நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசு அநீதி; இருமொழிக் கொள்கை தொடரும்! தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை!
18 Jun 2026, 10:02 pm

நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசு அநீதி; இருமொழிக் கொள்கை தொடரும்! தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை!

சென்னை, ஜூன் 19- நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு அநீதி; இருமொழிக் கொள்கை தொடரும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் தவெக அர சின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் ஆளுநர் உரையில் இடம் பெற்றன.

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற 17-ஆவது சட்டப்பேர வைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக்கழகம் (தவெக) ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அரசின் முதலாவது முழுமை யான சட்டமன்றக் கூட்டத்தொடர் வியாழக்கிழமை (ஜூன் 18) ஆளு நர் உரையுடன் தொடங்கியது.

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சட்டமன்றத்தில் 39 நிமிடங்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தை, பேரவைத் தலைவர் ஜே.டி.சி. பிர பாகர் 30 நிமிடங்களில் வாசித்தார். முந்தைய ஆட்சிக் காலங்களில் நில விய ஆளுநர்-அரசு இடையேயான மோதல் போக்குகளுக்கு மாறாக, தற்போதைய ஆளுநர் அர்லேகர் அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு களில் எவ்வித மாற்றமும் செய்யா மல், ஒன்றிய அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களையும் அப்படியே வாசித்தது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த தாகப் பார்க்கப்படுகிறது.

ஆளுநர் தனது உரையை பெரியார், அண்ணா மற்றும் அம்பேத் கர் ஆகியோரின் கொள்கை வரி களை மேற்கோள் காட்டித் தொடங்கி னார். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் பணநாயகத்தை ஒழித்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக வரலாற்றுப் புரட்சியுடன் ஆட்சி அமைத்திருப்பதாகப் பாராட்டிய ஆளுநர், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற தத்துவத்தின் இலக்கணமாக இந்த அரசு திகழ்கிறது என்றார்.

ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கும் நிதிப்பகிர்வில் அநீதி இழைப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இதற்கு எதிராக சட்டமன்ற த்தில் தீர்மானம் நிறைவேற்றப் படுவதோடு, உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட ரீதியாகப் போராட வல்லுநர்கள் குழு அமைக்கப் படும் என்றார். மேலும், தமிழ்நாட் டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்றும், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ இந்த அரசு கடுமையாக எதிர்க்கும் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

மாநிலத்தின் பல்வேறு துறைக ளின் நிலை மற்றும் புதிய அரசின் கொள்கை முடிவுகள் குறித்து ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. கடன் சுமையும் நிதி நெருக்கடியும்

• கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநி லத்தின் கடன் அளவு இரண்டு மடங்காக உயர்ந்து ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GSDP) 28.3 விழுக்காடாகும். இதன் காரண மாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிநபர் மீதும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமை ஏறியுள்ளது.

• மாநிலத்தின் வருவாய்ப் பற் றாக்குறை 2024-25 நிதியாண்டில் 48,840 கோடி ரூபாயாக இருந் தது, 2025-26 நிதியாண்டில் 78,324 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 விழுக்காடாகும்.

• மொத்த வருவாய் வரவுகளில் கிட்டத்தட்ட 23 விழுக்காடு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படு கிறது. கடந்த கால அரசின் தவ றான நிதி நிர்வாகம், திட்டமிட்ட ஊழல் காரணமாக வரி வருவாய் 5.93 விழுக்காட்டிலிருந்து 5.45 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

2. வருவாய் இழப்பைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள்

• தடம்மாறிச் சென்ற அரசு வரு வாயை முறைப்படுத்த மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடு தல் சிறப்புக் கட்டணம் அண்மை யில் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு கருவூலத்திற்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் வரவுஎதிர்பார்க்கப்படுகிறது.

• அரசுத் துறைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட சுமார் 70 ஆலோச கர்கள் மனிதவள மேலாண்மைத் துறையின் ஆய்வின்படி நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தேவையற்ற அரசுச் செலவீனங்கள் குறைக்கப்படுவதோடு, காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் தகுதிவாய்ந்த இளைஞர்களைக் கொண்டு நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

3. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்

• கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இரு மாதங்களுக்குள் வீடுகளுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு 1,730 கோடி ரூபாய் செலவாகிறது. நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும்.

• பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் ஓய்வு பெற்று, பலன்கள் கிடைக்காமல் தவித்த 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு, இடைக்கால நிவாரணமாகக் கடைசி அடிப்படைச் சம்பளத்தில் 30 விழுக்காடு அல்லது ரூ.10,000 (எது அதிகமோ அது) மற்றும் 60 விழுக்காடு அகவிலைப்படியுடன் மாதந்தோறும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 4. கல்வி மற்றும் மொழிக் கொள்கை

• தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும். தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ அரசு கடுமையாக எதிர்க்கும். • மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் வழங்க வேண்டிய 3,458 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க முடியும் என்ற ஒன்றிய அரசின் பாரபட்சமான நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது.

• நீட் தேர்வு திணிப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற சிக்கல்களுக்குக் தீர்வு காணும் வகையில், கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

• சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கிளைகளில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கவும், உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்கவும் ஒன்றிய அரசு வலியுறுத்தப்படும். 5. போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நிர்வாகத் தூய்மை

• தமிழ்நாட்டில் போதை கலாச்சாரத்தை வேரோடு ஒழிக்க 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.

• நிர்வாக அமைப்பில் மலிந்து கிடக்கும் ஊழலை அறுக்க, அனைத்துத் துறை சார்ந்த கொள்முதல்களும் ஒப்பந்தப் புள்ளிகளும் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். இடைத்தரகர்களின் தலையீடு முற்றிலும் ஒழிக்கப்படும்.

6. சமூக நீதியும் சாதிவாரி கணக்கெடுப்பும்

• தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

• ஒன்றிய அரசு நடத்தும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பையும் விரைந்து முடிக்க வலியுறுத்தப்படும். அதன் பின்னர் தமிழ்நாடு அரசு தனியாகச் சமூக நீதி கணக்காய்வினை நடத்தும். சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநாட்டும் மதச்சார்பற்ற அரசாக இது திகழும்.

7. நீர்வளப் பாதுகாப்பு

• கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதையும், கேரள அரசு முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதையும் தடுக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ மற்றும் தூதரக நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும்.

8. தொழில் வளர்ச்சி மற்றும் சுற்றுலாக் கொள்கை

• உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும். 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யும் அல்லது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்க ளுக்கு விரைந்து ஒற்றைச் சாளர அனுமதியளிக்கப்படும்.

• கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட தொல்லியல் தளங்களில் ஆராய்ச்சிகள் தொடரும். கீழடி மற்றும் ஆதிச்சநல்லூருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சி மேற்கொள்ளப்படும். பண்பாட்டுத் தலங்களில் ‘மிகைமை மற்றும் மெய்நிகர் தோற்றம்’ (AR/VR) தொழில்நுட்பம் மூலம் தமிழர் நாகரிகம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு விரிவான சுற்றுலாக் கொள்கை வகுக்கப்படும்.

• 2031-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவதே அரசின் தாரக மந்திரம் ஆகும்.

கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் “வாயத் திறங்க சிஎம்”, “திரையில் HERO இல்ல, தரையில் ZERO” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் சட்டமன்ற வளாகத்தில் தவெக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மின்வெட்டு, பாலியல் குற்றங்கள் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரங்களை அவையில் எழுப்பப் போவதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.

தேசிய கீதம் சர்ச்சை

தமிழ்நாடு சட்டமன்ற மரபுப்படி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படுவது வழக்கம். ஆனால், இன்றைய கூட்டத்தில் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, கூட்டத்தின் நிறைவிலும் மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இது மரபு மீறல் என்று சர்ச்சை எழுந்த நிலையில், பேரவைத் தலைவர் ஜே.டி.சி. பிரபாகர் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர், “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளித்து அது முதலில் பாடப்பட்டுவிட்டது, தேசிய கீதத்தை இரண்டு முறை இசைத்ததில் எந்தத் தவறும் முரணும் இல்லை” என விளக்கம் அளித்தனர்.

ஜூன் 23 வரை பேரவைக் கூட்டம்

இக்கூட்டத்தொடர் ஜூன் 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். ஜூன் 19 அன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் தொடங்கும். சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின் ஜூன் 22 அன்றும் விவாதம் தொடர்ந்து, ஜூன் 23 அன்று விவாதங்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலளித்து உரையாற்றுவார்.