திருச்சி விரைவு செய்திகள்
27 Jun 2026, 10:29 pm

மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் ஜூலை 1 திருச்சியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த முடிவு

திருச்சிராப்பள்ளி, ஜுன் 27- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒன்றிய தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் ரஜினிகாந்த், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநிலச் செயலாளர் பி.எம். இளங்கோவன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தை `வி.பி.ஜி. ராம்ஜி’ எனப் பெயர் மாற்றம் செய்து, போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல், 125 நாள் வேலை என அறிவித்துள்ள ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ஜூலை 1 ஆம் தேதி காலை 10 மணி அளவில், திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடி மற்றும் லால்குடி ஒன்றியத் தலைவர் ஜெகதீசன், திருவெறும்பூரில் ஒன்றியச் செயலாளர் சித்ரா, துறையூரில் ஒன்றியத் தலைவர் சுந்தர்ராஜ், உப்பிலியபுரத்தில் ஒன்றியத் தலைவர் சுஜித்ரா, முசிறியில் ஒன்றியத் தலைவர்கள் நிஷா, அகிலாண்டேஸ்வரி, மணப்பாறையில் ஒன்றியத் தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில், தாலுகா அலுவலகங்கள் முன்பாக கருப்புச் சட்டை அல்லது கருப்புப் பேட்ஜ் அணிந்தும், கருப்புக் கொடிகளை ஏந்தியும் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

தஞ்சாவூர், ஜுன் 27- தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ‘நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர்’ (Machine Operator Plastics Processing Course) என்ற இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. சென்னை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி நான்கு மாதங்கள் கொண்டது. 18 முதல் 35 வயது வரை உள்ள, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலங்களில் மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை ஊதியம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். ஆர்வமுள்ள தகுதியுடைய இளைஞர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

தஞ்சாவூர், ஜுன் 27- தஞ்சாவூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம், ஜுன் 28 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், தமிழக அரசு மேற்கொண்டு வரும் இந்தத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1,64,908 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக நகர்ப்புறங்களில் 126 மற்றும் ஊரகப் பகுதிகளில் 1,483 என மொத்தம் 1,609 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் 6,436 பணியாளர்கள் மற்றும் 217 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் முகாம்கள் செயல்படும். மேலும், தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்காக 77 நடமாடும் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. பொது சுகாதாரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், கல்வி மற்றும் உள்ளாட்சித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்போடு இந்த முகாம் நடைபெறுகிறது. இதற்கு முன்பு எத்தனை முறை சொட்டு மருந்து அளித்திருந்தாலும், தற்போது பிறந்த குழந்தைகள் உட்பட ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இந்த முகாமில் தவறாமல் கூடுதல் தவணையாக சொட்டு மருந்து அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி வலியுறுத்தியுள்ளார். பணி நிமித்தமாக மாவட்டத்தில் தங்கியுள்ளவர்களின் குழந்தைகளுக்கும் இச்சொட்டு மருந்து வழங்கப்படும் என்பதால், பெற்றோர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி குழந்தைகளைப் போலியோவிலிருந்து பாதுகாக்க ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜுன் 30 தஞ்சாவூரில் விவசாயிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், ஜுன் 27- தஞ்சாவூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டங்கள், ஜுன் 30 (செவ்வாய்க்கிழமை) அன்று தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளன. இதன்படி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், அன்று காலை 10 மணிக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் அன்று பிற்பகல் 3 மணிக்கும் நடைபெற உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களது கோரிக்கைகளை நேரில் தெரிவித்து பயன்பெறுமாறு தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் நித்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

மாத்தூர் அருகே 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

புதுக்கோட்டை, ஜுன் 26- புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள வீரம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். சென்டிரிங் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி ராணி தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு இருவரும் வெளியூருக்குச் சென்றுள்ளனர். பிற்பகலில், அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தில் வசிப்போர் ராணிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, மாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர். தடயவியல் துறை அதிகாரிகள் தடையங்களை சேகரித்தனர். சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.