திருவண்ணாமலையில் சோகம்: சமுத்திரம் ஏரியில் மூழ்கி விடுதி காப்பாளர் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
4 hours before
<p>திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் மற்றும் விடுதி காப்பாளர் உட்பட 5 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இவ்விடுதியில் தங்கியிருந்த மாணவிகளான விஜயலட்சுமி, அல்லி, பூமிகா, வள்ளியம்மாள் மற்றும் விடுதி பாதுகாவலர் தேன்மொழி ஆகிய 5 பேரும், திங்கள்கிழமையான இன்று (நவ.9) விடுமுறை தினத்தை முன்னிட்டு அருகில் உள்ள சமுத்திரம் ஏரிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், நீரில் மூழ்கிய 5 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காகத் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே தீவிர சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
