15 நாட்களாக குடிநீர் வரவில்லை: பொதுமக்கள் முற்றுகை
1 Nov 2026, 1:32 am

15 நாட்களாக குடிநீர் வரவில்லை: பொதுமக்கள் முற்றுகை

திருப்பூர், அக்.31 -திருப்பூர் மாநகராட்சி 43 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இல்லாததை கண்டித்து பொது மக்கள் பூச்சக்காடு மேல் நிலை குடிநீர் தொட்டி விநியோக பகுதியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் 43 வது வார்டு பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள்பூச்சாக்காடு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி குடிநீர் விநியோக மையத்தை சனியன்று முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அப்பகுதி குழாய் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சமீபத்தில் பெய்துள்ள மழை காரணமாக ஆற்று குடிநீர் மிகவும் கலங்கலாக, சேறு கலந்து வருவதால் இங்கு விநியோகம் தாமதமாகிறது என்று கூறினார். ஆனால் வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் வழங்காத நிலையில் இங்குள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து லாரிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நீர் கலங்கலாக இருந்தால் அது மட்டும் எப்படி சாத்தியம் என்று பெண்கள் கேள்வி எழுப்பினர். மேலும் பூச்சக்காடு வீதிகள், செங்குந்தபுரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் 8 நாள் முதல் 15 நாள் வரை கால இடைவெளியில் தண்ணீர் விடப்படுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்கள், மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இந்த பாரபட்சமான நிலையைஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து குழாய் ஆய்வாளர், உடனடியாக இந்தப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகைபோராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அதேசமயம் உறுதியளித்தபடி குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்வோம் என்றும்எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.பானுமதி, தெற்கு மாநகரப் பொருளாளர் செண்பகவல்லி, கே.வி.ஆர் நகர் சங்க தலைவர் பிரியா, சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிவராமன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்மாவட்டத் தலைவர் பா.ஞானசேகர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தெற்கு மாநகர துணைச்செயலாளர் கிஷன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.