தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

6 Jul 2026, 9:42 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

கார் டயர் வெடித்து விபத்து: ஒருவர் பலி - 8 பேர் காயம்

தூத்துக்குடி, ஜுலை 6 - எப்போதும் வென்றான் அருகே தேசிய நெடுஞ்சாலை யில், கார் டயர் வெடித்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி யைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் குடும்பத்துடன் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இவர்கள் திருச்செந்தூரில் வழி பாட்டை முடித்துக் கொண்டு, மதுரை தேசிய நெடுஞ் சாலை வழியாக மதுரை நோக்கித் திரும்பிக் கொண்டி ருந்தனர். கார் எப்பொழுதும்வென்றான் எல்லைக்குட்பட்ட மேல செய்தலை விலக்கு அருகே தெற்கிலிருந்து வடக்காக வந்தபோது, எதிர்பாராத விதமாகக் காரின் வலது பக்கப் பின் டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை யில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த சென்னை நேசம் பாக்கம் கே.கே. நகரைச் சேர்ந்த வேம்பையா (58) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். காரை ஓட்டிய ஓட்டுநர் வெள்ளைச்சாமி காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார். விபத்து குறித்துத் தகவல் அறிந்த எப்பொழுதும் வென்றான் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த வேம்பையாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சேரன்மகாதேவி அருகே மாயமான 2 மாணவிகள் செங்கல்பட்டில் மீட்பு

திருநெல்வேலி, ஜூலை 6 - நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த கங்கணாங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது சித்தி மகள் அதே பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாணவிகள் 2 பேரும் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக சென்றனர். பின்னர் வெகுநேரம் ஆகியும் 2 பேரும் வீட்டுக்கு திரும்பி செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிந்து மாயமான 2 மாணவிகளையும் தேடினர். மாணவிகள் இருவரும் பேருந்தில் சென்னை நோக்கி பயணிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சென்னை மார்க்கத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் காணாமல் போன சிறுமிகளின் புகைப்படங்கள் பேருந்துகளுக்கு அனுப்பப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அந்த 2 மாணவிகளும் கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது 2 மாணவிகளையும் போலீசார் திரும்ப சேரன்மகாதேவி கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், அவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்து தங்களது சொந்த விருப்பப்படி சென்னை சென்று வருவதற்காக புறப்பட்டதாக தெரிய வந்தது. எனினும் இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நிதி வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம்: தென்காசி மாவட்டத்திற்கு ரூ.53 கோடி கடன் வழங்க இலக்கு : ஆட்சியர் தகவல்

தென்காசி, ஜூலை 6 - விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை வீணாக்காமல் சேமித்து, மதிப்பு கூட்டி லாபகரமான விலையில் விற்பனை செய்யும் வகையில் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்திட ஒன்றிய அரசின் “நிதி வேளாண் உட்கட்டமைப்பு நிதி” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் விளைபொருட்களை சேமித்து, பதப்படுத்தி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். தென்காசி மாவட்டத்திற்கு ரூ.53 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். இத்திட்டத்தில் அடங்கும் உள்கட்டமைப்புகள்: 1. சேமிப்பு கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிக்கும் அறைகள், 2. குளிர்பதன கிடங்கு, பழுக்க வைக்கும் கூடங்கள், மின்னணு வணிக மையம், 3. ரீஃபர் வேன், இன்சுலேட் வாகனங்கள், 4. அரிசி ஆலை, பயறு ஆலை போன்ற முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், 5. ட்ரோன் வாங்குதல், பசுமை குடில், இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு மையம், 6. வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் - குறைந்தபட்சம் 4 இயந்திரங்கள், 7. நர்சரி, திசு வளர்ப்பு மையம், காளான் வளர்ப்பு, மண்ணில்லா விவசாயம், செங்குத்து விவசாயம், 8. சூரிய மின் வசதியுடன் கூடிய கட்டமைப்புகள் ஆகியன இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் ஆகும். விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் ரூ.2 கோடி வரை கடன் தொகை வழங்கப்படும். வட்டி, அதிகபட்சம் ஆண்டுக்கு 9 சதவீதம் மட்டுமே. 7 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மட்டுமே மூலதனமாக செலுத்தினால் போதும். ஒன்றிய மற்றும் மாநில அரசின் பிற மானிய திட்டங்களையும் இத்துடன் இணைத்து பெறலாம். எனவே, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் நபர்கள் தங்கள் திட்ட விவரங்களுடன் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விடுதிகளில் குறைபாடுகள்: புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம்

