தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அஞ்சலி: பாரதிராஜா கண்ணுக்குள் நூறு கனவாய் இயங்கியவர் - எஸ்.வி.வேணுகோபாலன்

11 Jun 2026, 8:07 pm
அஞ்சலி: பாரதிராஜா   கண்ணுக்குள் நூறு கனவாய் இயங்கியவர் - எஸ்.வி.வேணுகோபாலன்

அஞ்சலி: பாரதிராஜா கண்ணுக்குள் நூறு கனவாய் இயங்கியவர் - எஸ்.வி.வேணுகோபாலன்

“இடதுசாரிகளான நீங்கள், இந்தப் படத் திற்காக விழா எடுத்து என்னை அழைத்து மரி யாதை செய்திருக்கிறீர்கள்.... என் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அப்படியே ஏற்றுக் கொண்டு பாராட்டிவிட மாட்டீர்கள் என்று தெரி யும். முழுதாகத் தான் மதிப்பீடு செய்வீர்கள். வேதம் புதிது படத்தைப் பற்றி இங்கே வாழ்த்துரை வழங்கிய தலைவர்கள், ஆழம் பார்த்திருக்கிறார் பாரதிராஜா என்பது போல் குறிப்பிட்டீர்கள். ஆழமெல்லாம் பார்க்க வில்லை, என்னை அப்படியே உள்ளே சுழல் இழுத்துச் சென்றுவிடும் என்று எனக்குத் தெரியும். இலேசாக நீர்ப்பரப்பின் மீது காலை வைத்து எடுத்திருக்கிறேன், அவ்வளவு தான்.... அதற்கே கிடைத்துள்ள அங்கீகா ரம் என்னை இன்னும் ஆழமான உள்ளடக்கத்தோடு கலைப்படைப்புகளை வழங்கும் நம்பிக்கையை அளிக்கிறது”

- சென்னையில் 1988 துவக்கத்தில் ‘வேதம் புதிது’ படத்திற்கான பாராட்டு நிகழ்வில் மார்க்சிஸ்ட் இயக்கத் தலைவர்கள் உரையாற்றிய மேடையில் இயக்குநர் பாரதிராஜா வழங்கிய ஏற்புரையின் சில பகுதிகள் நெஞ்சில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவருக்குமுன் பாராட்டுரையில் பேசிய தோழர் உ.ரா. வரதராசன், தான் இப்போதெல்லாம் அதிகம் படங்களை பார்ப்பதில்லை, பெரிதும் பேசப்பட்டதால் இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று சொன்னதைத் தொட்டுப் பேசிய பாரதிராஜா, ஒரு தொழிற்சங்கத் தலைவர், சினிமா பார்ப்பதில்லை என்று சொல்லிவிட்டால், தோழர் கள் அவரையே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டால் நாங்கள் யாருக்காக இங்கே படைப்புகளை வெளியிடுவது, நீங்கள் பார்த்து விமர்சித்து எங்களை இன்னும் மேம்பட்ட படங்களை எடுக்கச் செய்ய வேண்டும் என்றும் அந்த மேடையில் கேட்டுக் கொண்டார்.

முடிக்குமுன் இன்னொன்றும் குறிப்பிட்டார்: “அடுத்து ரஜினியை வைத்து கொடி பறக்குதுன்னு ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன், அதை நிச்சயம் தோழர்கள் விரும்ப மாட்டீர்கள், அதற்காக என்னை விமர்சித்து கூட்டம் போட்டுவிட வேண்டாம்... நிச்சயம் கருத்தியல் ரீதியாக முன்னேற்றமான விஷயங்களை என் படங்கள் பேசும்”.  உளம் திறந்த படைப்பாளியாக, தனது கருத்துகளைத் துணிவோடு முன்வைக்கும் மனித ராகவும் வாழ்ந்தவர் இயக்குநர் பாரதிராஜா.

