மேகதாது அணைக்கு எதிராக சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம்!
19 Jun 2026, 8:47 pm

மேகதாது அணைக்கு எதிராக சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம்!

சென்னை, ஜூன் 19 - கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

காவிரி நதிநீரில் தமிழகத்தின் பங்கைப் பறிக்கும் கர்நாடகத்தின் மேகதாது அணை முயற்சியைக் கண்டித்து, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இத்தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.

“காவிரி நடுவர் மன்றம் (2007) மற்றும் உச்ச நீதிமன்றத்தின் (2018) இறுதித் தீர்ப்புகளை மதிக்காமலும், பிற மாநிலங்களின் இசைவு மற்றும் ஒன்றிய அரசின் அனுமதியின்றியும் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்ட முயல்வதை இந்த பேரவை கடுமையாக எதிர்க்கிறது. கண்டனத்தை தெரிவிக்கிறது.

காவிரிப் படுகை பற்றாக்குறை படுகை என்பதால், இத்திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்தவொரு அனுமதியை யும் ஒன்றிய அரசு வழங்கக் கூடாது என்றும், கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை நீர்வளக் குழுமம் பரிசீலிக்கக் கூடாது என்றும் தீர்மானம் வலியுறுத்துகிறது. அந்த வகையில், தமிழக விவசாயிகளின் நலன் காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பேரவை ஆதரவளிக்கிறது” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்காக அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் கேட்டுக்கொண் டார்.

தீர்மானம் மீதான விவாதத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, பாமக, மமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர் களும் பங்கேற்று பேசினர். தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மேகதாது பிரச்சனைக்காக ‘தனி நடுவர் மன்றம்’ அமைக்க வலியுறுத்த வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்த நிலையில், அதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர், தீர்மானத்தில் இணைக்கப்படும் என்று அறிவித்தார்.

இறுதியாக, திருத்தப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.

மேகதாது அணைக்கு எதிராக அதிமுக ஆட்சிக் காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது, 2014 டிசம்பர் 5 மற்றும், 2015 மார்ச் 27 ஆகிய தேதிகளி லும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்ச ராக இருந்தபோது, 2018 டிசம்பர் 6-ஆம் தேதியும், திமுக ஆட்சியில் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது 2022 மார்ச் 21 அன்றும் மேகதாது அணைக்கு எதிராக 4 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தற்போது 5-ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் : சிபிஎம்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தீர்மானத்தை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ஆர். செல்லசுவாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இதுபோன்ற தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் இதுவரை பலமுறை நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன என்றும், தமிழ்நாட்டு விவசாயிகளும் மக்களும் இந்த விவகாரத்தில் பல கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார். ஆயினும் மீண்டும் மீண்டும் மேகதா துவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு அடம் பிடிப்பதை எந்த நிலையிலும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதிபடக் கூறினார்.

காவிரி ஆற்றின் தண்ணீ ரையே தமிழ்நாடு முழுமை யாக நம்பியிருக்கிறது என்றும், டெல்டா பகுதி மட்டுமன்றி பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த நீரையே நம்பி வாழ்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டிய செல்லசுவாமி, இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரையும், காற்றையும் யாரும் தடுக்க முடியாது என்றும், அப்படி தடுக்க நினைத்தால் மனித வாழ்வே அழிந்துவிடும் என்று எச்சரித்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கூட மதிக்க மாட்டோம் என்று கர்நாடக அரசும், ஆட்சியாளர்களும் அடம்பிடிக்கும் நிலையில், அவர்களின் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில், தவெக தனது முதல் கூட்டத் தொடரிலேயே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதாகவும், விவசாயிகளுக்காகவும் நீதிக்காகவும் தொடர்ந்து இந்தப் பேரவை குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 16-வது கூட்டத்தொடருக்கான மாற்றுத் தலைவர்கள் பட்டியலை பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். அதன்படி ரா. விஜய சரவணன், சத்திய பாமா (தவெக), டி. லதா (சிபிஎம்), காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் (திமுக), தளவாய் சுந்தரம் (அதிமுக) மற்றும் தாரகை கத்பட் (காங்கிரஸ்) ஆகியோர் மாற்றுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.