ஆட்சி அமைக்கும் முன்பே எல்லை மீறிய த.வெ.க.வினரின் அராஜகங்கள்!
6 May 2026, 10:55 pm

ஆட்சி அமைக்கும் முன்பே எல்லை மீறிய த.வெ.க.வினரின் அராஜகங்கள்!

சென்னை, மே 6 - “வன்முறை கலாச்சாரத்தை ஒழிப்பேன், மக்களுக்குப் பாதுகாவலராக இருப்பேன்” என உறுதியளித்துத் தான், தமிழ்நாட்டில் அதிக இடங்களில் விஜய்-யின் தவெக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தவெக ஆட்சியமைப்பதற்கு முன்பாகவே, அக்கட்சியினரின் அராஜகங்கள் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சிறுமிக்குப் பாலியல் தொல்லை

சென்னை காசிமேடு பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் தவெக வட்டச் செயலாளர் தினேஷ். இது குறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

வாளால் ‘கேக்’ வெட்டிய எம்.எல்.ஏ

சென்னை ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்று இன்னும் சட்டமன்ற உறுப்பினரான பதவிகூட ஏற்காத தவெகவின் விஜய் தாமு, ரவுடி போல வாளால் கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அருகிலிருந்த நிர்வாகி ஒருவர், ‘இப்படி நடந்துகொள்ளக் கூடாது’ எனக் கூறியும் அவரது பேச்சைப் பொருட்படுத்தாமல் செயல்பட்டுள்ளார். ‘இவருக்காக நாம் வாக்களித்தோமா?’ என அந்தத் தொகுதி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வாளால் கேக் வெட்டிய தவெக எம்எல்ஏ விஜய் தாமுவை கைது செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

விஜய் வெற்றி பெற்றதை அடுத்து, இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கொட்டும் மழையில் காரின் வெளியே தொங்கியபடி விசில் அடித்து அங்கிருந்த பயணிகளுக்கு தவெக-வினர் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டதாக 12 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. தவெக துண்டு அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் மூன்று இளம் பெண்கள் அதிவேகமாக சென்றனர். அவர்களை போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்தியபோது, அந்தப் போக்குவரத்துக் காவலரையே தகாத வார்த்தைகளில் பேசி இளம்பெண்கள் மிரட்டியதும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களிலும் அரங்கேறி வருகிறது.