திரையுலகை அதிர வைத்த மண்வாசனையும் புதிய முகங்களும்

‘16 வயதினிலே’ திரைப்படம் அவரது முதல் குழந்தை; திரையுலக ரசிகர்களை அதிர வைத்தது. ‘சோளம் விதைக்கையிலே சொல்லிப்புட்டுப் போன புள்ளையை’, ‘மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சி மெட்டி ஒலிக்க மெல்ல நடந்து’ வர கிராமத்திலிருந்து நேரே கொண்டு வந்து நிறுத்தி இருந்தார். மூக்குத்தி அணிந்து வெகுளியான பேச்சு மொழியோடு கால் சாய்த்து நடந்துபோகும் சப்பாணியை கதாநாயக னாக்கி, பரட்டையை வில்லனாக்கி இருந்தார். கமல், ஸ்ரீதேவி, ரஜினி, காந்திமதி எல்லோரும் கிராமத்துத் தெருக்களில் திண்ணைப் பேச்சாகவும், இராப்போது அரட்டையாகவும் பேசுபொருள் ஆகிவிட்டிருந்தனர்.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகமா னவர் ராதிகா. பின்னாளில், பாரதிராஜா இயக்கத்தில் பெரிதும் பேசப்பட்ட ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் இறுதிக் காட்சியில், கணவன் நெப்போலியன் அதிர்ந்து போய்ப் பார்த்திருக்க, தாலியை அறுத்து வீசிவிட்டு அண்ணன் விஜயகுமார் மடியில் உயிரைவிடும் விரு மாயி பாத்திரத்தில் அசத்தியிருந்தார் இதே ராதிகா. கிராமத்துக் கதைக்காரன் என்று பெயர் சூட்டிவிடப் போகிறார்கள் என்று சப்பாணி கமல், மயிலு ஸ்ரீதேவி இருவரையும் மீண்டும் இணைத்து ‘சிகப்பு ரோஜாக்கள்’ எடுத்தார் பாரதிராஜா. அடுத்தடுத்து பல முக்கிய படங்கள், புதிய புதிய திரை நட்சத்திர அறிமுகங்கள்.

எளிய மனிதர்களின் வாழ்வியலும் எரியும் வறுமையும்

வேலையில்லாத் திண்டாட்டம் 1970களின் பிற் பகுதியில் பெரிதும் முன்னுக்கு வந்திருந்த சூழலில் கே.பாலசந்தர் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ இயக்கியி ருந்தார். பாரதிராஜா ‘நிழல்கள்’ வழங்கினார். கவிஞர் வைரமுத்துவுக்குத் திரைப்பாடல் எழுதும் முதல் வாய்ப்பை அளித்தார் ஒரு ‘பொன் மாலைப் பொழு தில்!’. இளம் நெஞ்சங்களின் காதல் துடிப்புகள், வேலை வாய்ப்பு அற்ற தவிப்பு, நட்பின் வலிமை, மதிக்கப் படாத படைப்பாற்றல் எல்லாம் பேசியது அந்தப் படம்.

அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, காதல் ஓவியம் என்று இளையராஜா - பாரதிராஜா - வைர முத்து கூட்டணி காதல் இசையை ஓயாது ஒலிக்க வைத்த காலமொன்று இருந்தது. ‘புதுமைப்பெண்’ எல்லாக் கசப்புகளையும் உட்கொண்டு காத்திருக்கும் தனது நடத்தையைக் கேள்விக்கு உள்ளாக்குவோருக்கு எதிரான பெண்ணின் முக்கியமான ஒரு கலகக் குரல். ‘ஒரு கைதியின் டைரி’ அநீதிக்கு எதிரான இளைஞ னின் கோபத்தையும், ‘கடலோரத்துக் கவிதைகள்’ சிறக டிக்கும் அலைகளின் துடிப்பையும் கவிதையாக்கி இருந்தது.

நடிகர் திலகத்தை வேலை வாங்கிய துணிச்சல்

‘முதல் மரியாதை’ ஒரு சிற்பக் கோயில். “நான் எப்படி நடிக்கணும்” என்று கேட்ட நடிகர் திலகத்தை, “நீங்க நடிக்கக் கூடாதுண்ணே” என்று சொல்லி வேலை வாங்கும் துணிச்சல் இருந்தது இயக்குநர் இமயத் திற்கு! இந்தப் படத்தை எடுத்து முடித்ததும் ஒரு நந்தவனத்தில் நுழைந்துவந்த திருப்தி எனக்கு என்று சொல்லியிருப்பார். தனது வசனகர்த்தா, ஒளிப் பதிவாளர், இசையமைப்பாளர், கவிஞர் எல்லோரை யும் சிறப்பித்துப் பேசியிருப்பார். சிறையிலிருந்து ஜாமீனில் வரும் ராதா, ஓடத்தில் இருந்து கரையில் இறங்கக் கால் பதிக்கையில், மரணப்படுக்கையில் இருக்கும் சிவாஜியின் தோள்பட்டையில் ஓர் அதிர்வைக் காட்டியிருப்பார். அதைத் தானே சிலாகித்து ஒரு நேர்காணலில், “அந்த வைப்ரேஷன் முக்கியமானது” என்று சொல்லியிருந்தார். வடிவுக்கரசி, ராதா இருவ ருக்கும் அப்படியான பாத்திர வார்ப்பு பிறகு கிடைத்தி ருக்க வாய்ப்பில்லை.

