புதுகை பூபாளம் குழுவினர் மீதான அடக்குமுறை: தமுஎகச கண்டனம்
25 Sept 2026, 10:17 pm

புதுகை பூபாளம் குழுவினர் மீதான அடக்குமுறை: தமுஎகச கண்டனம்

சென்னை, செப். 25 –கருத்துரிமையை முடக்கும் நோக்கில் புதுகை பூபாளம் கலைக் குழுவினரைக் குறிவைத்து காவல்துறை மூலமாக நிகழ்ச்சியை நிறுத்த முயன்ற செயலுக்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமுஎகசவின் மதிப்புமிக்கக் கலைஞர்களான பூபாளம் பிரகதீஸ்வரன் மற்றும் செந்தில் ஆகியோர் ‘நையாண்டி தர்பார்’ மூலம் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் அதிகார முகமூடிகளைக் கிழித்தெறிந்தும் முற்போக்குச் சிந்தனைகளை விதைத்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்க அதிபர்கள் முதல் இந்தியப் பிரதமர்கள் வரை பலரையும் இவர்கள் பகடி செய்துள்ளநிலையில், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இராமேஸ்வரத்தில் நடைபெற்ற கலை இலக்கிய இரவின்போது சீருடை அணிந்த காவலர்கள் மேடைக்கு வந்து, “முதல்வரை விமர்சிக்கக் கூடாது, நிகழ்ச்சியை நிறுத்துங்கள்” என்று அராஜகம் செய்துள்ளனர். கூடியிருந்தவர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் திரும்பிச் சென்றதாகவும்,தவெகவினர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கலையைக்கூட ரசிக்க முடியாத கும்பல் மனப்பான்மைக்கு ஆளும் கட்சியினர் ஆளாகியிருப்பது கண்டனத்திற்குரியது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கருத்துரிமைக்கு எதிரான இந்நடவடிக்கையைக் கண்டிப்பதோடு, இதற்கு எதிராக அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என தமுஎகச மாநிலக்குழு கேட்டுக்கொண்டுஉள்ளது.