திருநெல்வேலி விரைவு செய்திகள்
27 Jun 2026, 11:17 pm

பெண் பணியாளருக்குப் பாலியல் தொல்லை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி, ஜுன் 27- தூத்துக்குடியில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் ‘கீ எக்ஸ்பர்ட்’ ஆகப் பணிபுரிந்து வந்த பெண் பணியாளர் ஒருவர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம நாயகம் தனக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை அளிப்ப தாகப் புகார் அளித்தார். இப்புகார் தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் ‘உள் புகார் குழு’ விரிவான விசாரணை நடத்தியது. சம்பந்தப்பட்ட அதிகாரி, பாதிக்கப் பட்ட பெண் மற்றும் அலுவலகப் பணியாளர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த ஜூன் 19 அன்று குழு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கை யில், அதிகாரி பிரமநாயகம் பெண் பணியாளரிடம் அரு வருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டு பாலியல் வன் கொடுமை ஏற்படுத்தியது நிரூபணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரமநாயகம் தற்போது தேனி மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். அலுவலக இறைமைக்குக் குந்தகம் விளைவித்தது மற்றும் ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973’-ன் விதி 20-ஐ மீறிச் செயல்பட்டதன் காரணமாக, தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதிகளின் கீழ் பொது நலன் கருதி பிரமநாயகத்தைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆணையர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார். பணியிடை நீக்க காலத்தில் அவருக்குப் பிழைப்பூதியம் வழங்கப்படும் என்றும், உரிய அனுமதியின்றி அவர் தலைமையிடத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் அந்த உத்தர வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டீக்கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடி, ஜுன் 27- தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி பகுதியில் நள்ளிர வில் டீக்கடை ஒன்றின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப் பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செம்புலிங்கம் மனைவி பத்மா. இவர் அப்பகுதி யில் உள்ள எம்ஜிஆர் சிலை பேருந்து நிறுத்தம் அருகே தனது மகனுடன் இணைந்து டீக்கடை ஒன்று நடத்தி வரு கிறார். நேற்று வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், வெள்ளியன்று நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பத்மாவின் டீக்கடை முன்பாகப் பெட்ரோல் குண்டை வீசிவிட்டுத் தப்பியோடி னர். சனிக்கிழமையன்று அதிகாலை வழக்கம் போல் கடையைத் திறப்பதற்காகப் பத்மா வந்துள்ளார். அப்போது கடையின் முன்பகுதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டுச் சேத மடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக முத்தையாபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். முத்தையா புரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நள்ளிர வில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருடியவர் கைது

தூத்துக்குடி, ஜுன் 27- தூத்துக்குடியில், ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகளைத் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து, நகைகளை மீட்டுள்ளனர். தூத்துக்குடி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாலகணேசன் (36). ஆட்டோ ஓட்டுந ராகத் தொழில் செய்து வருகிறார். சம்பவ தினத்தன்று காலை அவர் தனது ஆட்டோ சவாரிக்குச் சென்றுவிட்டார். அவரது மனைவி புதியமுத்தூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றிருந்ததால் வீடு பூட்டப்பட்டிருந் தது. மதியம் சுமார் 2.30 மணி அளவில் பாலகணேசன் சவாரி முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் பக்கத் தலைவாசல் கதவைத் திறக்க முயன்றபோது, அது உள்பக்கமாகப் பூட்டப் பட்டுத் திறக்க முடியாத நிலையில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, யாரோ ஒருவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த தங்க நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலின் பேரில் சிப்காட் காவல் சார்பு ஆய்வாளர் காவுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசா ரின் தீவிர விசாரணையில், மாப்பிள்ளையூரணி, பூபாண்டிய புரம் காமராஜ் நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் இசக்கி முத்து (18) என்ற யோகீஸ்வரன் இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை சனிக்கிழமையன்று கைது செய்தனர். அவரிட மிருந்து நான்கே முக்கால் சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருநெல்வேலி, ஜூன் 27- நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்ட விவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி சனிக்கிழமையன்று நிலவரப்படி பாபநாசம் அணையில் 90.75 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 275.09 கனஅடி நீர் வரத்து பதிவாகியுள்ள நிலை யில், 1304.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணையில் 89.86 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்தும், வெளியேற்றமும் இல்லை. மணி முத்தாறு அணையில் 75.65 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 24.39 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில், 80 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணையில் 6 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்தும், வெளியேற்றமும் இல்லை. நம்பியாறு அணையில் 14 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்தும், வெளியேற்றமும் இல்லை. கொடுமுடியாறு அணையில் 46.75 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 கனஅடி நீர் வரத்து பதிவாகியுள்ள நிலையில், அதே அளவான 2 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் நாளை அரசு மானியக் கடன் வழங்கும் சிறப்பு முகாம்

