திருப்பூர் மாநகராட்சி, 6 நகராட்சிகளில் இடையூறுகளை மீறி சிஐடியு ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர்
2 hours before

திருப்பூர் மாநகராட்சி, 6 நகராட்சிகளில் இடையூறுகளை மீறி சிஐடியு ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர்

திருப்பூர், அக். 5 - திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி மற்றும் தாராபுரம் தவிர மற்ற ஆறு நகராட்சிகளில் சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின்சார்பில் ஒப்பந்த ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். அதிகாரிகளின் மிரட்டல், இடையூறுகளை தாண்டி வெற்றிகரமாக இந்த போராட்டம் தொடங்கியது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தூய்மைப் பணி உள்ளிட்ட உள்ளாட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியார்மயம் ஆக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், உள்ளாட்சி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 5ஆம் தேதி திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை சிஐடியு அறிவித்திருந்தது.அதன்படி கடந்த வாரம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் ஆணையர்கள், செயல் அலுவலர்களை சந்தித்து வேலை நிறுத்தம் செய்வது குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தனியார்மயம் எதிர்ப்பு கோரிக்கையுடன், குறைந்தபட்ச ஊதியம், சம்பள ரசீது வழங்க நடவடிக்கை, இ.பி.எப்.பிடித்தங்களில் முறைகேடுகளை களைவது, பேரூராட்சிகளில் இபிஎப், மற்றும் இஎஸ்ஐ பிடித்தம் செய்வது, தூய்மைப்பணியாளர் உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு சட்டப்படி தீபாவளி போனஸ் வழங்குவது, காலை உணவுக்கு பதில் உணவுப் படி ரூ. 100/-வழங்குவது ஆகிய கோரிக்கைகளைவலியுறுத்தி திங்களன்று வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

தாராபுரம் தொகுதியில் தேர்தல் நடைபெறும் நிலையில் தாராபுரம் நகராட்சியில் மட்டும் வேலை நிறுத்தம் தொடங்கவில்லை. உடுமலை, அவிநாசி, திருமுருகன்பூண்டி, பல்லடம், காங்கேயம், வெள்ளகோவில் ஆகிய ஆறு நகராட்சிகளில் நூறு சதவிகிதம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர் என்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தெரிவித்தார்.

அதேபோல் திருப்பூர் மாநகராட்சியிலும் கணிசமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். வேலை நிறுத்தத்தில் பங்கேற்று சிஐடியு நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றவர்களை மேஸ்திரிகள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், அதிகாரிகள் தடுத்து வேலைக்கு வர வேண்டும் என்று அச்சுறுத்தி உள்ளனர். வடமாநிலத் தொழிலாளர்களை கொண்டு பணிகளை செய்தனர்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 2500 தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டதாக மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் கூறினார்.

மேலும் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஒன்று சேர்ந்த நிலையில் காவல் துறையினர் அனுமதிக்காமல் தடுத்துள்ளனர். அனைவரையும் கலைந்து போகும்படி கூறியுள்ளனர்.

எனினும் மாவட்ட ஆட்சியரகம் எதிரில் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபப் பகுதியில் சிஐடியு தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து நகராட்சிகள் முன்பும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கே.ரங்கராஜ் கூறினார்.

ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்கும் வரை அனைத்து பேரூராட்சி, நகராட்சிகள், மாநகராட்சியில் இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.