சனாதன நஞ்சை அறுத்தெறிந்த ‘வேதம் புதிது’

‘கொல்லைத் துளசி எல்லை கடந்தால் வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா’ என்ற கேள்வியைக் கொண்டு வேதம் புதிது படத்தின் காதல் அவஸ்தை யை முன்வைத்திருந்தார். தன்னைப் பார்க்கத்தான் வந்துபோகிறான் காதலன் என்று ராஜாவை ஓரக் கண்ணால் பார்த்தபடி தயிர் கடைந்து கொண்டிருக்கும் அமலாவிடம், தந்தை சாருஹாசன், “பாற்கடலையே ரொம்ப நேரம் கடைந்ததுனால விஷம் வந்தது, தயிரை எதுக்கு இன்னும் கடைஞ்சுட்டு இருக்கே?” என்று மிரட்டும் காட்சியில் சாதியப் பாகுபாட்டின் நஞ்சைக் கடத்தியிருப்பார்

மறுநாள் மகனிடம் சத்யராஜ், “நீ சிலையத் திருட அங்கே வரலன்னு எனக்குத் தெரியும். நீ தான் அம்மனை மறைச்சு வச்சுட்டு நின்னியே” என்பார். “அந்த ஐயன் என் காலில் விழுந்துட்டாரு, நான் நம்பற என் மண்ணை வித்து நான் நம்பாத சாமிக்கு சிலை செஞ்சு கொடுக்கப்போறேன்” என்று வெதும்பும் காட்சியில் நிறைய விஷயங்கள் சொல்லிவிட்டிருப்பார். சனாத னத்திற்கு அதுவே சகிக்க முடியாதிருந்தது; சங்கர மடம் தலையிடப் பார்த்தது எல்லாம் அப்போது பேசப்பட்டவை.

பெண் குழந்தையை இந்த சமூகம் எப்படி வரவேற் கம் என்பதை, பஞ்சாப் எல்லையில் எண்பதுகளில் தீவிர வாதத்திற்கு எதிரான போரில் உயிர் மரித்த ஒரு கம்யூ னிஸ்ட் இளைஞர், தான் சென்று பார்த்திராத தன் பெண் குழந்தைக்கு எழுதி வைத்துவிட்டுப் போன கடிதம் உருக்கமாகப் பேசியிருந்தது. பாரதிராஜாவின் ‘கருத் தம்மா’, தமிழ்த் திரையில் பெண் சிசுக்கொலைக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான ஒரு தீர்மானமான கலகக் குரல். பேராசிரியர் பெரி யார்தாசனை அசாத்தியமான முறையில் நடிக்க வைத்தி ருந்தார். வைரமுத்துவின் ‘போறாளே பொன்னுத்தாயி’ பாடல் எப்போதும் பேசப்படும்.

அடுத்த தலைமுறையின் பேராசான்

அடுத்தவர் இயக்கத்தில் தான் நடிக்க வந்தது சுவாரசியமான அனுபவங்களை ரசிகர்களுக்கு அளித்தது. ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷின் தாத்தா பாத்திரம், உளவியல் அம்சங்களை அசாத்தி யமான முறையில் உட்கொண்ட நடிப்பை அவரிட மிருந்து கொணர்ந்திருந்தது. மலையாள உலகம் ‘துடரும்’ படத்தில் மிகக் குறைந்த அளவே ஆனாலும் முக்கியமான பாத்திரமாக அவரை நடிக்க வைத்திருந்தது.

இயக்குநராக வர விரும்பிய அடுத்தடுத்த தலை முறை இளம் படைப்பாளிகளின் ஆதர்ச இயக்குநராக அவர் திகழ்ந்திருப்பது குறிப்பிட வேண்டிய விஷயம். ‘என் உயிர்த் தோழன்’ பேசப்பட வேண்டிய அருமை யான முயற்சி. ‘நாடோடித் தென்றல்’ படத்தின் சில அம் சங்கள் சிறப்பானவை. எளிய மனிதர்களது வாழ்க்கை, வலி வேதனைகள் (‘எனக்கொரு உண்மை தெரிஞ்சா கணும்’ எனும் வீராச்சாமி), முரண்களை மீறித் தழைக்கும் அன்பு, அற்ப காரணங்களுக்காக வெட்டி முறியும் உறவுகள் இவற்றை அப்படியே திரைக்கு அளித்தவர்.

தேனியில் இருந்து புறப்பட்டு வந்து ஒரு தேனீயைப் போல் இயங்கியவர். “என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது விளியில் குரலின் கம்பீரத்தை மீறி அவரது நேசம் ஒலிக்கும். அது தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கவே செய்யும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.