தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் விரோத நான்கு தொகுப்புச் சட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அமலாக்கக் கூடாது

1 Sept 2026, 8:31 pm
தொழிலாளர் விரோத நான்கு தொகுப்புச் சட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அமலாக்கக் கூடாது

தொழிலாளர் விரோத நான்கு தொகுப்புச் சட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அமலாக்கக் கூடாது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செப்டம்பர் 1 செவ்வாயன்று தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை, சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கைத்தறி-கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறை ஆகியவற்றுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ஆர். செல்லசுவாமி பங்கேற்று, தமிழக தொழிலாளர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளை ஆணித்தரமாக முன்வைத்தார்.

தொழிற்சாலைகளில் தொடரும் பழிவாங்கல் அரசியல்

தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தொழிலக பாதுகாப்பு-சுகாதார இயக்ககம், தொழிலாளர் ஆணையரகம் ஆகியவற்றில் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்பான தொழிற் தாவாக்கள், சமரச பேச்சுவார்த்தைகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ரசாயனம் சார்ந்த அபாயகரமான தொழிற்சாலைகள், பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் நலத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்; தொழில் முதலீடு-பொருளாதார வளர்ச்சியுடன் தொழிலாளர் நலனையும் இணைத்துப் பார்க்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்புச் சட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அமலாக்கக் கூடாது.

பன்னாட்டு நிறுவனங்களின் அடக்குமுறை

தமிழகத்தில் இயங்கும் உள்நாட்டு-பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும்போது, அதை ஏற்க மறுத்து நிர்வாகங்கள் பணிநீக்கம், பணியிடை நீக்கம், இடமாற்றம், சம்பளப் பிடித்தம் என பழிவாங்குவதாக அவர் கடுமையாக விமர்சித்தார். சங்கம் அமைத்த ஒரே காரணத்திற்காக சாம்சங் நிறுவனத்தில் 24 சங்க நிர்வாகிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதையும், உதிரிபாகம் தயாரிக்கும் எஸ்.ஹெச். எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 93 நிரந்தர தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதையும் அம்பலப்படுத்தினார். ஹூண்டாய் தொழிற்சாலையில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு போராடியதற்காக 78 பேர் சட்டவிரோதமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதில் தொழிலாளர் நலத்துறை உடனடியாகத் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டும். 40 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களில் சங்கம் அமைக்க அனுமதிக்கப்படாததால், அவர்களின் தேவைகளை வெளிப்படுத்த அரசே வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நமது தொழிலாளர் நலச் சட்டங்கள் அமலாவதை அரசு உறுதி செய்ய வேண்டும்; தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண 21 தொழில்வாரி நல வாரியங்களுக்கும் முத்தரப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம், பணிநேரம்: அமலாகாத சட்டங்கள்

பெரும்பாலான நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியம், 8 மணி நேர வேலை, சமவேலைக்கு சம ஊதியம், வார விடுமுறை, தேசிய பண்டிகை விடுமுறை, மகப்பேறு சட்டங்கள் அமலாகவில்லை. 8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிபவர்களுக்கு மிகைநேர ஊதியம் வழங்கப்படுவதில்லை; பெண் தொழிலாளர்களுக்கு மூன்று மகப்பேறு காலத்திற்கும் சம்பளத்துடன் விடுப்பு உறுதி செய்யப்பட வேண்டும். கடைகள்-வணிக நிறுவனங்களில் விற்பனையில்லா நேரங்களில் இளைப்பாறுவதற்கான இருக்கை வசதிச் சட்டத்தை, கேரளாவைப் போல கறாராக அமல்படுத்த வேண்டும். ஜவுளி, ஆடை, நகை, மளிகை, மின்னணு, அழகுசாதனம், காலணி கடைகளில் லட்சக்கணக்கான இளம் பெண்களும் இளைஞர்களும் மிகக் குறைந்த ஊதியத்தில், பணிப் பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும் இன்றி பணியாற்றுவதாக வேதனை தெரிவித்தார். இன்றைய விலைவாசிக்கேற்ப குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 நிர்ணயிக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

முறைசாரா தொழிலாளர்களின் அவலநிலையும் நல வாரியங்களும்

கட்டிடம்-கட்டுமானம், சுமைப்பணி, தையல், முடி திருத்துதல், சலவை, உணவு தயாரிப்பு, சாலையோர வியாபாரம், வாகன ஓட்டுநர் என நூற்றுக்கும் மேற்பட்ட முறைசாரா தொழில்களில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் சமூகப் பாதுகாப்புக்காக கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட 21 நல வாரியங்கள் செயல்பட்டு, சுமார் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாகப் பயன்பெறுகின்றனர். இதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துப் பணப்பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும்; கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.

