திருச்சி விரைவு செய்திகள்
16 Jun 2026, 11:09 pm

அறந்தாங்கியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அறந்தாங்கி, ஜுன் 16- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், ஜுன் 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10:30 மணியளவில் மின்நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் புதுக்கோட்டை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. அதுசமயம் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு, செயற்பொறியாளர் குமாரவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விபத்து நிகழும் பகுதிகளில் வேகத்தடைகளை அமைக்க நடவடிக்கை தேவை

அரியலூர், ஜுன் 15- அரியலூர் நகரத்தில், விபத்துகள் நிகழும் சாலைப் பகுதிகளில் வேகத் தடைகளை அமைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினியிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கட்கிழமை மனு அளித்தனர். அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலர் டி. தண்டபாணி, பொருளாளர் ஜி. ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் து. பாண்டியன், ஒன்றியக் குழு உறுப்பினர் பிச்சைப்பிள்ளை, உஞ்சினி முருகன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், அரியலூர் அண்ணாசிலை நான்கு சாலை சந்திப்பு பகுதி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருசுக்குட்டை கீழ் பகுதி சாலை, கோல்டன் மருத்துவமனை, அரசு கலைக் கல்லூரி, ரயில்நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும். உஞ்சினி கிராமத்தில் அடிக்கடி ஏற்பட்டு வரும் குறைந்த மின் அழுத்தத்தினால் மின்சாதனப் பொருள்கள் பழுதாகியுள்ளன. எனவே சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகமங்கலத்தில் குடிநீர் பம்பு ஆபரேட்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ். பிச்சைப்பிள்ளைக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையான ரூ.58,460-ஐ உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஓட்டுநர் வெட்டிக் கொலை

தஞ்சாவூர், ஜுன் 16- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே, வீட்டுக்குள் தனியாக இருந்த லாரி ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலத்திருப்பூந்துருத்தி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் எஸ். இளங்குமரன் (41). இவரது மனைவி ரதியா(35) திருவையாறிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை ரதியா வேலைக்கும், மகன் ரத்தன்(12), மகள் யாழினி(6) பள்ளிக்கும் சென்றதால், வீட்டில் இளங்குமரன் தனியாக இருந்தார். மாலையில் ரத்தன் வீட்டுக்கு திரும்பியபோது, முன்பக்கக் கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், பின்புறம் சென்றபோது கதவு திறந்து கிடந்ததுடன், வீட்டுக்குள் இளங்குமரன் அரிவாளால் வெட்டப்பட்டு, உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் அருள்மொழி அரசு (திருவையாறு), ஆர்.சோமசுந்தரம் (தஞ்சாவூர் நகரம்), நடுக்காவேரி காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து, நடுக்காவேரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சையிலிருந்து, கிருஷ்ணகிரிக்கு 2,000 டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர், ஜுன் 16- தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல், பொது விநியோகத் திட்டத்திற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 2,000 டன் நெல் மூட்டைகள், லாரிகள் மூலம் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர், அங்கிருந்து 42 சரக்கு ரயில் பெட்டிகளில் (வேகன்கள்) ஏற்றி, அரவை பணிக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், ஜுன் 16- தஞ்சாவூர் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக, 2025-2026 ஆம் ஆண்டிற்கான கலை விருதுகள் வழங்கப்பட உள்ளன. இயல், இசை, நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு வயது அடிப்படையில் `கலை இளமணி’ முதல் `கலை முதுமணி’ வரை விருதுகள் வழங்கப்படவுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள கலைஞர்கள், வயது மற்றும் கலைத்திறன் சான்றிதழ்களுடன், ஜூலை 30-க்குள் விண்ணப்பங்களை உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் - 613 403 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே தேசிய, மாநில அல்லது மாவட்ட விருதுகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் இரா.ரேவதி தெரிவித்துள்ளார்.

விவசாய நிலங்களில் சோலார் நிறுவனம் அமைக்க சிபிஎம் எதிர்ப்பு

புதுக்கோட்டை, ஜுன் 16- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே, காலம் காலமாக விவசாயம் செய்துவரும் நிலங்களில், தனியார் சோலார் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணாவிடம் அளித்துள்ள மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகாவில் உள்ள சங்கரன்பட்டி, மருதம்பட்டி கிராமங்களில் விவசாய நிலங்களில் காலம் காலமாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தனியார் பெயரில் இருந்து வந்த இந்த நிலத்திற்கு குறிப்பிட்ட காலம் வரை விவசாயிகள் வாரம் கொடுத்து வந்துள்ளனர். காலப்போக்கில் வாரமும் நிறுத்தப்பட்டு முழுக்க, முழுக்க இவர்களின் அனுபவத்திலேயே குடியிருப்புகளும் விவசாய நிலங்களும் இருந்து வருகின்றன. இந்நிலையில், மேற்படி இடங்களில் தனியார் நிறுவனம் ஒன்று, சோலார் நிறுவனம் அமைக்க முயற்சித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இங்குள்ள 72 வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அரசின் தொலைக்காட்சிப் பெட்டி அறை மற்றும் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க அந்த நிறுவனம் அடியாட்களை வைத்து முயற்சிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாகத் தலையிட்டு தனியார் சோலார் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்துவதோடு, காலம் காலமாக விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்கு உழவடைப் பட்டா கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அறந்தாங்கி அரசு கல்லூரியில் 2 ஆம் கட்ட கலந்தாய்வுக்கு அழைப்பு

