கோவில் திருவிழாவில் சாதியப் பாகுபாடு: பாதிக்கப்பட்ட பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கள ஆய்வு
23 Jul 2026, 10:27 pm
<p><strong>கோவில் திருவிழாவில் சாதியப் பாகுபாடு: பாதிக்கப்பட்ட பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கள ஆய்வு</strong></p><p>திருவாரூர், ஜூலை 23- திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் ஒன்றியம், ஆவூர் நெடுவாசல் கிராமத்தில் கடந்த மாதம், கோவில் திருவிழா காரணமாக சாதி ஆதிக்கத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்ட சந்தானம் என்பவர் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உள்ளார். மாவட்ட ஆட்சியர் இதில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். வலங்கைமான் வட்டம் ஆவூர்-நெடுவாசல் கீழத் தெருவில் வசித்து வரும் பட்டியல் இன மக்கள் கடந்த 2025 ஆம் ஆண்டு தங்கள் பகுதியில் புதிதாக கட்டிய ஸ்ரீ முத்துகாளியம்மன் ஆலய விழாவிற்கு கும்பாபிஷேகம் செய்து பொது சாலை வழியாக முளைப்பாரி, பால்குடம், காவடி எடுத்து வரும் போது, அப்பகுதியில் சாதி ஆதிக்கத்தினர் சிலர், இந்த தெரு வழியாக வரக் கூடாது என்று சாதிய வன்மத்துடன் தடுத்துள்ளனர். உடனே காவல் துறையினர் கண்டித்ததை அடுத்து சாதி வெறியர்கள் அமைதியாக திரும்பிச் சென்று விட்டனர். இந்த ஆண்டு கோவில் திருவிழா வை ஒட்டி, காவல்துறையினரிடம் அனுமதி வாங்கி, சென்ற ஆண்டு ஊர்வலமாக வந்த பொது வழியில் பால்குடம் உள்ளிட்டவை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் திருவிழாவை நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தை, சாதிஆதிக்கத்தினர் மனதில் வைத்து, இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய தோழர் கலியன் மகன் சந்தானம் என்ற நபரை திட்டமிட்டு கடந்த ஜுன் 26 அன்று மாலை 4 மணி அளவில் நெடுவாசல் கலத்துக்கு போகும் பாதையில், மறித்து சாதி வெறி பிடித்த கும்பல் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி கை,காலை உடைத்து உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட சந்தானம் மன அளவில் பாதிக்கப்பட்டு, தனக்கு எந்தவித நியாயமும் கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலில் உள்ளார். மேலும், சம்பவம் அறிந்தும் வலங்கைமான் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என்பது அதைவிட கொடுமையான செயலாகும். இச்சம்பவம் குறித்து அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக நெடுவாசல் கிராமத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு செய்த பின், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா ளர் கே.தமிழ்மணி தெரிவிக்கும் போது, “பாதிக்கப்பட்ட சந்தானம், மருத்துவமனையில் இருந்து இன்னும் வரவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், நடந்த சம்பவம் மிக கொடூரமாக உள்ளது. ஆகவே சந்தானத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சந்தானத்தை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதில் தனி கவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவாரூர் மாவட்டக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளார். கள ஆய்வின்போது சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.இளங்கோவன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.</p>
