முடங்கும் அடிப்படை பணிகள்!
45 minutes before

முடங்கும் அடிப்படை பணிகள்!

உள்ளாட்சி அமைப்புகளின் உண்மையான வளர்ச்சியும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளும் அரசின் நிதி ஒதுக்கீட்டை சார்ந்துதான் இயங்குகின்றன. ஆனால், கடந்த ஆறு மாத காலமாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், பெரும்பாலான வளர்ச்சிப் பணிகளும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளும் முடங்கிப் போயுள்ளன.

திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டு, திருமுருகன்பூண்டி நகராட்சி, வெள்ளகோவில், தளி பேரூராட்சி மற்றும் சின்னக்கம்பாளையம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரச்சினைகளை தீர்க்க தீவிரமாக முயன்று வந்தாலும், நிதிப் பற்றாக்குறை மிகப்பெரிய தடையாக உருவெடுத்துள்ளது. பாதாள சாக்கடைத் திட்டம், கழிவுநீர் வடிகால் அமைத்தல், குடிநீர் விநியோகத்தை சீரமைத்தல், சமுதாயக் கூடங்கள் மற்றும் பள்ளிகளை பராமரித்தல், மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் போன்ற மிக முக்கியமான கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தினாலும், “நிதி இல்லை” என்ற காரணத்தால் அவசியமான பணிகள் கூட நிறைவேற்றப்படாமல் உள்ளன.

அரசு நிர்வாகத்தின் இந்த அலட்சியப்போக்கை கண்டித்தும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்து மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில். அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள் முன்பு இன்று மாபெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க உள்ளது. மக்களின் குரலாக ஒலித்து, களத்தில் நின்று போராடும் மக்கள் பிரதிநிதிகளின் பேட்டிகள் சிறப்பு பக்கமாக இந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.