித்தது. அந்தச் சத்தம் கேட்டு சிறையில் இருந்த மற்ற தோழர்களும் முஷ்டி உயர்த்தி “தியாகி பாலு நாமம் வாழ்க” என முழக்கமிட்டனர். கருகாத தழல் பாலுவின் உடலைப் பெற்று ஊர்வ லம் நடத்தினால் ஊரே திரண்டுவிடும் என்று அஞ்சிய அரசு, நயவஞ்சகமாகச் சடலத்தை இறக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டது. பிறகு அவரது எலும்பு களைச் சேகரித்து திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அடுத்துள்ள பாறைப் பகுதியில் சிதறவிட்டனர். ஆனால், எலும்புகளைச் சிதறவிட்ட தனால் ஒரு தியாகியின் வரலாற்றைச் சிதைத்துவிட முடியுமா? தோழர் பாலு சாகவில்லை. அவர் விட்டுச் சென்ற செங்கொடியைத் தோளில் தாங்கிக்கொண்டு இன்று லட்சக்கணக்கான வாலிப வெள்ளம் அணிவகுத்து வருகிறது. ஒரு பாலு போனால் என்ன? ஆயிரம் ஆயிரம் பாலுக்கள் மதுரையின் தெருக்களில் இன்று வர்க்கப் போராட்டக் களத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். தியாகி பாலுவின் இரத்தத்தால் நனைந்த அந்தச் செங்கொடிக்கும், அவர் உயி ரைக் கொடுத்துக் காத்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாண்புக்கும் மாசு ஏற்படாத படி காப்போம் என்று நாம் இந்த நாளில் சபதமேற்போம். கட்டுரையாளர் : சிபிஎம் மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்</p>
