தமிழ்த்தாய் வாழ்த்தில் அலட்சியம்; ஜோதிடருக்கு அரசுப் பதவி
12 May 2026, 11:47 pm

தமிழ்த்தாய் வாழ்த்தில் அலட்சியம்; ஜோதிடருக்கு அரசுப் பதவி

தமுஎகச விமர்சனம்

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு, தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்தது மற்றும் ஜோதிடரை அரசுப் பதவியில் நியமித்தது ஆகிய நடவடிக்கைகளுக்கு தமுஎகச கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவமதிப்பு

இது குறித்துத் தமுஎகச தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முறையாக நிகழ்வின் தொடக்கத்தில் பாடப்படாமல் மூன்றாவதாகப் பாடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். “நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவதே சரியான மரபு. ஆனால், இந்த நன்மரபுக்கு மாறாகச் செயல்பாடுகள் அமைந்ததோடு, தேசிய கீதத்திற்குப் பிறகு முதல்வர் உரை தொடர்ந்ததும் ஏற்புடையதல்ல” என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், மத ஒருமைப்பாட்டுக்கு எதிரான ‘வந்தே மாதரம்’ பாடல் நிகழ்வின் தொடக்கத்திலும் இறுதியிலும் என இருமுறை பாடப்பட்டது குறித்துப் புதிய அரசு தமிழ் மக்களிடம் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசியல் சாசனத்திற்கு எதிரான ஜோதிடர் நியமனம்

முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ‘ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்’ என்னும் ஜோதிடரை நியமித்துள்ள அரசின் முடிவையும் தமுஎகச வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 51ஏ பிரிவு, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகக் கூறும் நிலையில், மக்களின் வரிப்பணத்தில் ஒரு ஜோதிடருக்கு உயர் பொறுப்பு வழங்குவது அரசியல் சாசனத்தையே கேலிக்குள்ளாக்கும் செயலாகும் என்று தமுஎகச கூறியுள்ளது.

“கடந்த கால அரசுகள் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றவில்லையே தவிர, ஒருபோதும் மூடநம்பிக்கையை வளர்ப்பவர்களை அதிகாரப்பூர்வமாக உயர் பொறுப்புகளில் நியமித்ததில்லை. முதல்வர் விஜய் தான் ஒரு மதச்சார்பற்ற அரசை நடத்துவோம் என்று அளித்த வாக்குறுதிக்கு இந்த நடவடிக்கை முற்றிலும் எதிராக உள்ளது. இது அவருக்கு வாக்களித்த மக்களுக்கும் ஆதரவளித்த கட்சிகளுக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வரின் தனிப்பட்ட நம்பிக்கைகள் ஒருபோதும் அரசின் செயல்பாடுகளில் வெளிப்படக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள தமுஎகச, இந்தச் ஜோதிடர் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அறிவியல் மனப்பான்மையைப் பாதுகாத்திட முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.