கணினித் திரையா? கள விளையாட்டா? - கு.செந்தமிழ்ச்செல்வன்,
11 Jul 2026, 9:04 pm

கணினித் திரையா? கள விளையாட்டா? - கு.செந்தமிழ்ச்செல்வன்,

செயற்கை நுண்ணறிவோடு (AI) நம்மால் கபடி விளையாட முடியுமா? பாண்டியாட்டமோ, பல்லாங்குழியோ ஆட முடியுமா? “ஒரு குடம் தண்ணி ஊத்தி...” போன்ற மண்ணின் மரபுசார் விளையாட்டுகளைச் செல்போன் திரையில்தான் விளையாட வேண்டுமா? இன்றைய நவீன உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் நகரமயமாக்கலிலும் மனித வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், மனிதரின் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பெரும் சவால்களையும் உருவாக்கி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் கைப்பேசி, தொலைக்காட்சி, கணினித் திரைகளோடு முடங்கிப்போனதன் விளைவாக; தனிமை உணர்வு, மன அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல தொற்றா நோய்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்தச் சூழலில், நமது மண்ணின் மரபு நமக்கு வழங்கிய கிராமிய விளையாட்டுகளையும் மண் சார்ந்த பாடல்களையும் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய அவசியம் மிக அதிகமாகியுள்ளது. இதனை உணர்த்தும் நோக்கில், கடந்த 2026 ஜூன் 26 அன்று வேலூர் மாவட்டச் சுற்றுலாத் துறையுடன் இணைந்து, “அறிவுத்தோட்டம் வேளாண் சுற்றுலா மற்றும் கருத்துக் களஞ்சியம்” முன்னெடுத்த “கிராமிய விளையாட்டுகள் மற்றும் பாடல்கள் – குடும்ப விழா” மிக உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. இது வெறும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல; ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் ஒரு வாழ்வியல் இயக்கத்தின் தொடக்கம்!

மாந்தோப்பில் மலர்ந்த மக்கள் திருவிழா!

வேலூர் மாவட்டம், காளாம்பட்டு கிராமத்தில் உள்ள இயற்கை வேளாண் பண்ணையான ‘அறிவுத்தோட்டத்தில்’ நடைபெற்ற இந்நிகழ்வில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆசிரியர்களும் பெற்றோர்களும் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல், குழந்தைகளோடு குழந்தையாக இணைந்து களம் இறங்கி விளையாடினார்கள். சுமார் 70 மாணவர்கள், 50 பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், 25 கருத்தாளர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒரு குடும்பம் போலக் கூடினர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பி. அச்சுதன் அனைவரையும் புல்பரப்பில் ஒன்றாக நிறுத்தி, பல்வேறு கிராமிய விளையாட்டுகளையும் மண் சார்ந்த பாடல்களையும் ஆடல்களுடன் உற்சாகமாக நடத்தினார். ‘தவளைக்கும் தவளைக்கும் கல்யாணமாம்’ என்ற பாடல் மாணவர்களைத் துள்ளலுடன் நிகழ்வில் இணைத்தது. பின்னர் அனைவரும் பத்துக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இயற்கை எழில் சூழ்ந்த மாந்தோப்பில் ஒரே நேரத்தில் கிட்டிப்புல், பம்பரம், கோலி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டனர். முட்டைக்குள்ள இருக்கையில... பூப்பறிக்க வருகிறோம்....... ஒரு குடம் தண்ணி ஊத்தி..... கிச்சி கிச்சி தாம்பளம்.... குலகுலயா முந்திரிக்கா..... எனப் பல மரபுசார் பாடல்களின் ஒலியும், களிமண்ணில் பொம்மைகள் செய்த மாணவர்களின் குதூகலமும், மர ஊஞ்சல்களில் ஆடிய பெரியவர்களின் சிரிப்பும் அந்தப் பண்ணை முழுவதையும் பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றின. சிறப்புக்குழந்தைகள் சிலரும் இதில் கலந்து கொண்டு ஆடித்திரிந்தது நெகிழ்ச்சியூட்டியது.

