12 பேரின் ரத்து செய்யப்பட்ட பட்டாவை மீண்டும் வழங்க கோரிக்கை
1 Oct 2026, 12:42 am

12 பேரின் ரத்து செய்யப்பட்ட பட்டாவை மீண்டும் வழங்க கோரிக்கை

திருப்பூர், செப். 30 –திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் குட்டப்பாளையம் கிராமம் கிழக்கு சேமலை வலசு கிராமத்தில் ஏழை மக்கள் 12 பேருக்கு கொடுக்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்து தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா உத்தரவிட்டிருக்கிறார். எனினும் அந்த மக்களுக்கு அதே பகுதியில் போதுமான இடம் இருக்கும் நிலையில் உடனடியாக மீண்டும்பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.கிழக்கு சேமலை வலசு ரீ.ச.எண் 525, 526இல் உள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் பொது பயன்பாட்டிற்காகஒதுக்கப்பட்ட நிலத்தை 12 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறி அந்த ஊர்பொது மக்கள் சார்பில் பட்டாவை ரத்து செய்ய கோரியிருந்தனர்.

இது தொடர்பாக தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் கிழக்கு சேமலை வலசு பழைய, புதுக் காலனி குடியிருப்பில் சுமார் 40 ஆண்டுகளாக பட்டியல் சாதியினர் 60 குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். மேற்படி ரீ.ச. 525, 526இல் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் ஏற்கெனவே 57 +30 என மொத்தம் 87 இலவச வீட்டுமனை இடங்கள் அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டு அந்த மக்கள் குடியிருந்து வருகின்றனர். மீதமுள்ள பகுதியில் அங்கு வசிக்கும் பொது மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வழிபாட்டுத்தலம், பூங்கா, மேல்நிலை குடிநீர் தொட்டி, பொதுக் கழிப்பிடம், சமுதாயக் கூடம், சத்துணவுக் கூடம் மற்றும் சிறுவர் விளையாட்டு மைதானம் போன்ற அவசிய பயன்பாட்டிற்கு சிறிய இடம் மட்டுமே உள்ளது. எனவே பொது பயன்பாட்டிற்கு உரிய இடத்தை வேறு மக்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என பழைய கோட்டை ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை செய்து, 12 நபர்களுக்கு அந்த பொது பயன்பாட்டிற்கு உரிய இடத்தில் வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்யலாம் என வட்டாட்சியர் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்.

வட்டாட்சியர் அறிக்கை அடிப்படையில் புலத்தணிக்கை செய்து, 12 நபர்களுக்கு உரிய இலவச வீட்டுமனைப் பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காங்கேயம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டிருப்பதாக கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா குழு உறுப்பினர் ஆர்.செல்வராஜ் கூறுகையில், கோட்டாட்சியர் பொது பயன்பாட்டிற்காக உள்ள இடம் என சொல்லி இருப்பது சரியல்ல. ஏற்கெனவே அப்பகுதி மக்களுக்குபொது பயன்பாட்டு இடங்கள் நடைமுறையில் உள்ளன. மேலும் வருவாய்த் துறையினர் கள ஆய்வு செய்து தானே 12 பேருக்கு பட்டா கொடுத்திருப்பார்கள். எனவே இப்போது சொல்லி இருக்கும் காரணம் ஏற்புடையதாக இல்லை.உள்ளூரில் ஆதிக்கம் செலுத்துவோரின் மறைமுக நிர்பந்தம் காரணமாக இந்த பட்டா நீக்கப்பட்டிருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது. எனவே அதே பகுதியில் போதுமான இடம் இருக்கும் நிலையில் அங்கு 12 பேருக்கும் இலவச வீட்டுமனை பட்டாவை மீண்டும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பில் கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.