திருநெல்வேலி விரைவு செய்திகள்
8 Jun 2026, 9:50 pm

இளம்பெண் மாயம்

குழித்துறை, ஜூன் 8 - மார்த்தாண்டம் பாகோடு வட்ட விளையைச் சேர்ந்த ஏசுதாஸ் மகள் செல்வி (23). இவர் தையாலுமூட்டில் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னிஷனாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஏசுதாஸ் கொடுத்த புகாரின் பேரில், மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மது போதையில் கீழே விழுந்தவர் இறப்பு

குழித்துறை, ஜூன் 8 - திக்குறிச்சி ஆசாரிக்குடிவிளையைச் சேர்ந்த தர்மராஜ் (55) கூலி வேலை செய்து வந்தார். திருமணமாகாத இவர், மது போதைக்கு அடிமையாகி, வீட்டிற்கு வராமல், கடை வராண்டாவில் தூங்கி வந்துள்ளார். இவர் மதுபோதையில் கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதுகுறித்து இவரது அம்மா பிச்சி (77) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.85 லட்சம் இழப்பீடு நெல்லை நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி, ஜூன் 8 - ஆந்திர மாநிலம் வேலட்டிவரிபாலம் பகுதியைச் சேர்ந்தவர் கரவாடி சங்கரராவ் (54), காவல் உதவி ஆய்வாளரான இவர், கடந்த 2.3.2023 அன்று தூத்துக்குடி துறைமுகம் முத்தையாபுரம் சாலையில் துறைமுக சமுதாய கூடம் அருகில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினார். இதில் கரவாடி சங்கராவுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு வழக்கறிஞர் ரவிசங்கர் மூலமாக இழப்பீடு கோரி நெல்லை சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது. கடந்த 16.05.2023 அன்று கரவாடிசங்கர ராவ் விபத்தில் ஏற்பட்ட கொடுங்காயங்கள் காரணமாக உயிரிழந்தார். பின்னர் அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் வழக்கின் தரப்பினராக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை நீதிபதி ப்ரெஷ்நேவ் விசாரித்தும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் ரவிசங்கர் சமர்ப்பித்த ஆவணங்களையும், சாட்சிகள் விசாரிக்கிப்பட்டதையும் ஏற்றுக்கொண்டு கடந்த 6.6.2026 அன்று விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் காப்பீடு நிறுவனம் கரவாடி சங்கரராவ் குடும்பத்தினருக்கு ரூ.85,65,646 மற்றும் வட்டியுடன் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் எம்.சாண்ட் விலை உயர்வு

திருநெல்வேலி, ஜூன் 8 - தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில் அவ்வப்போது ஏற்படும் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்வு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் மேற்காசிய நாடுகளில் நிலவும் போர், சூழல் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருட்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட சாண்ட் விலை உயர்ந்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் ரூ.3,600-க்கு விற்கப்பட்ட யூனிட் எம்.சாண்ட் ரூ.200 உயர்ந்து, ரூ.3,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.2,600-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி ரூ.200 உயர்ந்து ரூ.2,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு டன் ரூ.600 என்று விற்கப்பட்ட ஜல்லி, ரூ.150 உயர்ந்து ரூ.750 ஆக உள்ளது. கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் எம்.சாண்ட் ஒரு டன் ரூ.150 உயர்ந்து ரூ.800 ஆகவும், சுவர் பூச்சுக்கு பயன்படுத்தும் பி.சாண்ட் ரூ.900 உயர்ந்துள்ளது. யூனிட் அடிப்படையில் பார்த்தால் மாவட்டங்களை பொறுத்து சற்று மாறுபட்டது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குவாரிகளின் எண்ணிக்கை குறைப்பு காரணமாக இந்த விலையேற்றம் என்றும், விலை உயர்வை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளம் 4 ஆவது நாளாக குளிக்க தடை

திருநெல்வேலி,ஜூன் 8 - மணிமுத்தாறு அருவி யில் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு கொட்டுவதால் 4 ஆவது நாளாக சுற்றுலாப் பயணி கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவ மழையால் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் மாஞ்சோலை, செங்கல்தேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் கொட்டுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாஞ் சோலை, ஊத்து, மணி முத்தாறு மலைப் பகுதி களில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து ஜூன் 5 அன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக் கிழமை வரை அருவியில் நீர்வரத்து சீராகாததாலும், தொடர் மழையால் தண்ணீர் அதிகமாக கொட்டு வதாலும் 4 ஆவது நாளான திங்கட்கிழமையும் மணி முத்தாறு அருவியில் சுற்று லாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அருவியை பார்வையிட மட்டும் அனுமதிப்பதாக வனத்துறையினர் அறி வித்துள்ளனர், தொடர்ந்து நீர்வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் என வனத் துறையினர் தெரிவித் துள்ளனர்.

