முன் பணம் பெற்றுக்கொண்டு கிரைய ஒப்பந்தப்படி மனை வழங்காமல் ஏமாற்றுவதாக ஆட்சியரிடம் புகார்
2 hours before

முன் பணம் பெற்றுக்கொண்டு கிரைய ஒப்பந்தப்படி மனை வழங்காமல் ஏமாற்றுவதாக ஆட்சியரிடம் புகார்

திருப்பூர், அக். 5 -முன்பணம் வாங்கிக் கொண்டு வீட்டுமனை கிரையம் செய்து தராமல் ஏமாற்ற முயற்சிப்பதாக திருப்பூர் முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் செந்தில் நகரை சேர்ந்தவர்கள் திருப்பூர் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் செந்தில் நகரை சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட 39 ஏழை தொழிலாளர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் முதலிபாளையம் கிராமம் க.ச.எண் 176/2ஏ, 176/2பி, 178/3பி காலைகளில் உள்ள பூமிகளை வீட்டுமனை இடங்களாகப் பிரித்து செந்தில்நகர் கட்டம் 6 என பெயரிட்டு வீட்டுமனைகளை விற்பனை செய்தனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு உரிமையாளர் பாலகிருஷ்ணன் என்பவர் கவர்ச்சிகரமான விளம்பரங்களைக்காட்டி எங்களிடம் நீங்கள் சொந்த வீட்டில் குடியிருக்கலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினார். எனவே மேற்படி இடத்தில் வீட்டுமனைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றார். மேலும், அவரவர்களுக்கு உண்டான இடத்தை தேர்வு செய்து விட்டு, அந்த இடத்தை விற்பனை செய்வதாக கூறி கிரையஒப்பந்தம் ஏற்படுத்தி ஒரு பகுதி முன்பணம் பெற்றுக் கொண்டார்.

தற்போது அந்த இடத்தை பாலகிருஷ்ணன் கிரையம் செய்து தர மறுப்பதுடன், மக்கள் கொடுத்த முன்பணத்தை திரும்ப வழங்காமல்ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படுகிறார்.

மேலும் அந்த இடத்தை கிரையம் செய்து கொடுக்க வேண்டுமென்றால், ஒரு சென்ட்டிற்கு கூடுதலாக ரூ.3 லட்சம் கொடுத்தால் மட்டுமே கிரையம் செய்து கொடுப்பதாக கூறுகிறார். எனவே ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு, கிரைய ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்த இடத்தை ஒப்பந்த விலைக்கே கிரையம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.