புதிய அரசின் முதல் பட்ஜெட்: மாற்றமா? தொடர்ச்சியா? - க.கனகராஜ்
7 Aug 2026, 10:15 pm

புதிய அரசின் முதல் பட்ஜெட்: மாற்றமா? தொடர்ச்சியா? - க.கனகராஜ்

மக்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையில், 2026-27ஆம் நிதி ஆண்டிற்கான தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரிடையே இது விவாதங்களையும் கலவையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

வருவாயும் செலவும்: மாறாத கட்டமைப்பும் சவால்களும்

எந்தவொரு அரசாங்கத்தின் பட்ஜெட்டையும் ஆராயும்போது, வரவு மற்றும் செலவு குறித்த கணக்குகளே முதலிடம் பெறுகின்றன. குறிப்பாக, 2017 ஜூலை மாதத்திற்குப் பிறகு ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதன் விளைவாகமாநிலங்களின் சொந்த வருவாய் ஈட்டும் திறன் பெரிதும்வரையறுக்கப்பட்டதாக மாறிவிட்டது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய், ஒன்றிய அரசிலிருந்து வரக்கூடியபங்களிப்பு மற்றும் கடன் வாங்கும் திறன் ஆகியவையே அரசின் ஒட்டுமொத்த நிதிநிலையைத் தீர்மானிக்கின்றன.

இந்த பட்ஜெட்டில் குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய மூன்று பிரதான பிரிவினரை அரசு இலக்காகக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், நடைமுறையில் பல முக்கிய அம்சங்கள் விடுபட்டுள்ளதே நிஜம். மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும்வட்டிச் சுமை போன்ற காரணங்களைக் காட்டி, மக்களின்அடிப்படைத் தேவைகளுக்கான நலத்திட்டங்கள் சுருக்கப்படலாமா என்ற கேள்வி இங்கு தீவிரமாக எழுப்பப்படுகிறது. உலகளாவிய நிதி நிறுவனங்களின் வழிகாட்டுதல்களும், கடன் சுமை குறித்த வாதங்களும் எளிய மக்களின் நலன்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நாம்உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

இளைஞர்களும் வேலைவாய்ப்பும்: மிகப்பெரிய கேள்விக்குறி

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது குறித்த திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் மிகக் குறைவு என்றே கூற வேண்டும். 20,000 பேருக்கு நேரடிப் பயிற்சிஅளிக்கப்படும் என்று மேலோட்டமாகக் கூறப்பட்டுள்ளதே தவிர, பெருமளவில் தேங்கிக் கிடக்கும் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்தவொரு உறுதியான அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை. அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அதற்கான வெளிப்படையான அறிவிப்புகளோ அல்லதுதேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட ரூ.4,000 உதவித்தொகை போன்ற திட்டங்களோ இதில் அறவே இல்லை.

இன்றைய இளைஞர்களின் பிரதான எதிர்பார்ப்பான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான முறையான கொள்கை வடிவமைப்பு இதில்விடுபட்டுள்ளது. ‘ஸ்கில் டெவலப்மெண்ட்’ என்ற பெயரில் தற்காலிகத் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றனவே தவிர, நிரந்தரப் பணியிடங்களை உருவாக்குவதற்கானஉருப்படியான எந்தவொரு திட்டமும் இல்லை. அதிகதிறன் பெற்றிருந்தாலும், அதற்கேற்ற தகுதியான ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை தொடர்வது இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கான நலத்திட்டங்களும் முரண்பாடுகளும்

பெண்களுக்கான நலத்திட்டங்களில் சில குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் இருந்தாலும், பல முக்கிய வாக்குறுதிகள் இதில் கைவிடப்பட்டுள்ளன. தாய்மாமன் சீர், பட்டுப்புடவை போன்ற அறிவிப்புகள் இருந்தாலும், தேர்தல்நேரத்தில் பெரிதும் பேசப்பட்ட நேரடி நிதி உதவிதொடர்பான வாக்குறுதிகளில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அரசு மற்றும் அமைப்புசார் துறைகளில் பணிபுரியும் பெண்களின் நலனும், பாதுகாப்பும் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. குறிப்பாக, செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் போன்றோரின் நீண்டகாலக் கோரிக்கைகள் மற்றும் பணி நிரந்தரம் குறித்த எந்தவிதமான நேர்மறையான அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது சமூக நீதிக்குப் புறம்பானதாகும். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான நேரடி மானியத் திட்டங்கள்காலத்திற்கேற்ப விரிவுபடுத்தப்பட வேண்டும்.

கல்வியும் சுகாதாரமும்: ஒதுக்கீட்டுச் சுருக்கம்

பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைக்கப்பட்டுள்ளதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 10,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்று கூறப்படும் ‘சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ்’ போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மிகக் குறைவு என்பதால், அது எந்தளவிற்கு நடைமுறை சாத்தியம் என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு நாளின் தேவையைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத சொற்ப நிதியைக் கொண்டு பள்ளிகளின் கட்டமைப்பை முழுமையாக மாற்றுவது சாத்தியமற்றது.

அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்காக 40 ஓய்வுஇல்லங்கள் மற்றும் 1,000 மொபைல் கிளினிக்குகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஒரு வரவேற்கத்தக்க அம்சமாகும். கிராமப்புற மக்களின் சுகாதாரத்தைப் பேண இது பெரிதும் உதவியாக இருக்கும். இருப்பினும், அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்குப் பதிலாக தனியார் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பது முறையானதல்ல. அரசு மருத்துவமனைகளில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் போன்றவசதிகள் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

தனியார்மயமாக்கலும் பிபிபி மாடலும்

இந்த பட்ஜெட்டில் மிகவும் ஆபத்தான மற்றும் தீவிர விவாதத்திற்குரிய ஒரு போக்காக முன் வந்திருப்பது பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையின் ஊடுருவலாகும். மாணவர் விடுதி கட்டமைப்பு, போக்குவரத்துத் துறை (GCC மாடல்), மற்றும் மின்சாரத் துறையில் டிரான்ஸ்மிஷன் லைன்களைத் தனியாருக்கு வழங்குவது போன்ற நடவடிக்கைகள் கடுமையானவிளைவுகளை ஏற்படுத்தும்.

உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் அழுத்தத்தால் கொண்டுவரப்படும் இத்தகைய தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள், எதிர்காலத்தில்சாதாரண மக்களுக்குச் சேவைகளை வழங்குவதில் பெரும் தடையை ஏற்படுத்தும். பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைப்பதாகக் கூறிக்கொண்டு, அவைகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது ஏழை எளியமக்களுக்கு எதிரானது. போக்குவரத்துத் துறை போன்றஅத்தியாவசிய சேவைகள் லாப நோக்கில் இயக்கப்படாமல், மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட வேண்டும்.

தொழிலாளர் நலனும் எம்எஸ்எம்இ துறையும்

தமிழ்நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் (எம்எஸ்எம்இ) துறை மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு பட்ஜெட்டில் பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சிவகாசி போன்ற பகுதிகளில் நிகழும் கொடூர விபத்துகளில்தொழிலாளர்கள் படுகாயமடைவதும், பரிதாபமாக உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற விபத்துகளில் பாதிக்கப்படும் தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

குறைந்தபட்ச கூலி போன்ற அடிப்படைக் கோரிக்கைகள் மாநிலம் முழுவதும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். தொழில்துறை கொள்கை (Industrial Policy) வெளியிடும்போது, அதனுடன் சேர்த்துதொழிலாளர் நலக் கொள்கையையும் (Labour Policy) அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை பலஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டாலும், அது ஆட்சியாளர்களின் கவனத்திற்குச் செல்வதில்லை. வெளிமாநிலத் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலைத் தடுத்து, அவர்களுக்கான சட்டப்பாதுகாப்பை வழங்குவதுஅரசின் கடமையாகும்.

கடன் சுமை குறித்த அச்சமும் எதார்த்தமும்

பட்ஜெட் தாக்கலின்போது ‘கடன் அதிகரித்துவிட்டது, நிதிப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது’ என்ற வார்த்தைகள் தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் ஆளும்வர்க்கத்தின் தரப்பில் முன் வைக்கப்படுகின்றன. ஆனால், பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படும் பலலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வரிச் சலுகைகளும், மிகக் குறைந்த விலையில் நிலங்கள் மற்றும் மின்சாரத்தை வழங்குவதும் தாராளமாக நடக்கிறது.சாதாரண மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தும்போது மட்டும் கடனைப் பற்றிப் பேசுவதும், மக்களைஅச்சுறுத்துவதும் எந்தவிதத்தில் நியாயம்? கடன் சுமையை மட்டுமே காரணம்காட்டி மக்கள் நலத் திட்டங்களைசுருக்கக் கூடாது.

உண்மையான பொருளாதாரச் சமநிலையை எட்ட வேண்டுமெனில், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரிகளை உயர்த்துவதே சரியான தீர்வாக இருக்க முடியும். பெரிய நிறுவனங்களின் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கைகேட்கப்பட்டாலும், எங்குமே அதற்கான முறையாவெளிப்படைத்தன்மை வழங்கப்படுவதில்லை.

பெரிய மாற்றம் இல்லை!

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த பட்ஜெட் என்பது முந்தைய அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் தொடர்ச்சியே தவிர, பெரிய அளவிலான மக்கள் நலன்சார்ந்த கொள்கை மாற்றங்களைக் கொண்டதாக இல்லை. தேர்தல் வாக்குறுதிகளில் அளிக்கப்பட்ட பல முக்கியமான வாக்குறுதிகள் கைவிடப்பட்டுள்ளன அல்லது மௌனமாகக் கடந்து செல்லப்பட்டுள்ளன.

ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க, அரசின் திட்டங்கள் வெறும்கண்துடைப்பு அறிவிப்புகளாக இல்லாமல், உண்மையான பொருளாதாரச் சமத்துவத்தை நோக்கிப் பயணிப்பதாகஇருக்க வேண்டும். பொதுத்துறைகளைப் பாதுகாப்பது, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்வது, தொழிலாளர்உரிமைகளை நிலைநாட்டுவது போன்ற அடிப்படையான கொள்கை மாற்றங்களை நோக்கியே தமிழகத்தின் எதிர்காலம் பயணிக்க வேண்டும் என்பதே அனைவரின்எதிர்பார்ப்பாகும். ஒட்டுமொத்த சமூக சமத்துவத்தை நோக்கிய பயணம் தொடர வேண்டியது அவசியமாகும்.