தலைவர்கள் மீது வழக்கு: முதல்வர் தலையிட வேண்டுகோள்

தங்கள் நியாயமான உரிமைகளுக்காக ஜனநாயக, அமைதி வழியில் போராடிய தொழிலாளர்கள்-தொழிற்சங்கத் தலைவர்கள் மீது பதிவான காவல்துறை வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற முதலமைச்சரும் அரசும் தலையிட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் முதலமைச்சர் தலையிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியச் சட்டம், மகப்பேறு சட்டங்கள் முழுமையாக அமலாக்கப்பட வேண்டும்; பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க புகார் கமிட்டிகள் அமைக்க வேண்டும்.

நிர்வாக இயந்திரத்திலேயே காலிப்பணியிடங்கள்

தொழிலாளர் உதவியாளர் பணியிடங்கள் சுமார் 10 இடங்களிலும், தொழிலாளர் இணை ஆணையர் பணிநிலையில் 8-லும், தொழிலாளர் துணை ஆணையர் பணிநிலையில் 19-க்கும் மேலான இடங்களிலும் காலியாக உள்ளன. தொழிலாளர் நலத்துறை-தொழிலக பாதுகாப்புத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 2,269 பணியிடங்களில் 600-க்கும் மேற்பட்டவை காலியாக இருப்பதால், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகள் காலதாமதமாகக் கிடைப்பதாகச் சுட்டிக்காட்டி, உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுத் துறைகள்-அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் லட்சக்கணக்கான பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன; ஒப்பந்தம், வெளிமுகமை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற பெயரில் லட்சக்கணக்கான ஊழியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய முதலமைச்சரும் அரசும் தலையிட வேண்டும். பின்னலாடை, பஞ்சாலை, உதிரிபாகத் தயாரிப்பு தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகளைத் தொழிற்சாலை வளாகங்களுக்கு அருகில் அமைத்து, வீடு கட்டத் தொழிற்சாலைகளின் பங்களிப்புடன் மானியம் வழங்க வேண்டும். தமிழகத்தின் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் டிசம்பரில் முடிவடைந்த ஊதிய ஒப்பந்தம் ஜனவரியில் மீண்டும் கையெழுத்தாக வேண்டியிருந்தும் இதுவரை நிறைவேறவில்லை; 15 ஆண்டுகளாக நிரந்தரம் செய்யப்படாத அவர்களுக்கு உடனடியாகப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.

ஒப்பந்த முறையில் அழிக்கப்படும் நிரந்தர பணியிடங்கள்

தமிழக அரசுத் துறைகளில் நிரந்தர பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்தம், வெளிமுகமை முறையில் நியமிக்கப்பட்டு, நிரந்தர பணியிடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக ஒரு ஒப்பந்த தொழிலாளி தன் பணிக்காலம் முழுவதும் ஒப்பந்த தொழிலாளியாகவே பணியாற்றி ஓய்வு பெறும் நிலை தொடர்கிறது. புதிதாகப் பொறுப்பேற்ற அரசு மாற்றத்தை நோக்கிப் பயணிப்போம் என்று கூறியதை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட உலகமயம், தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளைக் கைவிட்டு, தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய அரசாகவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்போது பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் அரசாகவும் இந்த அரசு திகழ வேண்டும்.

கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் வேதனைக் குரல்

நைஸ் ரக கைநெசவு தொழிலாளர்களுக்கான பென்சன் தொகையை ரூ.1,200-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி, காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள அனைவருக்கும் பென்சன் வழங்க வேண்டும். மழைக்கால நிவாரணமாக மூன்று மாதங்களுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும். நலிந்து வரும் விசைத்தறி தொழிலாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டிலிருந்து 1500 யூனிட்டாகவும், கைத்தறி தொழிலாளர்களுக்கு 300-லிருந்து 450 ஆகவும், விசைத்தறிக்கு 1400 யூனிட்டாகவும் உயர்த்த வேண்டும். கன்னியாகுமரி, விருதுநகர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிகளில் நெசவாளர்கள் நெய்த வேட்டி, சேலைகளை அரசு முழுமையாகக் கொள்முதல் செய்து அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

