மின்வாரிய தலைமையகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு: சிஐடியு பேரதிர்ச்சி!
4 Jun 2026, 8:24 pm

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள் (Hard Disks) திருடப்பட்டிருப்பது மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஐடியு பொதுச் செயலாளர் தி. ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசின் ஓராண்டு பட்ஜெட் தொகையே 4.5 லட்சம் கோடி என்ற நிலையில், மின்சார வாரியத்தின் கீழ் இயங்கும் நான்கு முக்கிய கழகங்கள் மூலமாக மட்டும் ஓராண்டிற்கு 4 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மின்சாரம், நிலக்கரி மற்றும் மின்மாற்றிகள் கொள்முதலிலும், ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் ஊர்மாறுதல் உத்தரவுகளிலும் பல்வேறு முறைகேடுகளும் ஊழல்களும் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிஐடியு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில், மின்வாரிய தலைமையகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளது குறித்தும், அது தொடர்பாக விசாரணை நடைபெறுவது குறித்தும் மின்துறை அமைச்சர் அண்மையில் பேட்டி அளித்துள்ளார்.

மின்வாரிய தலைமையகத்தின் முக்கிய இடங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் வந்து செல்வது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் திட்டமிட்டு கழற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், தொழிற்சங்க தலைவர்களைக் கண்காணிக்க மட்டும் 6 மாதங்களுக்கு முன்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது மென்பொருள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமே திருடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினாலும், எதிர்காலத்தில் முக்கிய கோப்புகள் காணாமல் போவதற்கோ அல்லது எரிக்கப்படுவதற்கோ வாய்ப்புகள் உள்ளன. எனவே, தலைமையகத்தின் அனைத்து முக்கியக் கோப்புகளும் உடனடியாகப் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் தேவையான அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

மின்வாரியத்தின் நான்கு கழகங்களிலும் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து, அதன் உண்மைத் தன்மையை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என சிஐடியு கேட்டுக்கொள்கிறது.