திருப்பூர் தெற்கு தொகுதியில் 21 வார்டு குறைதீர்ப்பு பெட்டிகள்: எம்எல்ஏ பாலமுருகன் பேட்டி
16 Jun 2026, 12:04 am
<p><strong>திருப்பூர் தெற்கு தொகுதியில் 21 வார்டு குறைதீர்ப்பு பெட்டிகள்: எம்எல்ஏ பாலமுருகன் பேட்டி</strong></p><p>திருப்பூர், ஜூன் 15 திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள 21 வார்டுகளில் குறைதீர்ப்பு பெட்டியை எம்.எல்.ஏ., பாலமுருகன் அறிமுகம் செய்து வைத்தார். திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இத்தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் தெரிவித்தார். திங்களன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், முதற்கட்டமாக மாநகர காவல் ஆணையரை சந்தித்து, திருப்பூரில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தினார். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் குடிநீர், தெருவிளக்கு மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் விநியோகம் உறுதி செய்யவும், பழுதடைந்த தெரு விளக்குகளை உடனடியாக சரி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார். தொடர்ந்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘குறைதீர்ப்பு பெட்டி’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் 5-10 முக்கிய இடங்களில் குறைதீர்ப்பு பெட்டிகள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் மனுக்கள் அளிக்கவும், கியூ ஆர் குறியீடு மூலம் புகார்களை பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக கூறினார். தினசரி சேகரிக்கப்படும் மனுக்கள் அந்தந்த பகுதி கிளைச் செயலாளர்கள் அல்லது வார்டு செயலாளர்கள் மூலம் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவாக தீர்வு காணப்படும், குறிப்பாக முதியவர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்ல முடியாத மக்களின் நலனுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். திருப்பூரின் முக்கிய பிரச்சினையாக உள்ள குப்பை மேலாண்மைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 முதல் 6 மாதங்களுக்குள் குப்பை பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும், என்றார். மேலும், பொதுமக்களின் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும், வார்டு நிர்வாகிகள் மூலம் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் தெரிவித்தார்.</p>
