தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் சமூகநீதித்துறை அமைச்சருடன் சந்திப்பு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து முறையீடு
2 Jul 2026, 9:45 pm

தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் சமூகநீதித்துறை அமைச்சருடன் சந்திப்பு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து முறையீடு

சென்னை, ஜூலை 2 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர்கள் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவை, தலைமைச் செயலகத்தில் புதனன்று (ஜூலை 1) நேரில் சந்தித்தனர். அப்போது, பல்வேறு முக்கிய கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வழங்கினர்.

தலித் விடுதலைக்கான தேசிய மேடையின் அகில இந்திய துணைத் தலைவர் கே. சாமுவேல்ராஜ், துணைச் செயலாளர் க. சுவாமிநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி. சுகந்தி, துணைத் தலைவர் வி. குபேந்திரன், செயலாளர் கா. வேணி, சிபிஎம் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ப. செல்வன், தமிழ்நாடு பன்னியாண்டிகள் நலச் சங்கத் தலைவர் டி.ஜி. சம்பத், தீஒமு மாநிலக்குழு உறுப்பினர்கள் ப. அசோக்ராஜ், க. மாடசாமி உள்ளிட்டோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அப்போது, அமைச்சரிடம் வழங்கப்பட்ட முக்கிய மனுக்கள் வருமாறு: பன்னியாண்டி சமூகத்திற்கு சாதிச்சான்றிதழ் வழங்குக! திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமூக மக்களுக்கு சாதிச்சான்றிதழ் 2021-ஆம் ஆண்டு முதல் இணைய வழியில் வழங்கப்படவதில்லை.

சாதிச்சான்றிதழ் இல்லாத காரணத்தினால் கல்வியை தொடர முடியாமல் ராஜேஸ்வரி என்ற மாணவி 2023 ஜூன் 22 அன்று தற்கொலை செய்து கொண்டார். எனவே, சான்றிதழ் கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தற்போதைய அரசு, பழைய சாதிச் சான்றிதழின் அடிப்படையில் ஆன்லைன் சாதிச் சான்றிதழ்கள் வழங்கி, நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களுக்கும் விரைந்து தீர்வு காணவேண்டும்

. நெட்டூர் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு-நிவாரணம் வழங்குக! தென்காசி மாவட்டம், நெட்டூரில் கடந்த மே 29 அன்று பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமைத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், பாதுகாப்பு மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டம், அச்சம்தவிர்த்தான் வருவாய் கிராமத்தின் உட்கடையான “பறச்சேரி” என்ற சாதியடையாளப் பெயரை நீக்கி, “வடக்கு அச்சம் தவிர்த்தான்” என பெயர் மாற்றம் செய்து அனைத்து அரசுப் பதிவுகளிலும் நடைமுறைப்படுத்தவும், தமிழகம் முழுவதும் சாதியடையாளப் பெயர்களை மாற்றும் பணியை விரைவுபடுத்தவும் வேண்டும்.

அனுசுயா, சங்கருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் திருப்பத்தூர் மாவட்டம், நாயக்கனேரி தனி ஊராட்சித் தலைவர் இந்துமதி தொடர்பான ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட வழக்கில், பட்டியலின மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் தனது இணையர் சுபாஷை இழந்த அரியலூர் மாவட்டத்தை சார்ந்த அனுசுயாவிற்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் நந்தீஸ் - ஸ்வாதி படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்ட நந்திஷின் சகோதரர் சங்கருக்கும் உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும்.

தோட்டி நில மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்க! காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் அருள்மிகு முத்துகொளக்கியம்மன் திருக்கோயில் தேரோட்டம் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளுக்கும் தடையின்றி நடத்தப்பட்டு அவர்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்யப்பட வேண்டும். சேலம், தாதம்பட்டி பட்டியலின மக்களுக்கு உரிமையான வகைப்படுத்தப்பட்ட தோட்டி நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புக்களை அகற்றி நிலத்தை பட்டியலின மக்களுக்கே வழங்கிட வேண்டும். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி மனுக்களைப் பெற்றுக்கொண்ட சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து வலியுறுத்தினார்.

மேலும் ஒவ்வொரு கோரிக்கையையும் உரிய முறையில் பரிசீலித்து, துறை ரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.