மனிதக்கழிவுகளை உபகரணமின்றி அகற்றச் சொல்வதாக தூய்மைப் பணியாளர் புகார்
4 Jun 2026, 10:33 pm
<p>திருப்பூர், ஜூன் 4-</p><p>திருப்பூரில் மனிதக் கழிவுகளை உரிய உபகரணமின்றி அகற்றச் சொல்வதாக தூய்மைப் பணியாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.</p><p>இது குறித்து ஆட்சியரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரன் என்ற தூய்மைப் பணியாளர் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறேன். தற்போது திருப்பூர் குமரன் பேருந்து நிலைய பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இப்பேருந்து நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச சிறுநீர் கழிப்பிடம் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் சிலர் மலம் கழித்து விடுவதால், விடியற்காலையில் பணிக்கு வரும்போது அந்த இடம் முழுவதும் மனிதக்கழிவுகளால் நிறைந்து காணப்படுகிறது. அந்த கழிவுகளை அள்ளுவதற்கோ அல்லது சுத்தம் செய்வதற்கோ மாநகராட்சி எவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களோ, கருவிகளோ வழங்கவில்லை. எனினும் மேஸ்திரி கோபால் என்பவர் அப்படியே பணி செய்யச்சொல்லி வற்புறுத்துவதாக சந்திரன் குற்றம்சாட்டினார்.</p><p>இதுகுறித்து ஆய்வாளரிடம் முறையிட்ட போது, விரைவில் சரி செய்து தருவதாகவும், அதுவரை சுத்தம் செய்யுமாறு கூறுவதாகவும் தெரிவித்தார். பணி செய்ய மறுத்தால், பணிக்கு வந்திருந்தாலும் ’ஆப்சென்ட்’ (விடுப்பு) போட்டு விடுவதாக மேஸ்திரி கோபால் மிரட்டுவதாகவும் கூறினார். தனக்கு நேரும் இந்த மன உளைச்சலுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
