திருத்தணியில் பழங்குடியின சிறுவன் கொத்தடிமையாக நடத்தப்பட்டு படுகொலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!
13 Jun 2026, 11:07 pm

திருத்தணியில் பழங்குடியின சிறுவன் கொத்தடிமையாக நடத்தப்பட்டு படுகொலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!

திருத்தணி, ஜூன் 13- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 15 வயது பழங்குடியின சிறுவன் கொத்தடிமையாக நடத்தப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்திற்குத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதுடன், குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. திருத்தணி தாமரைக்குளத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் வெண்ணிலா மற்றும் அவரது மகன்கள், பாலமுருகன் என்பவரது பண்ணை வீட்டில் தங்கி கொத்தடிமைகளாக வேலை செய்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 13 அன்று ஆடு, கோழிகள் காணாமல் போனதாகக் கூறி, பண்ணை உரிமையாளர் பாலமுருகன், அவரது மனைவி புவனா, மகள் காமாட்சி ஆகியோர் 15 வயது சிறுவன் சுரேஷைத் தூணில் கட்டி வைத்து இரும்பு கம்பி மற்றும் சுத்தியலால் தாயின் கண் எதிரே அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை அங்கேயே புதைத்து சிமெண்ட் தளம் அமைத்து மூடியுள்ளனர். இச்செய்தி வெளியில் வராமல் இருக்க வெண்ணிலாவையும் அவரது இரு குழந்தைகளையும் பண்ணை வீட்டிலேயே அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர். அங்கிருந்து தப்பிய வெண்ணிலா, ஜூன் 10 அன்று திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே இக்கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.

கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தற்போது கொலை வழக்கு மற்றும் பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாலமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட வெண்ணிலா மற்றும் அவரது குழந்தைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் நேரில் ஆறுதல் கூறினர். இவ்வழக்கில் இதுவரை எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் ஆகியவை சேர்க்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர், உடனடியாக இந்தச் சட்டப்பிரிவுகளை இணைத்துக் குற்றவாளிகள் பிணையில் வெளிவர முடியாதபடி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மறுவாழ்வு உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.