களம் கண்ட கருத்தாளர்களும் சிறப்பு நிகழ்வுகளும்

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் முத்துச் சிலுப்பன், கும்மி, கோலாட்டம், உரியடி போன்ற பாரம்பரிய நிகழ்வுகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்தார். அறிவொளி பாடல்களும், பாவலர் முகில் அவர்களின் இசைக் குறிப்புகளும் நிகழ்விற்கு மேலும் உயிரூட்டின. மாவட்டச் செயலாளர் காயத்திரி, வேலூர் ஒன்றியச் செயலாளர் ப. இராஜேந்திரன் ஆகியோர் பெரியவர்களுக்கான விளையாட்டுகளை ஒருங்கிணைத்துக் கருத்தாளர்களாகக் களம் இறங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் பி. மாலதி, ஹேமா, மோகன்ராஜ், ஜீவானந்தம் ஆகியோருடன் 9 கல்லூரி மாணவர்களும் பெரும் பங்காற்றினர். இம்மகிழ்வான தருணத்திற்குள் இரண்டு சிறப்பு நிகழ்வுகளும் அரங்கேறின. குழந்தை எழுத்தாளர் விழியன் மற்றும் சரண்யா எழுதிய ‘கணிதம் பேசும் அறிவுத்தோட்டம்’ புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும், மாணவர்கள் விவசாயத்தில் கள அனுபவம் பெறவும், தொழில்முனைவோர் திறன்களை வளர்க்கவும் மாணவர்களே முன்னெடுக்கும் “STAR” (Students Agripreneurs) என்ற அமைப்பு துவங்கப்பட்டு, அதன் ஒருங்கிணைப்பாளராகத் ஜீவானந்தம் பொறுப்பேற்றார். இந்தச் சிறப்பான நிகழ்வினை வடிவமைத்துச் செயல்படுத்திய கு. செந்தமிழ்ச்செல்வன், செ. குணசுந்தரி, ஒருங்கிணைப்பாளர் பி. மாலதி மற்றும் முழு ஒத்துழைப்பு வழங்கிய சுற்றுலாத் துறை மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆகியோரைப் பங்கேற்பாளர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

விளையாட்டு என்பது ஒரு வாழ்க்கைப் பள்ளி!

விளையாட்டு என்பது வெற்றி–தோல்விக்கான போட்டி மட்டுமல்ல, அது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஒரு பயிற்சி. விட்டுக்கொடுத்தல், ஒத்துழைத்தல், குழுவாகச் செயல்படுதல், தோல்வியைத் தாங்கி மீண்டும் முயலுதல் போன்ற உன்னதத் திறன்களை விளையாட்டு இயல்பாகவே கற்றுத் தருகிறது. மண்சார்ந்த பாடல்கள் நமது முன்னோர்களின் அனுபவக் களஞ்சியம். அவற்றில் இயற்கை, உழைப்பு, அறம், அன்பு, ஒற்றுமை போன்ற உயரிய வாழ்க்கை மதிப்புகள் பதிந்துள்ளன. இயற்கைச் சூழலில், மரங்களின் நிழலில், மண்ணின் மணத்தில் வளரும் குழந்தைகள் மட்டுமே சமூகப் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக முடியும். இந்த அனுபவத்தை எந்த மின்னணுச் சாதனமும் தந்துவிட முடியாது! அறிவுத்தோட்டத்தில் நடைபெற்ற இந்தத் துள்ளலான குடும்ப விழா ஒரு நிகழ்ச்சியாக முடிவடையாமல், தமிழகம் முழுவதும் பரவ வேண்டிய மக்கள் இயக்கமாக மாற வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் குழந்தைகளின் சிரிப்பு மீண்டும் மண்ணில் ஒலிக்க வேண்டும்!