திருநெல்வேலி விரைவு செய்திகள்
27 Sept 2026, 10:37 pm

திருநெல்வேலி விரைவு செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 24 கிலோ கஞ்சா பறிமுதல்3 பேர் கைது

தூத்துக்குடி, செப்.27-தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 24 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்தனர்.ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அதிகளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டு, தூத்துக்குடியை முக்கியக் கேந்திரமாகக்கொண்டு கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின் பேரிலும், டவுன் டி.எஸ்.பி. சுனில் ஆலோசனையின் பேரிலும் தனிப்பிரிவு காவல்துறையினர் சனிக்கிழமையன்று இரவு தூத்துக்குடி பீச் ரோட்டில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திரேஸ்புரம் கடற்கரையை நோக்கி அதிவேகமாகச் சென்ற லாரி ஒன்றை காவல்துறையினர் மறித்து நிறுத்தினர். லாரியில் இருந்த 3 பேரைப் பிடித்துச்சோதனையிட்டதில், தலா 1 கிலோ எடையுள்ள 24 பண்டல்களில் மொத்தம் 24 கிலோ கஞ்சா மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இந்த கஞ்சாவைத்தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்றது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி எஸ்.எஸ். பிள்ளை தெருவைச் சேர்ந்த செல்லப்பெருமாள் என்ற கட்டப்பெருமாள் (24), வேப்பலோடையைச் சேர்ந்த ராம்குமார் (29), அழகிய பொன்னையபுரத்தைச் சேர்ந்த ஜெகன் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காந்தி ஜெயந்தியில் 450 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவு

விருதுநகர், செப்.27-விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் வரும் அக்.2 காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷரண்யா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். மேலும், தூய்மையான குடிநீர் விநியோகம், பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம், சிறுபாசனங்கள், குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க வேண்டும்.கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி பங்கேற்க ஆணையாளர் அழைப்பு

தூத்துக்குடி, செப்.27-தூத்துக்குடி மாநகராட்சி நகர்ப்புற அறிவுசார் மையத்தில் இளைஞர்களுக்குப் போட்டித் தேர்வு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் பங்கேற்குமாறு மாநகராட்சி ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளார்.தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற அறிவுசார் மையம், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போட்டித் தேர்வுப் பயிற்சிகளுக்குப் பெரும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.209 லட்சம் மதிப்பீட்டில் சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இந்நகர அறிவுசார் மையம் உருவாக்கப்பட்டு, கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இந்த மையத்திற்குத் தூத்துக்குடி மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் தினசரி சுமார் 100 இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வந்து பயன் பெற்று வருகிறார்கள்.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் இலவசமாக இணையதளம் வாயிலாக நேரடிப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளவும், தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளவும் ஏதுவாகப் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய விரிவான நூலகம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தனித்தனியே காற்றோட்டமான படிக்கும் அறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உள்கட்டமைப்புகளும் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த மையத்தில் பயின்ற இளைஞர்களில் இதுவரை 35 பேர் பல்வேறு அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுத் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தூத்துக்குடி மாநகரப் பகுதிவாழ் இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்தித் தங்களது வாழ்வைமேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா கேட்டுக்கொண்டுஉள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்கள் 111 பேரை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு சிஐடியு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு

விருதுநகர், செப்.27-விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 111 ஊழியர்களை சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளதாக சிஐடியு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விருதுநகரில் உள்ள தோழர் ஹேமச்சந்திரன் நினைவகத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர்பி.என்.தேவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு கடந்த 2003-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. இதில் சுமார் 23 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்யக் கோரி, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ந்து இரு ஆண்டுகளில் 480 நாட்கள் பணிபுரிந்தவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்ட விதிகளின் அடிப்படையில், தொழிலாளர் உதவி ஆணையர் ஊழியர்களை நிரந்தரம் செய்ய உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரசு தொடர்ந்த வழக்கில், உதவி ஆணையரின் உத்தரவு செல்லும் என தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனை எதிர்த்து அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, ஊழியர்களை சட்டப்படி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டதாக தேவா தெரிவித்தார்.நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல், டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரம் செய்வதுடன், 2005-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், சிஐடியு கோரிக்கையை ஏற்று நவ.15 முதல் டாஸ்மாக் ஊழியர்கள் அடையாள அட்டை பொருத்திய சீருடையுடன் பணிபுரிவதை வரவேற்பதாகவும் தெரிவித்தார். பேட்டியின்போது டாஸ்மாக் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் குணசேகரன், மாவட்டத் தலைவர் பாலமுருகன், பொருளாளர் பொன்னுச்சாமி, துணைத் தலைவர் தெய்வேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.