தொழில் தொடங்குவதில் பிரச்சனை: நண்பரைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
19 Aug 2026, 11:40 pm

தொழில் தொடங்குவதில் பிரச்சனை: நண்பரைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர், ஆக.19 -திருப்பூரில் தொழில் தொடங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் நண்பரை கொலை செய்தவருக்கு திருப்பூர் எஸ்சி, எஸ்டி பிரிவு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த கொலையை மறைத்த மேலும் ஐவருக்கு தலா ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.திருப்பூரை அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருடைய தம்பி அசோக்குமார் (வயது 30). இவர் திருப்பூர் புஷ்பா தியேட்டர் பகுதியில் உள்ள செல்போன் ஷோரூமில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய நண்பரான திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த நகீம் (32) என்பவருடன் சேர்ந்து துரித உணவகம் தொடங்குவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தொழில் தொடங்குவதில் அவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று இரவு நண்பர் நகீமுடன், அசோக்குமார் வெளியே சென்றவர் மறுநாள் காலையில் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து தினேஷ்குமார், தனது தம்பி மற்றும் நகீமின் செல்போன் எண்களை தொடர்பு கொண்டபோது அவை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன. உடனே தினேஷ்குமார் அவரை தேடிச் சென்றபோது, அவினாசிகவுண்டம்பாளையம் ஏ.பி.டி. லே அவுட்டில் உள்ள, நகீமின் நண்பர் வீட்டுக்குள் தலையில் கல்லால் தாக்கப்பட்டும், கழுத்துப்பகுதியில் கடப்பாரை கம்பியால் குத்தப்பட்டும் அசோக்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது.இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகீம், மற்றும் கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிக்காமல் இருந்த நகீமின் மனைவி சகானா (32), நண்பர்களான திருப்பூர் பயர் சர்வீஸ் காலனியை சேர்ந்த ஆல்வின் (32), அபினயலட்சுமி (32),வினோத்குமார் (35), பிலால் (35) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாயன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அசோக்குமாரை கொலை செய்த குற்றத்துக்காக நகீமுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், கொலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த குற்றத்துக்காக ஆல்வின், சுகானா, அபினநயலட்சுமி, வினோத்குமார், பிலால் ஆகிய 5 பேருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் பூங்கொடி ஆஜராகி வாதாடினார்.