மக்கள் பயன்பாட்டிற்கு வருமா தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையம்?
12 hours before

மக்கள் பயன்பாட்டிற்கு வருமா தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையம்?

"உயர் நீதிமன்றம், சென்னை கடற்கரை ரயில்நிலையம்,தண்டையார்பேட்டை மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களை அடைய பொது மக்கள் இந்தப்பேருந்து சேவைகளைப் பெரிதும் நம்பியுள்ளனர். இந்தப் பேருந்து நிலையத்தைப் புதுப்பித்து வசதிகள் செய்து தர வேண்டும் எனப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்."

சென்னை, செப். 17-ஐஓசி பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்என அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் ரயில்வேக்குச் சொந்தமான காலியிடத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பேருந்துநிலையமாகச் செயல்பட்டு வந்தது. இங்கு போதியநிழற்குடைகள் இல்லாததால் கோடைகாலத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலும், மழைக்காலத்தில் கொட்டும்மழையிலும் பயணிகள் மரங்களின் நிழலில் தஞ்சமடையும் சூழல் நிலவியது. கழிப்பறை வசதிகள் இல்லாததால் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் அருகில் உள்ள புதர்களை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும்,மழைக்காலத்தில் நீர்தேங்கி அந்த இடம் முழுவதும் சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கும். இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

தற்போது இந்தத் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து 44 கட் சர்வீஸ் (ஐஓசி முதல் தீவுத்திடல் வரை), சி1 சுழற்சிப் பாதை(ஐஓசி முதல் ஐஓசி வரை) ஆகிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்றம், சென்னை கடற்கரை ரயில் நிலையம், தண்டையார்பேட்டை மற்றும்வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில்நிலையங்களை அடையபொதுமக்கள் இந்தப் பேருந்து சேவைகளைப் பெரிதும் நம்பியுள்ளனர். இந்தப் பேருந்து நிலையத்தைப் புதுப்பித்து வசதிகள் செய்து தர வேண்டும் எனப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையைத் தொடர்ந்து, கடந்த ஆட்சியில் ஆர்.கே.நகர் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.1.8 கோடி தொகையில் ரயில்வே நிலப்பரப்பை 32 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு பெறப்பட்டது.

மாநகராட்சி நிதி ரூ.2.4 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் கருணாநிதி நகர், நெடுஞ்செழியன் நகர்,நேதாஜி நகர், ராஜசேகரன் நகர் உள்ளிட்ட 32 பகுதிகளைச் சேர்ந்த 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, மணலி போன்ற சுற்றியுள்ளபகுதிவாசிகள் நேரடியாகப் பயனடைவார்கள். ரூ.2.4 கோடி மதிப்பீட்டில், 16 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பேருந்துநிலையத்தில் ஆண்கள்,பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, பயணிகள் காத்திருப்பு அறைகள், நேரக் கட்டுப்பாட்டு அறை மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், பேருந்து நிலையத்தை விரைந்து திறக்க மாநகராட்சியும், மாநகரப் போக்குவரத்துக் கழகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஐஓசி பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு (159டி), திருவான்மியூர் (1எப்), அடையாறு (4டி),தாம்பரம் (170இ), அண்ணா சதுக்கம் (44சி), மற்றும் வடபழனி (15ஏ) ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், சமீப காலங்களில் இந்த இடங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள்நிறுத்தப்பட்டுள்ளன. அந்தப் பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். - அம்பத்தூர் ராமு