அரசு ஊழியர்கள் உடை விவாதம்- கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி மாதர் சங்கம் விமர்சனம்!
yesterday

அரசு ஊழியர்கள் உடை விவாதம்- கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி மாதர் சங்கம் விமர்சனம்!

சென்னை, நவ. 3 –அரசு ஊழியர்களின் உடை குறித்துப் பொருத்தமற்ற விவாதத்தைத் தொடங்காமல், மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கும் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் தீர்வு காண்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்துச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் வாரம் ஒரு நாள் மரபு உடையில் பணிக்கு வர வேண்டும் என்ற முடிவைத் தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துஉள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

உடை என்பது அவரவர் விருப்பம், வசதி மற்றும் தனிநபர் சுதந்திரம் சார்ந்தது எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், பண்பாடு என்ற பெயரில் கட்டுப்பாடுகளை விதிப்பது ஆணாதிக்கச் சிந்தனையின் தொடர்ச்சி எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். பெண்களின் வசதி, பாதுகாப்பு மற்றும் பணிச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமேதவிர, உடை என்பது பணித்திறனையோ சமூகப் பொறுப்பையோ தீர்மானிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளும்; அரசு ஊழியர்களின் பணிச்சுமை, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமை, ஒப்பந்த ஊழியர் பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இச்சூழலில், உடை தொடர்பான விவாதத்தை முன்னெடுப்பது உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும்.

எனவே, தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் இத்தகைய ஆலோசனைகளைக் கைவிட்டு, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என மாதர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.