மேகதாது அணை முயற்சியை ஒருபோதும் ஏற்க முடியாது
19 Jun 2026, 9:47 pm

மேகதாது அணை முயற்சியை ஒருபோதும் ஏற்க முடியாது

சென்னை, ஜூன் 19 - காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதி யில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற் சிக்கு எதிராக, தமிழக சட்டமன்றத்தில், வெள்ளிக்கிழமையன்று அரசினர் தனித்தீர் மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்ன தாக, இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று அரசியல் கட்சித் தலைவர்கள் பேசியதாவது:

‘அரசின் முயற்சிகளுக்கு திமுக துணை நிற்கும்’

முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகையில், “மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைபாடு. எங்கள் கூட்டணியில் இருந்த கட்சி கர்நாட கத்தில் ஆட்சி புரிந்த போதும் அன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அணை கட்டு வதை கடுமையாக எதிர்த்தார். திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்ற கருத்தை முன்வைத்து ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பினார். திமுக அரசின் தொடர் எதிர்ப்பின் காரண மாகத்தான் மேகதாதுவின் திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. அந்த வகையில், மேகதாது விவகாரத் தில் தமிழக அரசின் அனைத்து சட்டரீதியான முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும். அனைத்துக் கட்சி சட்டமன்ற மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தில்லி சென்று பிரதமரிடம் இந்த தீர்மானத்தை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

‘போராடியே காவிரி நீரை பெற்று வருகிறோம்’: அதிமுக

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகையில், “காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பை பெற்றுத் தந்தது அதிமுக ஆட்சிதான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2015-இல் மேகதாது திட்டத்தை செயல் படுத்தக்கூடாது என கடிதம் வழங்கி, பின்னர் நேரில் பிரதமரை சந்தித்தும் வலியுறுத்தினார். மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாட கமானது, நீர்ப் பற்றாக்குறை காலங்களில் முழு நீரையும் தாமே பயன்படுத்திக் கொள் ளும் ஆபத்து உள்ளது. தமிழ்நாடு பாலை வனமாகும். எனவே உள்நோக்கம் கொண்ட இந்த திட்டத்தை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை அதிமுக ஒருமனதாக ஆதரிக் கிறது” என்று தெரிவித்தார்.

‘கர்நாடகத்தை கடுமையாக கண்டிக்கிறோம்’: காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் பேசுகையில், “தமிழ் மக்க ளின் உயிர்நாடி காவிரியை வஞ்சிக்கும் கர்நாடக அரசின் ஒருதலைப்பட்சமான நடவ டிக்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. மேகதாது திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை காங்கிரஸ் உறுதியாக முன்வைக்கிறது” என்று தெரிவித்தார்.

‘கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது’: சிபிஐ

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் டி. ராமச்சந்திரன், “கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், ‘அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாட்டுக்கு உரிமை கிடையாது’ என்று கூறுவது கண்டனத்துக் குரியது, இந்திய ஜனநாயகத்திற்கு எதிரா னது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கே முரணானது. தமிழ் நாட்டில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றி ணைத்து சட்டரீதியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும்” என்றார்.

‘28 மாவட்டங்கள் காவிரியை நம்பி உள்ளன’: பாமக

பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி பேசுகையில், “தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் காவிரி நீரை நம்பியே உள்ளன. ஐந்து கோடிக்கும் மேற்பட்ட மக்கள் காவிரி நீரை சார்ந்து வாழ்கின்றனர். மேகதாதுவில் அணை கட்டி னால் டெல்டா மாவட்டங்கள் பாலைவன மாக மாறிவிடும்” என்றார்.

‘நீர்மிகை மாநிலமாக மாற வேண்டும்’: தேமுதிக

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜய காந்த் உரையாற்றுகையில், “நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இன்று வரை காவிரிப் பிரச்சனை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறதே தவிர, இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்க வில்லை. தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றியது போல, நீர் மேலாண்மையிலும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். தேவைப்பட்டால் அனைத்துக் கட்சிகளையும் தில்லிக்கு அழைத்துச் சென்று உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.

‘அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு’: விசிக

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு, “இந்த விவ காரத்தில் தமிழ்நாட்டின் நியாயத்தை உணர்ந்து ஒன்றிய அரசு செயல்பட வேண்டும். தமிழர் உரிமை காக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்” என்றதுடன், “நதிகளை தேசியமயமாக்க வேண்டும்” என அம்பேத்கர் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார். ‘

கவனமாக செயல்பட வேண்டும்’: மதிமுக

மதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்தி ரன், “திமுக, அதிமுக மாறி மாறி நிலை நாட்டியிருக் கக்கூடிய காவிரி உரிமைகளை இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்” என்றார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவா ஹிருல்லா பேசுகையில், “கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி புரிந்தாலும், தமிழக மக்களி டம் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளக்கூடாது. தமிழ்நாடு முதல மைச்சர் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி தில்லி சென்று நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என்றார். “காவிரி குறுக்கே அணை கட்டுவதை தடுக்க சட்டரீதியான போராட்டங்கள் மட்டுமே கை கொடுக்கும்” என்று கொமதேக எம்எல்ஏ நித்தியானந்தன் கூறினார். மனிதநேய ஜன நாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, “மேக தாதுவுக்கு மாற்றாக, காமராஜர் காலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராசிமணலில் அணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பின்னர் கைவிடப் பட்ட திட்டத்தை, இரு மாநிலங்களின் ஒப்பு தலுடன் மீண்டும் செயல்படுத்தினால் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் இருவரும் பயன்பெறுவார்கள்” என்ற மாற்று யோச னையை முன்வைத்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் - எம்எல்ஏக்கள் எம்பிக்கள் குழு!

மேகதாது அணை விவகாரத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படுவது டன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று தில்லி சென்று பிரத மர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்தும் தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்ட தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரும்பா லான கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.