அறந்தாங்கி, ஜுன் 16- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இளம் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்வதற்காக www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த மாணவ - மாணவியருக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜுன் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அறந்தாங்கி தாலுகா பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜுன் 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பி.எஸ்.சி. கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் கணிதவியல் ஆகிய அறிவியல் பாடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வும், தொடர்ந்து, ஜுன் 24 ஆம் தேதி (புதன்கிழமை) பிஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பிகாம்., வணிகவியல், பிபிஏ., நிர்வாகவியல் ஆகிய கலைப் பாடப்பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட கலந்தாய்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட தேதிகளில் காலை 10 மணி முதல் நடைபெறும். இக்கலந்தாய்வில் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, அவரவர்களுக்கு உரிய அலைபேசி எண்களுக்கு, கல்லூரிக் கல்வித்துறை தர வரிசைப் பட்டியலின்படி, விரைவில் குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். அவ்வாறு குறுஞ்செய்தி வரப்பெற்ற மாணவ - மாணவியர் தவறாமல் பங்கேற்க வேண்டும். மேலும், கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் தங்களின் இணைய தள விண்ணப்பப் படிவத்துடன், தங்களின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், ஆதார் அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ், இனச்சான்று, வருமானச்சான்று, புகைப்படங்கள்-5, வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களின் அசல்கள் மற்றும் 5 நகல்களையும் எடுத்து வரவேண்டும் என கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அறிவித்துள்ளார்.

பணியாளர்களின் பி.எப். தொகையை கணக்கில் செலுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு மனு

பெரம்பலூர், ஜுன் 16- பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரியிடம் சிஐடியு சார்பில் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “பெரம்பலூர் நகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஈ.பி.எப் தொகை, ஊழியர்களின் கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலியை வழங்காமல் ஒப்பந்தக்காரர் நிர்ணித்த தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலி வழங்கிடவும், அவர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்த EPF தொகையை முறையாக கணக்கில் செலுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், நிர்வாகம் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கையாண்டு வருவதால், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர். நிகழ்வின்போது, சிஐடியு நிர்வாகிகள் உடனிருந்தனர்.

குடிநீர், மின் இணைப்பு வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

அரியலூர், ஜுன் 16- அரியலூர் சடையப்பர் தெரு மற்றும் கோ.சி. நகரவாசிகள், தங்களது பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் மின் இணைப்புகளை வழங்கக் கோரி, ஆட்சியர் ந.மிருணாளினியிடம், அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், “இப்பகுதியில் உள்ள தெருவில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு அனுபந்தம் பட்டா வழங்கப்பட்டது. மேலும் கடந்த 6.10.2020 ஆண்டு 300 குடும்பத்தினருக்கு மனை வரிப்பட்டாவும் வழங்கப்பட்டது. அதனை வைத்துக் கொண்டு, குடிநீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது கேட்டால் இந்த பட்டா செல்லாது எனவும், ஏற்கனவே வாங்கிய பட்டாக்கள் செல்லாது எனவும் நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். எனவே, மேற்கண்ட தெரு வாசிகளுக்கு உரிய குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.

2028-இல் கும்பகோணம் மகாமகம்: முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை

கும்பகோணம், ஜுன் 16- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமகம் விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் இரா.ரேவதி தலைமையில், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், உதவி ஆட்சியர் பயிற்சி சுபாஷ் கார்த்திக், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் வி.மூ. திருமலை, மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா, துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், வட்டாட்சியர் பூங்கொடி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தார்ச் சாலை அமைக்க மக்கள் கோரிக்கை

மன்னார்குடி, ஜுன் 16- மன்னார்குடி வடசேரி சாலையில் உள்ள சிராஜ் நகரின் முதல் தெருவை பக்கா சாலையாக மாற்றுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைக் கொண்டு இதற்கு பிறகு 1920 ல் உருவான அடுத்த தெருவை பக்கா சாலையாக மாற்றினார்கள். இது பற்றி சிராஜ் முதல் நகரில் வசித்து வரும் முன்னாள் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கே. அகோரம் கூறும்போது, “இப்போதிருக்கும் எங்கள் தெருவின் மண் சாலையை தெருவாசிகளே சேர்ந்து ஒவ்வொரு வீடும் நிதியளித்து செலவு செய்து போட்டதுதான். மழைக் காலங்களில் வடக்கு தெற்கு ஆக செல்லும் வடசேரி சாலையில் இருந்து மேற்கு கிழக்காக உள்ள எங்கள் தெருவிற்குள் வெள்ளமாக தண்ணீர் பாய்ந்து ஓடும். 2023-2024 நிதியாண்டில் இந்த மண் சாலையை பக்கா சிலையாக போடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நிதியை எங்களுக்கு பின்னால் உருவான தெருவை பேவர் பிளாக் சாலையாக மாற்றுவதற்கு பயன்படுத்திக்கொண்டார்கள். எங்கள் தெருவையும் பின்னால் உள்ள குறுக்கு ரோட்டையும் விட்டுவிட்டார்கள். இதை, மன்னார்குடி நகர நிர்வாகம்தான் செய்தது. எங்கள் நகருக்கு பின்னால் சமீபத்தில் உருவான அதாவது 2020-ல் உருவான முத்து நகரின் ரியல் எஸ்டேட் வணிகம் செழிக்க ஆதாயத்திற்காகவே இவ்வாறு செய்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இப்போது நகராட்சியில் போய் சாலை வேண்டும் என கட்டால் உங்கள் தெருவிற்குதான் முன்பே ரோடுபோட்டுவிட்டோமே என்கிறார்கள். எங்கள் தெரு ஆரம்பத்தில் எப்படியிருந்ததோ அவ்வாறே இன்றும் இருக்கிறது. தெருவின்முடிவில் கருவேல மரங்கள் காடாக மண்டியுள்ளது. இரவில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பாதுகாப்பு இல்லை. எனவே மன்னார்கு நகராட்சி நிர்வாகம் இனியும் தாமதம் செய்யாமல் உடனே தார் சாலை போட வேண்டும்’’ இவ்வாறு கே.. அகோரம் கூறினார்.