120 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் -பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள விஞ்ஞானிகள் திட்டம்!
6 Jun 2026, 7:39 pm

ஆகஸ்ட் 12-ல் ஸ்பெயினில் 120 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதையொட்டி ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மற்றும் சூரியனின் கொரோனா குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

சுமார் இரண்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வானில் அரிய 'முழு சூரிய கிரகணம்' நிகழவுள்ளதாகச் சர்வதேச விண்வெளி ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. முழு சூரிய கிரகணம் என்பது நிலவானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே கடந்து செல்லும்போது ஏற்படும் நிகழ்வாகும். இந்த நிகழ்வின் போது நிலவு, சூரியனின் ஒளியை முழுமையாக மறைத்துவிடும்.

இந்த கிரகணத்தின் முழுமையான நிழற்பாதை சுமார் 8,300 கிலோமீட்டர் நீளத்திற்கு அமையவுள்ளது. இது ஆர்க்டிக் கடற்கரைப் பகுதியில் தொடங்கி, வடதுருவத்தின் வழியாக நகர்ந்து வடக்கு ஸ்பெயின் வரை பயணிக்கவுள்ளது.

இது கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, போர்ச்சுகல் மற்றும் வடக்கு ஸ்பெயின் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் முழு சூரிய கிரகணமும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் பிற பகுதிகளில் பகுதி சூரிய கிரகணமாகவும் தென்படும்.

ஸ்பெயினில் தற்போது நிகழவுள்ள இந்த முழு சூரிய கிரகணமானது 120 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய நிகழ்வை விண்வெளி ஆர்வலர்களுக்காக ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) தனது இணையதளத்தில் நேரலை செய்யவுள்ளது.

விஞ்ஞானிகளின் ஆய்வுத் திட்டம்

இந்த கிரகணத்தின் போது விஞ்ஞானிகள் வான்வெளியில் அதிக உயரத்திற்குச் செல்லக்கூடிய பலூன்களைப் பறக்கவிட்டு ஆய்வு செய்யவுள்ளனர். கடந்த 1919-ல் ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியனின் ஈர்ப்பு விசை தூரத்து நட்சத்திரங்களின் ஒளியை வளைக்கிறது என்பதைக் கண்டறிந்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் 'பொதுச் சார்பியல் கோட்பாடு' உறுதி செய்யப்பட்டது. அதே வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனையை மீண்டும் செய்து பார்க்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான 'கொரோனா' (Corona) குறித்தும் புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பாதுகாப்பு எச்சரிக்கை!

சூரியன் முழுமையாக மறையும் அந்த சில நொடிகளைத் தவிர, மற்ற நேரங்களில் கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் ஆபத்தானது என நாசா எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் இதற்கென அங்கீகரிக்கப்பட்ட சூரிய கிரகணக் கண்ணாடிகளில் (Certified Eclipse Glasses) மட்டுமே கிரகணத்தைப் பார்க்க வேண்டும் என்றும், சாதாரண சன்கிளாஸ்களில் பார்ப்பது பாதுகாப்பானதல்ல என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கேமரா லென்ஸ், தொலைநோக்கி (Telescope) அல்லது பைனாகுலர் போன்றவற்றின் முன்பகுதியில் பிரத்யேக 'சோலார் ஃபில்டர்களைப்' பொருத்தாமல் பார்ப்பது நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.