இந்தியாவின் முன்னணி 6 பல்கலைக்கழகங்களும் தரவரிசையில் சரிவு!
5 Nov 2026, 8:32 pm

கியு.எஸ் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2027 பட்டியலில் இந்தியாவின் முன்னணி 6 பல்கலைக்கழகங்களும் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளன.

குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (Quacquarelli Symonds – QS) நிறுவனம் வெளியிட்டுள்ள 2027-ஆம் ஆண்டின் ஆசியப் பல்கலைக்கழகங்களுக்கான உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை பட்டியலில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியப் பல்கலைக்கழகங்கள் எதுவும் முதல் 50 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளன.

கடந்த ஆண்டு 59ஆவது இடத்தில் இருந்த தில்லி ஐஐடி, 66ஆவது இடத்துக்கும், 64ஆவது இடத்தில் இருந்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகம், 79ஆவது இடத்துக்கும், 71ஆவது இடத்திலிருந்த மும்பை ஐஐடி, 83ஆவது இடத்துக்கும், 70ஆவது இடத்திலிருந்த சென்னை ஐஐடி 85ஆவது இடத்துக்கும் சரிந்துள்ளன.

அதே சமயம், இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 294 ஆக இருந்த நிலையில், தற்போது 325 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆசியாவில் அதிக எண்ணிக்கையிலான பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவதிலும், முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்களைக் கொண்டிருப்பதிலும் ஆசிய அளவில் சிறந்து விளங்குகின்றன. ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கையை ஆசிரியர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் அளவீட்டில், ஆசியாவின் முதல் 10 இடங்களில் ஐந்து இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் முதலிடத்திலும், சென்னை ஐஐடி மூன்றாவது இடத்திலும் உள்ளன.