திருநெல்வேலி விரைவு செய்திகள்
3 Oct 2026, 11:02 pm

அருமனையில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

அருமனை, அக். 3- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் ஏழு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. பள்ளித்தலைமையாசிரியர்ஜெய்ஸ்ரீ தலைமை வகித்தார்.வழக்கறிஞர் அருள் தாஸ், டாக்டர் நிஷாராணி ,முனைவர் ஜாஸ்பின்ஷீலா,எழுத்தாளர் சப்திகா, மனோஜ் குமார், சசிகுமார் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிபு மாணவர்களை கௌரவித்தார்.

காந்தி ஜெயந்திக்கு விடுமுறை விடாத86 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, அக்.3-காந்தி ஜெயந்தி விடுமுறை நாளில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 86 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 168 நிறுவனங்களை ஆய்வு செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை தொழிலாளர் ஆணையர் வள்ளலார், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஹேமலதா, நெல்லைதொழிலாளர் இணை ஆணையர் வேல்முருகன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கௌரி ஜெனிபர் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

மொத்தம் 168 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 65 கடைகள், 57 உணவு நிறுவனங்கள், 3 மோட்டார் நிறுவனங்கள், 43 பீடி நிறுவனங்கள் என ஆய்வு செய்யப்பட்டவற்றில் 86 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசுப் பேருந்தை மறித்து நிறுத்திய தனியார் பேருந்து ஊழியர்கள்

தூத்துக்குடி, அக்.3-தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து திட்டமான ‘வெற்றிப் பயணம்’ விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதால், தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் தனியார் பேருந்துகளுக்கு பெரும் வருவாய் இழப்பும் தொழில்பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாகப் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து சனிக்கிழமையன்று காலை திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், அதே தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

பயணிகள் அனைவரும் அரசுப் பேருந்துகளிலேயே செல்ல ஆர்வம் காட்டியதால், ஆத்திரமடைந்த தனியார்பேருந்து ஊழியர்கள் அரசுப் பேருந்தை மறித்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

சிறார்கள் ஓட்டிய8 பைக்குகள் பறிமுதல் பெற்றோர்கள் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடி, அக்.3- தூத்துக்குடியில் ஓட்டுநர் உரிமம் இன்றி விதிகளை மீறிச் சிறார்கள் ஓட்டி வந்த 8 இருசக்கர வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து, மாணவர்களின்பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்ட நகர உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலைய எல்லைகளில், நகரக் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் உத்தரவின்படி காவல் துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, 18 வயது பூர்த்தியடையாத பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களை இயக்கி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஓட்டி வந்த 8 இருசக்கர வாகனங்களைக் காவல் துறையினர் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகச் சிறார்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீது மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி 8 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “18 வயது நிறைவடைவதற்கு முன்பாகப் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு இருசக்கர வாகனங்களைக் கொடுக்கக் கூடாது. பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர்தனிக்கவனம் செலுத்த வேண்டும். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து, சாலைப் போக்குவரத்து விதிகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தனர்.

குப்பை மறுசுழற்சி நிறுவனத்தில் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.3-நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து சேகரிக்கும் பணியை, அவுட்சோர்சிங் முறையில் கிரீன்ஓவில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

நகராட்சி வார்டுகளில் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப் பட்ட குப்பைகளிலிருந்து மறுசுழற்சி முறையில் பல்வேறு

பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம், செண்பகத்தோப்பு செல்லும் சாலையில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், திருவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்த தஞ்சாவூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் வினோத் தலைமையிலான குழுவினர், கிரீன்ஓவில் நிறுவனத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அக்.7 -10 வரை வ.உ.சி கல்லூரியில் இயற்கை, வனவிலங்கு கண்காட்சி

தூத்துக்குடி, அக்.3- தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் ‘லிவோரா 2026’ என்னும் பிரம்மாண்ட இயற்கை மற்றும் வனவிலங்கு கண்காட்சி வருகிற 7ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பவள விழா ஆண்டை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் ‘லிவோரா 2026’ பிரம்மாண்ட இயற்கை மற்றும் வனவிலங்கு கண்காட்சி அக்டோபர் 7 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடர்பாக கல்லூரி முதல்வர் ஏ.பி.சி.வி. வீரபாகு மற்றும் பேராசிரியர் ராதிகா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான்கு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி, பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே காடுகளின் பாதுகாப்பு, மனித உயிர்வாழ்வில் காடுகளின் முக்கியத்துவம், அறிவியல் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

வகுப்பறைக் கல்வியைத் தாண்டி இயற்கையின் பல்லுயிர் வளத்தை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை இது வழங்கும். இக்கண்காட்சியில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அழகிய அயல்நாட்டுப் பறவைகள் மற்றும் பிரத்யேகக் கடல் மீன் காட்சியகங்கள், அறிவியல் மாதிரிகள், நுண்ணுயிரிகள் மற்றும் இருளில் ஒளிரும் உயிரிகளின் உலகம், ‘Paws on Parade’ மற்றும் ‘Desert Vibes’ உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன.

