திரிபுரா டி.ஜி.பி அனுராக் தங்கர் அலுவலகத்தில் சடலமாகக் கண்டெடுப்பு: நீதி விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்
22 Jul 2026, 8:47 pm

திரிபுரா டி.ஜி.பி அனுராக் தங்கர் அலுவலகத்தில் சடலமாகக் கண்டெடுப்பு: நீதி விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்

அகர்தலா, ஜூலை 22 - திரிபுரா மாநில காவல்துறை இயக்குநர் அனுராக் தங்கர் (52), அகர்தலாவில் உள்ள மாநில காவல்துறைத் தலைமை அலுவலகத்தில் தனது அதிகாரப்பூர்வ அறையின் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1994-பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், திங்கட்கிழமை (ஜூலை 20) அன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டார்.

அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரை உடனடியாக அகர்தலாவில் உள்ள கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுமார் 48 நிமிடங்கள் தீவிர முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரி வித்து, அவர் மதியம் 12:48 மணியளவில் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதனை யடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாணயமான அதிகாரியின் திடீர் மறைவு

கடந்த 2025 மே மாதம் டி.ஜி.பி-யாகப் பொறுப்பேற்ற அனுராக் தங்கர், சி.பி.ஐ-யில் பணியாற்றிய காலத்தில் நீரவ் மோடி முறைகேடு வழக்கு போன்ற உயர் மட்ட வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக திரிபுராவில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்து வந்தார். அவரது தலைமையின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பல அதிகாரிகளையும் அவர் பணியிடை நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.ஏ. பேபி வலியுறுத்தல்

அனுராக் தங்கரின் மறைவு குறித்துக் கடுமையான அதிர்ச்சியை வெளியிட்டுள்ள சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, இது குறித்து விரிவான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“திரிபுரா டி.ஜி.பி அனுராக் தங்கர் தனது அலுவலகத்தில் இறந்த நிலையில் கண்டறிந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது! இது வேறு மாநிலமாக இருந்திருந்தால், சட்டம்-ஒழுங்கு முழுமை யாகச் சீரழிந்துவிட்டதாகக் கூறி பா.ஜ.க ஊடகங்கள் மூலம் பெரும் கூச்சலிட்டி ருக்கும். ஆனால், பா.ஜ.க ஆளும் மாநிலம் என்பதால் அங்கு முழு மௌனம் நிலவுகிறது.

கடந்த சில மாதங்களாக தங்கரின் தீவிர நடவடிக்கைகளால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ஊழல் அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திரிபுராவில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அவர் முயன்றார். எனவே, திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் நேரடி மேற்பார்வையில் உடனடியாக நீதி விசாரணை நடத்தப்பட்டு, அவரது மறைவுக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.