முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!
5 Jun 2026, 12:58 am

முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை, ஜூன் 4 – தமிழ்நாடு மின்சார வாரிய முறை கேட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் தி. ஜெய்சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில், பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்தப்படும் கணினிகளில் உள்ள வன்வெட்டுகள் (ஹார்ட் டிஸ்க்) திருடப்பட்டுள்ளன.

அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று மின்துறை அமைச்சர் ஜூன் 4 அன்று பேட்டி அளித்திருப்பது ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மின்வாரிய தலைமையகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம், தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் ஆகிய தலைமை அலுவல கங்கள் செயல்பட்டு வருகின்றன.

மின்வாரியத்தின் ஒட்டுமொத்த பணப்பரிவர்த்தனைகளும், இந்த நான்கு நிறுவனங்கள் மூலமாக நடக்கின்றன.

இதன் ஓராண்டு பணப்பரிவர்த்தனை 4 லட்சம் கோடி ரூபாய். தமிழக அரசின் ஓராண்டு பட்ஜெட் தொகையே 4.50 லட்சம் கோடி ரூபாய்தான்.

கடந்த சில ஆண்டுகளாக மின்சாரக் கொள்முதல், நிலக்கரிக் கொள்முதல், மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கொள்முதலில் ஊழல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டு மென்று தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

மேலும், பணியாளர்களின் பதவி உயர்வு, ஊர்மாறுதல் உத்தரவு களிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஊர்மாறுதல், பதவி உயர்வுகளிலும் ஊழல் நடைபெறுவதாக தெரிகிறது. தற்போது ஹார்டு டிஸ்க் திருட்டு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

மின்வாரிய தலைமையகத்தில் முக்கியமான தளங்களுக்கு ஒப்பந்த தாரர்கள் வந்து செல்வது தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, சிசிடிவி கேமராக்கள் சில ஆண்டுகளுக்கு திட்டமிட்டு கழற்றப்பட்டு விட்டதாக தெரிகிறது. நிர்வாகப் பிரிவில் மட்டும் தொழிற்சங்க தலைவர்கள் வந்து செல்வதை கண்காணித்திட 6 மாதங்களுக்கு முன்பு சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டன.

தற்போது ஹார்டுடிஸ்க் மட்டும் திருடப்பட்டு உள்ளதாகவும் உண்மையான கோப்புகள் அனைத்தும் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டது போன்று கோப்புகள் காணாமல் போவதற்கும் எரிந்து விடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

ஆகவே, மின்வாரிய தலைமையகத்தில் உள்ள முக்கியமான கோப்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். தேவையான பகுதிகளில் சிசிடிவி கேமரா கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

மின் உற்பத்தி கழகம், மின் விநியோக கழகம், மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் பசுமை எரிசக்தி கழகங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.