ஸ்கேன் இந்தியா -
27 Nov 2025, 3:11 pm

இரட்டை என்ஜின்

தலைநகர் தில்லியில் காற்று மாசு படுமோசமாக மாறியிருக்கிறது. ஒரு நுரையீரல் நிபுணர், தன்னுடைய குடும்பத்தை வேறு ஊருக்குத் தற்காலிகமாக மாற்றி விட்டதாகவும், யாரால் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்ய முடியுமோ, அவர்கள் அப்படியே செய்து விடுங்கள் என்றும் பேட்டி கொடுத்தார். பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு இந்த விவகாரத்தில் படுதோல்வியைத் தழுவியுள்ளது. எதிர்ப்பு தெரிவிப்பதில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்தும் இணைந்துள்ளார். காலையில் 55 நிமிடங்கள் நடைபயிலச் சென்றேன். திரும்பிய பிறகு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது என்று நீதிமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார். பஞ்சாப், அரியானா அரசுகள் மீது பழிபோட பாஜக முயல்கிறது. அரியானாவிலும் பாஜகதான் ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை முடக்கம்

உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, பெரு நொய்டா ஆகிய இரண்டு பகுதிகளிலும் முதல்வர் ஆதித்யநாத் வருகையையொட்டி பல இடங்களில் போக்குவரத்தை முடக்கியுள்ளனர். அவர் வரும் அன்றுதான் போக்குவரத்து மாறுதல்கள் தேவை என்றாலும், வருவதற்கு ஒருநாள் முன்பாகவே சோதனை ஓட்டம் என்ற பெயரில் மக்களை சிரமப்படுத்தியிருக்கிறார்கள். இத்தனைக்கும் முதல்வர் ஆதித்யநாத், ஒரு தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்கவே வந்திருக்கிறார். ஒரு நாள், அதுவும் இரண்டு மணி நேரத்திற்கு முதல்வர் வருகிறார். எங்களை எதற்காக இரண்டு நாட்கள் வதைக்கிறீர்கள் என்று மக்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள். ‘எங்க முதல்வர் சாதாரணமா வருவார், போவார் என்று பாஜகவினர் சொல்வதற்கு இதுதான் பொருளா’ என்று சமூக வலைத்தளங்களில் வறுத்து எடுக்கிறார்கள்.

இரட்டை நெருக்கடி

திரிபுராவின் பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உள்ள தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலில் பாஜக தனித்துக் களமிறங்கும் என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரேவதி திரிபுரா கூறியுள்ளார். பாஜகவும், திப்ரா மோதாவும் இணைந்து திரிபுராவில் ஆட்சி அமைத்துள்ளன. ஆனால், இரண்டிற்கும் இடையில் தொடர் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் மாநில நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளது. இரு தரப்பிற்கும் இடையில் வன்முறை வெறியாட்டங்களும் நடந்துள்ளன. இந்நிலையில்தான் முன்னாள் எம்.பி. ரேவதி, மாவட்டக் கவுன்சில் தேர்தலில் தனித்து நிற்போம் என்று அறிவித்திருக்கிறார். கடந்த முறை திப்ரா மோதாவிடம் தோல்வியுற்றதால், மக்களவைத் தேர்தலில் உடன்பாடும், மாநில அரசில் கூட்டணி ஆட்சியும் ஏற்படுத்திக் கொண்டார்கள். கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான மோதல்கள் தங்களைப் பாதிப்பதால் மக்கள் கொதிப்பில் உள்ளனர்.

இரட்டை பதிவுகள்

வாக்காளர் பட்டியல் மோசடிகள் தொடர்கின்றன. மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு ஆதரவாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பாஜகவினரும், தேர்தல் ஆணையமும் அதை மறுத்தனர். ஆனால், தற்போது பல மோசடிகள் அம்பலமாகியுள்ளன. நான்டெட் மாநகராட்சியின் ஐந்தாவது வார்டில் மொத்தம் 23 ஆயிரத்து 661 வாக்குகள் நகல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் நீட் தேர்வுக்கான பயிற்சி தரப்படும் இரண்டு மையங்களில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். முகவரி இல்லாமல் 3 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். இது குறித்த புகார்கள் அளிக்கப்பட்டும் இதுவரையில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. வழக்கம்போல, எதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்வி பயத்தில் பேசுகிறார்கள் என்று பாஜக பல்லவி பாடிக் கொண்டிருக்கிறது.