தென்காசி, ஜூலை 6 - தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி சமூக நீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதிய வாட்ஸ் அப் புகார் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விடுதிகளில் உணவு, தங்கும் வசதி, குடிநீர், கழிவறை, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் நடைபெறும் தவறுகள் குறித்து மாணவ, மாணவிகள் நேரடியாக புகார் தெரிவிக்கும் வகையில் *9445477016* என்ற வாட்ஸ் அப் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் விடுதிகளில் உள்ள குறைபாடுகள், சிரமங்கள் குறித்த தகவல்களை மேற்படி வாட்ஸ் அப் எண்ணிற்கு புகைப்படம் மற்றும் விவரங்களுடன் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். வரப்பெறும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

பாபநாசம் அணைக்கு 1,224 கன அடி நீர்வரத்து

திருநெல்வேலி, ஜூலை 6 - நெல்லை மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர்மட்ட விவரங்களை பொதுப் பணித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,224.36 கனஅடி நீர் வரத்து பதிவாகியுள்ளது. அணையில் இருந்து 1,504.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணையின் மொத்த உயரமான 156 அடியில் தற்போது 87.83 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணைக்கு நீர்வரத்தும், வெளியேற்றமும் இல்லை. மணிமுத்தாறு அணையில் 118 அடி முழு கொள்ளளவுக்கு எதிராக 74.51 அடி நீர் இருப்பு பதிவாகியுள்ளது. அணைக்கு 56.12 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில், 175 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணையில் 50 அடி முழு உயரத்திற்கு எதிராக 6 அடி நீர் இருப்பு உள்ளது. நம்பியாறு அணையில் 22.96 அடி முழு உயரத்திற்கு எதிராக 14 அடி நீர் இருப்பு பதிவாகியுள்ளது. இந்த இரு அணைகளுக்கும் தற்போது நீர்வரத்தும், வெளியேற்றமும் இல்லை. கொடுமுடியாறு அணையில் 52.50 அடி முழு உயரத்திற்கு எதிராக 46.75 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 2 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில், அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாநகரில் அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

திருநெல்வேலி, ஜூலை 6 - நெல்லை மாநகர் பகுதி முழுவதிலும் தெரு நாய்களின் தொல்லை என்பது மக்களின் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. நெல்லை மாநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், சந்திப்பு கள் மற்றும் புதிய பேருந்து நிலையங் கள், சந்திப்பு ரயில் நிலையம், வண்ணார் பேட்டை பேருந்து நிறுத்தங்கள் ஆகிய இடங்களிலும் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதேபோல் பாளை வ.உ.சி. மைதானம் மற்றும் ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் உள்ள சிறுவர் பூங்காக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். மைதானத்தில் பொழுதுபோக்கிற்காக குடும்பத்துடன் வருபவர்களை நாய்கள் துரத்துகின்றன. சில நேரங்களில் சிறுவர்களைக் கடித்துக் குதறும் சம்பவங்க ளும் நடக்கின்றன. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளையும் நாய்கள் கடித்துக் குதறும் சம்பவங்கள் தொடர்கின்றன. பேட்டை அரசு மருத்துவமனை, அம்மா உணவகத்தின் பின்புறம் உள்ள பங்களா தெருவில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் தெருவில் விளையாடும் குழந்தைகளை நாய்கள் கூட்டம் கூட்டமாகத் துரத்தியதும், கடித்ததும் பலமுறை நடந்துள்ளது. இதனால் பெற்றோர் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும், முதியவர்கள், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் தெருநாய்களின் தாக்குதலால் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். மாநகர் பகுதி முழுவதும் நடக்கும் இந்தப் பிரச்சனை குறித்து பலமுறை மாநகராட்சியில் புகார் அளித்தும், இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, தெரு நாய்களைப் பாதுகாப்பான முறையில் பிடித்து அப்புறப்படுத்துதல், கருத்தடை மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.