தீக்கதிர் முக்கிய செய்திகள்
20 May 2026, 11:25 pm

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்!

சென்னை, மே 20 - தமிழக சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகமானது, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் 13 உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சியமைத்தது. முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான 10 பேர் அமைச்சர் களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், தவெக மற்றும் கூட்டணிக் கட்சியை சார்ந்த மேலும் 18 பேர் ஆளுநர் மாளிகையில், வியாழ னன்று (மே 21) காலை 10.30 மணிக்கு அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய 2 பேர் பதவி யேற்பார்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். அமைச்சரவை யில் சேருமாறு விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது. இவர்கள் தவிர, அதிமுக-வைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ரூ. 2.90 கோடியில் 40 புதிய ஆம்புலன்ஸ்-ஜீப்கள் முதல்வர் துவங்கி வைத்தார்

சென்னை, மே 20 - தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ. 2.90 கோடி மதிப்பீட்டில் வாங்கப் பட்டுள்ள 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப் வாகனங்களின் சேவையை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புதன்கிழமை மே 20 அன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், வாகனங்களை இயக்கவுள்ள ஓட்டுநர் களுக்கு சாவிகளை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்வின் சிறப்பம்சமாக, முதலமைச்சர் விஜய் ஒரு ஆம்புலன்ஸ் ஜீப்பை தானே ஓட்டி சோதனை செய்தார்.

நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு! அமைச்சர் திட்டவட்டம்

சென்னை, மே 20 - நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரும் நிலைப்பாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் விலகவில்லை என்றும், இது குறித்து ஒன்றிய பாஜக அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார். அவர், புதனன்று (மே 20) சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது,” என்றும்; “’ஒரே நாடு ஒரே தேர்வு’ என்ற கொள்கை மாநில உரிமைக்கு முரணானது,” என்றும் கூறினார். மேலும், போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக முதல மைச்சர் தனிப்பிரிவை உருவாக்கி உள்ளதாகவும், ஆன்லைன் மூலமாக போதைப் பொருட்கள் கிடைப்பதை தடுக்க, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரி வித்தார்.

சிங்கப்பெண் படைக்கு பவானீஸ்வரி நியமனம்

சென்னை, மே 20 - தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பெண் சிறப்புப் படை ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். சிவில் சப்ளைஸ் சிஐடி டி.ஐ.ஜி.யாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக ப்ரவீன்குமார் அபிநபு நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சி புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய கண்காணிப் பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

‘போர்வாள்’ புதிய பத்திரிகை தொடங்கினார் பழனிசாமி

சென்னை: அதிமுகவின் அதி காரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ தற்போது எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையி லான அணியின் கட்டுப் பாட்டிற்கு சென்றுள்ளது. இதன் விளைவாக, நாளிதழில் ‘நிறுவனர் எடப்பாடி பழனிசாமி’ என்று இடம் பெற்று வந்த பெயர் ‘நிறுவனர் எஸ்.பி. வேலுமணி’ என மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், எடப்பாடி கே. பழனிசாமி தலைமை யிலான அணி ‘போர்வாள்’ என்ற புதிய நாளிதழை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத் தில் புதனன்று அறிமுகப் படுத்தினார்.