தமுஎகச கலை இலக்கிய இரவு
17 Aug 2026, 10:52 pm

தமுஎகச கலை இலக்கிய இரவு

திருவாரூர், ஆக. 17- திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் கிளை சார்பில் நடைபெற்ற கலை இலக்கிய இரவு, சனிக்கிழமை சமூக நல்லிக்கணக்க பேரணியுடன் தொடங்கியது.

நிகழ்ச்சியில், திருவாரூர் நகர் மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். குடந்தை தடம்பதி குழுவினரின் தப்பாட்டத்துடனும், நூற்றுக்கும் மேற்பட்டோரின் அணிவகுப்புடனும், தமிழ் தென்றல் திரு.வி.க மற்றும் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, கலை இலக்கிய சமூக நல்லிணக்க பேரணி திருவாரூரில் முக்கிய வீதிகள் வழியாக வந்து, கீழவீதியில்அமைக்கப்பட்டிருந்த கலை இலக்கிய இரவு மேடையில் நிறைவடைந்தது.தொடர்ந்து கிளைத் தலைவர் பைரவநாதன் தலைமை ஏற்க, தியாகராஜன், வரதராஜன், பகவன்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை ஏற்க, கிளைச் செயலாளர் பொன். மகாலிங்கம் வரவேற்க, பொருளாளர் அசோக் ராஜ் நன்றி கூறினார். நூற்றாண்டு நாயகர்கள் பிடல் காஸ்ட்ரோ மற்றும் பி.எஸ். தனுஷ் கோடி உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட பின் தொடங்கிய கலை இலக்கிய இரவு நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் தொடக்க உரையினை மாநிலப் பொருளாளர் கவிஞர்.சைதை ஜே வழங்கினார். மேலும், மாநிலத் தலைவர் கவிஞர்.மதுக்கூர் இராமலிங்கம், மாநில பொதுச் செயலாளர் களப்பிரன் ஆகியோரின் உரை வீச்சு, மக்கள் இசை பாடல்கள் பாடகர் புதுச்சேரி உமா மாநில துணைப் பொதுச் செயலாளர் நிகழ்ச்சிகளுடன் கவிச்சரம், சிலம்பாட்டம், கரகாட்டம், இனிய மித்ரா குழுவினரின் நாட்டுப்புற நடனம், நாடகம், மற்றும் பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு என ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சௌந்தரராஜன், மாவட்டச் செயலாளர் முனைவர் வெங்கடேசன், யு.எஸ். பொன்முடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.