தீண்டாமையை கடைப்பிடிக்கும் தலைமை ஆசிரியர்
1 hour before

தீண்டாமையை கடைப்பிடிக்கும் தலைமை ஆசிரியர்

திருப்பூர், அக்.8 -திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளக்கோவில் நகரம் மேற்கு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர் கு.சாந்தி என்பவர் சாதிய மனநிலையுடன் தீண்டாமையை கடைப்பிடிப்பதாகவும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவர் ச.கருப்பையா திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியில் இயங்கும் வெள்ளக்கோவில் மேற்கு நடுநிலைப்பள்ளியில் சுமார் 180 மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பாக இப்பள்ளியின் தலைமையாசிரியராக கு.சாந்தி என்பவர் பொறுப்பேற்று பள்ளியை நடத்தி வருகிறார்.

வெள்ளக்கோவில் மேற்கு நடுநிலைப்பள்ளி கடந்த காலங்களில் தமிழக அரசால் ”சிறந்த பள்ளி”யாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழும் பெற்றுள்ளது. ஆனால் இப்பள்ளியில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் பள்ளி தலைமையாசிரியர் கு.சாந்தியின் சாதிய மனநிலையாலும், சாதிய ஒடுக்குமுறைகளாலும் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் இருந்து 30 மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறி வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.குறிப்பாக, இப்பள்ளியில் படிக்கக்கூடிய பெரும்பான்மையான பட்டியலின மாணவர்களை பள்ளியை சுத்தம் செய்ய சொல்வதும், பள்ளியின் கழிவறைகளை கழுவச் சொல்வதும் ஒரு வாடிக்கையாக செய்து வருகிறார். இச்சம்பவங்கள் குறித்து கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி அன்று ஒரு சமூக ஆர்வலரால் பள்ளி பார்வயிடப்பட்டு, பட்டியலின மாணவர்கள் பள்ளியை சுத்தம் செய்யும் அவலத்தினை நேரடியாக பார்த்து புகைப்படங்கள் எடுத்து பள்ளிக்கல்வித் துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

எனினும், எந்தவிதமான நடவடிக்கையும் பள்ளிக்கல்வித் துறையினரால் எடுக்கப்படவில்லை. உயர் சாதியை சேர்ந்த தலைமையாசிரியர் சாந்தியை பாதுகாத்து வருகிறார்கள். மேலும் வெள்ளக்கோவில் நகராட்சி 4ஆவது வார்டு சார்பாக வெள்ளக்கோவில் மேற்கு நடுநிலைப்பள்ளி மாணவர்களின் குடிநீர் தேவைக்காக குளிர்சாதனப் பெட்டியை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இந்த குளிர்சாதன பெட்டியையை மாணவர்களின் பொது பயன்பாட்டுக்கு வைக்காமல் தலைமையாசிரியரின் அறையிலேயே வைத்துக் கொண்டு தன்னுடைய சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டும் உள்ளே வந்து தண்ணீரை பிடித்து பட்டியலின மாணவர்களுக்கு கொடுக்கலாம் என்ற தீண்டாமை வடிவத்தை கடைபிடித்து வருகிறார்.

அத்தோடு, பள்ளியில் பயிலும் மாணவர்களின் தேர்வுக்காக கட்டாயப்படுத்தி ஒவ்வொரு மாணவர்களிடமும் அரசு விதிமுறைக்கு எதிராக கட்டணமாக தலா ரூ.30 வசூலித்து வருகிறார். பள்ளி மாணவர்களின் விளையாட்டு வகுப்புகளில் மாணவர்களை விளையாட அனுமதிக்கப்படுவதில்லை.

எனவே, இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு உடனடியாக வெள்ளிக்கோவில் மேற்கு நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் கு.சாந்தியின் தீண்டாமை செயல்பாடுகளின் குறித்தும் மாணவர்களின் நலன் கருதியும் உரிய விசாரணை நடத்தி அவரை பணிநீக்கம் செய்வதுடன், வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் 2025இன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ச.கருப்பையாகேட்டுக் கொண்டுள்ளார்.