மேலும், வனச் சூழல், வனவிலங்குகளின் வாழிடங்கள், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுக் காட்சிகள் இடம்பெறும். அக்டோபர் 7 முதல் 9 வரை பதிவு செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம்.

பொதுமக்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி உண்டு. அக்டோபர் 10 (நிறைவு நாள்) பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் முழுதும் பார்வையிடலாம்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ‘LIVORA 2026’ கண்காட்சியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு இயற்கையின் அதிசயங்களை அனுபவித்து விழிப்புணர்வு பெறலாம் என்று தெரிவித்தனர்.

பாப்கார்னுக்கு கூடுதல் பணம் வசூலித்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி, அக். 3–நெல்லையை அடுத்த தென்பத்து முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்புரோஸ். இவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 3 பாப்கார்ன் பாக்கெட்டுகள், சாக்லேட், பிஸ்கட் மற்றும் சோப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளார்.

இந்த பொருட்களுக்கு ஜி-பே மூலம் ரூ.328.40 செலுத்தியுள்ளார். அவர் வாங்கிய பாப்கார்ன் பாக்கெட்டின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.24 என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 3 பாக்கெட்டுகளை வாங்கினால் ரூ.72-க்கு பதிலாக ரூ.60-க்கு வழங்கப்படும் என அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், பில் போடும்போது 3 பாப்கார்ன் பாக்கெட்டுகளுக்கு ரூ.147 என சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் கட்டணம் வசூலித்துள்ளது. இதுகுறித்து அன்புரோஸ் அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டதற்கு ஊழியர்கள் முறையாக பதில் கூறவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், இது தொடர்பாக நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கிளாஸ்டன் பிளஸ்து தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் அடங்கிய அமர்வு கூடுதல் கட்டணம் வசூலித்தது உறுதியானது.

எனவே, நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.15 ஆயிரம் மற்றும் வழக்கு செலவாக ரூ.10 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

சாத்தான்குளம் நெடுஞ்சாலை பெயர்ப் பலகையில் இந்தி: 2 பொறியாளர்கள் தற்காலிக பணிநீக்கம்

தூத்துக்குடி,அக்.3-சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் பெயர்ப் பலகையில் இந்தியில் எழுதப்பட்ட விவகாரத்தில் பொறியாளர்கள் இருவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்- நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இங்கு சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகில் திருச்செந்தூர் ரோடு விலக்கு அருகில் புதிதாக வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, நெல்லைக்கு செல்லும் வழித்தடங்கள் அம்புகுறியிட்டு காட்டப்பட்டுஉள்ளன. மேலும் அந்த பலகையில், முதலில் ஊர் பெயர்கள் தமிழிலும், அடுத்து இந்தியிலும், மூன்றாவதாக ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன.

மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்ட வழிகாட்டி பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்துகள் உள்ளன. ஒரு சில பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் கடைசியாகவே உள்ளன. ஆனால் சாத்தான்குளத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழுக்கு அடுத்தபடியாக இந்தியில் பெரியளவில் எழுத்துகள் இருந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.கடும் எதிர்ப்பையடுத்து சாலை வழிகாட்டி பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

எப்கியூஎல் செயலி நிதி மோசடி ரஞ்சித், உறவினர்கள் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை

மதுரை, அக்.3-மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எப்கியூஎல் மற்றும் விஜி முதலீடு என்ற மொபைல் செயலி மூலம் கிரிப்டோகரன்சி முதலீடு தொடர்பாக மோசடி நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பெறப்பட்ட புகார் களின் அடிப்படையில், வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டதாகவும், இதற்கான உத்தரவை காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் பிறப்பித்ததாகவும்தெரிவிக்கப் பட்டுள்ளது.இதுதொடர்பாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மேலூர் அருகே வேப்படப்பு,கட்டயம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் அவரது மனைவி பிரியா என்ற பிரியதர்ஷினி ஆகியோர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்தமதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், வழக்கு தொடர்பாக மேலூர் அருகே கட்டயம்பட்டியில் உள்ள ரஞ்சித் மற்றும் அவரதுஉறவினர்களான கல்லணை, சிவக்குமார், ராஜலட்சுமி, பஞ்சு, பழையூர்பட்டியைச் சேர்ந்த குமார் ஆகியோரின்வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் கமர்னிஷா, ஜெயக்கொடி, அன்னபாலா, மலர்விழி, பிரதீப் ஆகியோர் தலைமையில் 25 பேர்கொண்ட குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடனும், காவல்துறை பாதுகாப்புடனும் தனித்தனிகுழுக்களாகப் பிரிந்து இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள், நகைகள்,செல்போன்கள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.