மின்வாரிய மொத்தக் கடன் ரூ. 2.47 லட்சம் கோடி!
25 Jun 2026, 11:10 pm

மின்வாரிய மொத்தக் கடன் ரூ. 2.47 லட்சம் கோடி!

வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் தகவல்

சென்னை, ஜூன் 25 - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடந்த 25 ஆண்டு கால நிதிநிலை, உள் கட்டமைப்பு மற்றும் செலவினங்கள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கை யை, எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் வியா ழனன்று சென்னை தலைமைச் செய லகத்தில் வெளியிட்டுப் பேசினார். அப்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்தக் கடன் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி யாக உள்ளதாக நிர்மல்குமார் தெரி வித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மின்வாரியத்திற்காக ரூ. 87,399 கோடி கடன் வாங்கப்பட்ட போதிலும், எந்தவொரு பெரிய உள்கட்ட மைப்பு மேம்பாடும் மேற்கொள்ளப் படவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார். தற்போதைய நிதிப் பற்றாக்குறை ரூ. 34,447 கோடியாக உள்ளது. மின்சாரத் துறையில் நடந்த முறை கேடுகள் தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவித்தார்.

மின் தேவையும் உற்பத்தி நிலவரமும்

தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் தேவை 21,300 மெகாவாட்டாக உள்ள நிலையில், மின்சார வாரியம் நேரடியாக உற்பத்தி செய்யும் அளவு வெறும் 3,495 மெகாவாட் மட்டுமே, என்றும்; ஒன்றிய அரசு மின்தொகுப்பி லிருந்து 13,566 மெகாவாட் பெறப்படு கிறது. மீதமுள்ள பற்றாக்குறையை ஈடுகட்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் ஒரு யூனிட் 6 ரூபாய் 75 காசு கள் என்ற விலைக்கு வெளிச்சந்தை யில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என்றார். இந்த அதிக விலைக் கொள்முதலை நீண்ட கால ஒப்பந்தங்களாக மாற்றுவதன் மூலம் மாதம் ரூ. 215 கோடி சேமிக்க லாம் என அமைச்சர் தெரிவித்தார்.

ஊழியர்கள் பற்றாக்குறை

மின்சாரத் துறை சீராக இயங்கு வதற்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், தற்போது 74,714 பேர் மட்டுமே பணி யில் உள்ளனர். 65,921 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் வெறும் 343 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், முதற்கட்டமாக 15 ஆயிரம் பேரை மின்வாரியப் பணியில் அமர்த்த முதலமைச்சர் விஜய் உத்தர விட்டுள்ளார் என்றார்.

அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறை

மின்சார வாரியத்தின் வருவாய் - செலவு இடைவெளி கடந்த 25 ஆண்டுகளில் கணிசமாக அதி கரித்துள்ளது. குறிப்பாக 2016-2021 காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ. 58,534 கோடியாக உச்சம் தொட்டது. சமீபத்திய 2021-2026 காலத்தில் அது ரூ.34,447 கோடியாகக் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

ஒப்பந்தச் சீர்திருத்தங்கள்

தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடும்போது நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, சந்தை பகுப்பாய்வுக் குழு, உற்பத்தியாளர் மதிப்பீட்டுக் குழு மற்றும் குறுக்குச் சரிபார்ப்புக் குழு என மூன்று அடுக்கு சரிபார்ப்பு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நபர்கள் அல்லது நிறுவனங்களுக்குச் சாதகமாக டெண்டர்கள் வழங்கப்படுவதைத் தடுக்க முழுமையான டிஜிட்டல் போர்டல் வழி டெண்டர் முறையும் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

உள்கட்டமைப்பு விரிவாக்கம்

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி மதிப்பில் 231 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மின் பழுதுகளை விரைந்து சரிசெய்ய வும் ஊழியர்களின் பணிச்சுமை யைக் குறைக்கவும் 15,058 புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட வுள்ளனர்.

மின்கட்டண உயர்வு இல்லை

நடப்பாண்டில் பொது மக்களுக்கான மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாக உறுதி யளித்துள்ளார். கடந்த காலங்களில் பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் ஜூலை 1 அன்று மின்சார ஒழுங்குமுறை ஆணை யத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த தன்னிச்சையான கட்டண உயர்வு முறையை மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மின்வாரியத்தின் ஒழுங்குமுறை சொத்துகள் தொடர்பான ரூ. 59,000 கோடி நிதிச்சுமையை நுகர்வோர் மீது சுமத்தாமல் அரசால் படிப்படியாகச் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தமிழகத்தில் தவெக தலைமை யிலான புதிய அரசு பதவியேற்ற தையொட்டி, மாநிலத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை கடந்த ஜூன் 16 அன்று நிதியமைச்சர் மரியவில்சன் வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, மின்வாரி யத்திற்கான வெள்ளையறிக்கையை சி.டி.ஆர். நிர்மல்குமார் வெளியிட்டுள் ளார்.

வெளிப்படைத்தன்மையற்ற வெள்ளை அறிக்கை! செந்தில் பாலாஜி விமர்சனம்

தவெக அரசு வெளியிட்ட மின்சார வாரிய வெள்ளை அறிக்கையில் செலவினங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் களைச் சந்தித்துப் பேசிய அவர், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது மின்சாரத்துறையின் கடன் ரூ. 1.59 லட்சம் கோடியாக இருந்தது என்றும், அதிமுக விட்டுச்சென்ற இந்தக் கடனுக்கான வட்டியாக ஆண்டுதோறும் ரூ. 15,000 கோடி செலுத்தினோம் என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் ரூ. 58,534 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை திமுக ஆட்சியில் ரூ. 34,447 கோடியாகக் குறைத்ததை தவெக வெள்ளை அறிக்கையே ஒப்புக்கொள்வதாகக் கூறிய அவர், இந்த சாதனையை மறைப்பதற்காகவே தங்களுக்கு வசதியான விதத்தில் வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார். மின் உற்பத்தி திறன் கடந்த ஐந்தாண்டுகளில் 9,032 மெகாவாட் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், 423 துணை மின்நிலையங்கள் அறிவிக்கப்பட்டு பலவற்றுக்கு பணிகள் நடைபெற்று வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மின்தேவை 2019-இல் 94,000 மில்லியன் யூனிட்டிலிருந்து 2024-ல் 1.16 லட்சம் மில்லியன் யூனிட்டாக உயர்ந்த போதிலும், தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டது என்பதையும் நினைவூட்டியுள்ளார். தற்போது முதலமைச்சர் விஜய் பணி ஆணை வழங்கியவர்கள், தவெக ஆட்சியில் தேர்வானவர்கள் அல்ல; திமுக ஆட்சியில் கடந்த ஆகஸ்டில் தேர்வு நடத்தப்பட்டவர்களுக்கே இப்போது பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். குற்றச்சாட்டுகளை கூறுவதென்றால் ஆதாரத்தோடு கூறவேண்டும்; ஆதாரமின்றி பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்தக்கூடாது என்றும், மின்சாரத்துறை செலவினங்கள் மற்றும் வருவாய் குறித்து வகைவாரியாக வெள்ளை அறிக்கையில் வெளியிட வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.