தூத்துக்குடி, ஜுன் 27- சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தினத்தை முன் னிட்டு, தூத்துக்குடி பைபாஸ் சாலை அரு கிலுள்ள மாவட்ட தொழில் மைய அலுவல கத்தில் வரும் ஜூன் 29 திங்கட்கிழமையன்று மானியக் கடன்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு நேரடி நேர்காணல் முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில் மைய பொது மேலா ளர் தலைமையில் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. இச்சிறப்பு நேரடி நேர்காணலில் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் வங்கிக் கடன்களும் அதற்கான மானியங்களும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES): பெண்களுக்கு மட்டும் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த நிறுவனங்களுக்கு 25 சதவிகித மானியம். கலைஞர் கைவினைத் திட்டம் (KKT): கைவினைத் தொழில்கள் தொடங்க மற்றும் விரிவாக்கம் செய்ய 25 சதகிவித மானியம் வழங்கப்படுகிறது. வங்கி கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தொழில் ஆர்வலர்கள் தங்களது அடையாள அட்டை, பான் கார்டு (PAN card), வங்கிப் புத்தக நகல், குடும்ப அட்டை நகல், மாற்றுச் சான்றிதழ் (TC), தொழில் தொடங்குவதற்கான விலைப்புள்ளி பட்டியல் (Quotation) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகிய ஆவணங் களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். புதியதாகத் தொழில் தொடங்க அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற விரும்புபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் 0461-2340152 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவரும் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

புளியரை சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ரூ.1.95 லட்சம் பறிமுதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை

தென்காசி, ஜூன் 27- தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் கணக்கில் வராத ரூ.1.95 லட்சம் பணம் பறிமுதல் செய்யப் பட்டது. தமிழக அரசின் வருவாயத் துறைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவுப்படி கடந்த 4ஆம் தேதி முதல் சோதனை நடத்தப்பட்டு அதிகாரிகளிடம் இருந்து கணக்கில் வராத பணம் பறி முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகை யில், தென்காசி மாவட்டம் புளியரை போக்கு வரத்துத்துறை சோதனை சாவடி அதிகாரி கள், வாகன ஓட்டிகளிடம் இருந்து வாகனத்தில் அதிக சுமை உள்ளிட்ட காரணங்களை காட்டி பணம் பறிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, ஜுன் 27 வெள்ளியன்று அதிகாலை தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோத னையில், மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரிடம் கணக்கில் வராத ரூ.1.60 லட்சம் பணம் மற்றும் அவரது உதவியாளர் கீதா விடம் இருந்து கணக்கில் வராத ரூ.35,150 பணம் சிக்கியது. பணத்திற்கான வரவு காரணத்தை இருவரும் தெரிவிக்காததால் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரூ.1,95,150 பணம் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தென்காசி வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தில் 19 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை யில், ரூ.1,37,800 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அம்பை அருகே கோவிலுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய கரடி பொதுமக்கள் அச்சம்

திருநெல்வேலி, ஜூன் 27- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தையொட்டி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்குள் அடிக்கடி சிறுத்தை, கரடிகள் உள்ளிட்டவை புகுந்து ஆட்டை கடித்து தூக்கி செல்வது, பயிர்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட அட்டகாசங்களை செய்து வருகின்றன. இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டி உச்சிமேடு பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரடி புகுந்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த கரடி, அங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகளை சேதப்படுத்தி, விளக்குகளில் இருந்த எண்ணெய்யை குடித்துவிட்டு சென்றுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த சில பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றது.கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகவே கரடிகள் அட்டகாசம் தொடர்ந்து இருந்து வருகிறது. மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, அம்பை, வி.கே.புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் கோவில்கள், ஓட்டல்களில் புகுவது, வீடுகளில் இருக்கும் பலாப்பழ மரங்கள் உள்ளிட்டவற்றில் ஏறி சேதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் இரவு நேரம் ஆகிவிட்டாலே வீடுகளில் இருந்து வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். வனத்துறையினரிடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் முறையான நடவடிக்கை எடுக்க வில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள இந்த கிராமத்தில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, கரடி நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.