திருப்பூர் மாவட்ட ஆட்சியரை மாற்றக்கோரி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
19 Aug 2026, 11:25 pm

திருப்பூர் மாவட்ட ஆட்சியரை மாற்றக்கோரி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.19 -திருப்பூர் மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கோரி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் தென்னம்பாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாநகரின் பல்லடம் சாலை, காங்கேயம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் காலை நேரங்களில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோர கடை அமைப்பதற்கு எதிர்ப்புதெரிவித்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

பல்லடம் சாலையில் உழவர் சந்தையை அடுத்து 100 மீட்டருக்கு அப்பால் கடை நடத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது அந்த பகுதிகளில் கடை அமைக்க கூடாது என நெடுஞ்சாலை துறை சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருப்பூரில் சாலையோர வியாபாரிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். நகர விற்பனை குழு உள்ளிட்ட கமிட்டிகளை அரசாணையின்படி அமைக்க வேண்டும் எனம் செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் சிஐடியு சார்பில் இந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆனால் அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் முறையாக பதிலளிக்காமலும், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளைமேற்கொள்ளாமல் அவமதிப்பு செய்ததாக வியாபாரிகள் குற்றம் சாட்டினர்.இதையடுத்து திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் சிஐடியு திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.பாலன் தலைமையில் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த நிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் சாலையோர வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திருப்பூர் தெற்கு போலீசார், மீண்டும் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியல் போராட்ட முயற்சியை கைவிட்டனர். சாலையோர வியாபாரிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து வாழ்வாதாரத்தை பாதுகாக்கத் தவறிய திருப்பூர் மாவட்டஆட்சியரை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும், திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முழக்கம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.