பல்கலைக்கழக ஊழியர் முதல் வடிகால் வாரிய ஓய்வூதியர் வரை

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஹெல்பர் பணிப்பெயரில் ஆய்வகத் தொழில்நுட்பப் பணி செய்த ஊழியர்களை உயர்கல்வித் துறை மறுவகைப்படுத்தி மறுபகிர்வு செய்ததில், சுமார் 400 பேரில் 250 பேர் தலைமைச் செயலகத்தில் பணிபுரிகின்றனர், அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தோட்டக்கலை-வேளாண்மைத் துறைகளை ஒன்றிணைக்கும் திட்டம் பணி விஷயத்தில் முரண்பட்டிருப்பதால், அங்குப் பணிபுரியும் ஊழியர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னரே இணைக்க வேண்டும். 2015-ல் இ-சேவை-ஆதார் மையங்களில் நியமிக்கப்பட்ட தரவு உள்ளீட்டாளர்களுக்கு அரசாணை அறிவிக்கப்பட்ட போதிலும் குறைந்தபட்ச ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்பதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். மாநில ஊரக வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் சுமார் 18 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுவதாகவும், அவர்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் சுமார் 9,000 பேருக்கு நிலுவையிலுள்ள ஏழு அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பண்டிகைக்கால முன்பணங்களை உடனடியாக வழங்க வேண்டும்.

வழிபாட்டுத் தலங்களுக்கு கடும் விதிமுறைகள்: குமரி மக்களின் வேதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள்தொகையில் பாதிக்கு நெருக்கமாக வாழும் சிறுபான்மையினர் வழிபடும் தலங்களைப் புதிதாகக் கட்டவோ, பழையவற்றைச் சீரமைக்கவோ கடுமையான விதிமுறைகள் தடையாக உள்ளன, அவற்றைத் தளர்த்தி எளிமையான முறையில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆர். செல்லசுவாமி விரிவாக தொழிலாளர் மற்றும் சமூகப் பிரச்சனைகளை எடுத்துரைத்தார்.

(அப்போது குறுக்கிட்டு பதிலளித்த அமைச்சர் ஷாஜகான், குமரி மாவட்டத்திலிருந்து இது தொடர்பாகப் பல கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், அடுத்த திங்கள்கிழமை காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதில் மாவட்டத்தின் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தார்.)

கட்டிலில் சுமந்து சென்ற பிரசவ வேதனை: பட்டா இல்லா நிலத்தின் சாபம்

பின்னர் தொடர்ந்த செல்லசுவாமி, தனது பத்மநாபபுரம் தொகுதியில் ஆதிதிராவிடர்-பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் 22 மலைக் கிராமங்கள் உள்ளதாகவும், ஒரு ஊராட்சியில் மட்டும் 2,200 பேர் வசிப்பதாகவும் தெரிவித்தார். இம்மக்கள் சாதிச் சான்று பெறுவதில் பெரும் குழப்பமும் தேவையற்ற விதிமுறைகளும் தடையாக உள்ளதாகவும், அவர்கள் வைத்திருக்கும் நிலங்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்படவில்லை என்பதையும், சாலை, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதி இன்றி தவிப்பதையும் சுட்டிக்காட்டினார். சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக ஒரு பெண்ணை கட்டிலில் வைத்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பல மணி நேரம் சுமந்து சென்ற அவலநிலை இன்றும் தொடர்வதாகக் கூறி, அடிப்படைப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

(இதற்குப் பதிலளித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்று கிடைக்காத பிரச்சனை குறித்து தொடர்ந்து கோரிக்கைகள் வருவதாகவும், தான் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதலில் மேற்கொண்ட ஆய்வுப் பயணமே ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பழங்குடியினர் கிராமத்திற்கு எனவும், கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை மக்களும் இதே பிரச்சனை தெரிவித்ததாகவும் விளக்கினார். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 38-ல் 37 மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அடையாளம் காணப்பட்டு, 8,41,058 பேர் 2,43,840 குடும்பங்களாக வாழ்வதாகவும், சார் ஆட்சியர்-கோட்டாட்சியர் மட்டுமே சாதிச் சான்று வழங்கும் அதிகாரம் கொண்டவர்கள் என்பதால் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தற்போது சிறப்பு முகாம்கள் மூலம் 5,276 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு விரைவாக வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் உறுதியளித்தார்.)

கதர் வாரிய சொத்துக்கள்: அதிகாரிகளுக்கே தெரியாத நிலம்

தொடர்ந்து பேசிய செல்ல சுவாமி, கதர் வாரியம்-பனைவெல்லம் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும், அவை இருக்கும் இடம் கூடத் துறை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் தெரியாத நிலை உள்ளதாகவும் அதிர்ச்சி தெரிவித்தார். பாழடைந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான இச்சொத்துகளை உன்னிப்பாகக் கண்காணித்து மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையை நிறைவு செய்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.