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்

தூத்துக்குடி, ஜூன் 8 - கோவில்பட்டி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன் (23). இவர் ஞாயிறன்று இரவு நேரத்தில் இளம்புவனத்திலிருந்து கோவில்பட்டி நோக்கித் தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். அதே நேரத்தில், சிதம்பராபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ் (36) கோவில்பட்டிக்கு வந்துவிட்டு, மீண்டும் தனது சொந்த ஊருக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே இருவரது மோட்டார் பைக்குகளும் வந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு பைக்குகளும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பலமாக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர விபத்தில் அருண்பாண்டியன் மற்றும் சுப்புராஜ் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த தகவலின் பேரில், நாலாட்டின்புதூர் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான அருண்பாண்டியன் மற்றும் சுப்புராஜ் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூராய்வுக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 4 நாட்களில் 26 அடி உயர்வு

திருநெல்வேலி, ஜூன் 8 - தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வரும் நிலையில், தென்காசி, நெல்லை மாவட்ட ங்களில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பாபநாசம்- சேர்வலாறு நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் திங்களன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 70 அடியை நெருங்குகிறது. சேர்வலாறு அணை 5 நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 89 அடியாக உள்ளது. இந்த 2 அணைகளுக்கும் திங்கட்கிழ மை நிலவரப்படி வினாடிக்கு 3,285 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் 4 அன்று பாபநாசம் அணை நீர்மட்டம் 49 அடியாக இருந்த நிலையில், 4 நாட்க ளில் 19 அடி உயர்ந்துள்ளது. அதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 26 அடி உயர்ந்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அடி அணை 68 அடியாக உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநா சத்தில் 32 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 28 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 17 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. நகர் பகுதிகளை பொறுத்தவரை ராதாபுரம் சுற்றுவட்டாரத்தில் 13 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாங்குநேரி, களக் காடு, சேரன்மகாதேவி சுற்று வட்டாரங்க ளில் ஞாயிறன்று மாலையில் தொடங்கி, இரவு வரையிலும் லேசான சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை தொடர்வதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க திங்களன்று 4 ஆவது நாளாக தடை நீடித்தது. அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் களக்காடு தலையணையில் குளிக்கவும், நம்பி கோவில் செல்லவும் 5 ஆவது நாளாக அனுமதி மறுக்கப்பட்டுள் ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 37 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து ள்ள மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஊத்து எஸ்டேட்டில் 11 சென்டிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 10 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. காக்காசி யில் 9 சென்டி மீட்டரும், மாஞ்சோலையில் 8 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

வீட்டில் வெள்ளை அடித்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தென்காசி, ஜூன் 8 - தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கரும்பனூரில் வீட்டில் வெள்ளை அடித்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆலங்குளம் அருகே கரும்பனூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லதுரை என்பவரது மகன் அருண் (45). இவரது வீட்டில் சுண்ணாம்பு அடிக்கும் வேலை நடைபெற்றுள்ளது. சக தொழிலாளிகளுடன் அருணும் வேலையில் ஈடுபட்டுள்ளார். உயரமான பகுதியில் வெள்ளை அடித்து கொண்டிருந்த போது, மின் வயரில் சுண்ணாம்பு அடிக்கும் பிரஷ் பட்டுள்ளது. அதில் மின்சாரம் பாய்ந்து அருண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அருணுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மது போதையில் தகராறு: இளைஞர் மீது தாக்குதல்

தென்காசி, ஜூன் 8 - தென்காசி மாவட்டம், கடையத்தில் மதுக் குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் பாட்டிலை, உடைத்து இளைஞரை குத்தியவர் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் கடையம் பாரதிநகரைச் சேர்ந்தவர் ரகுநாத் (25). இவர் கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மிதுன் (22) என்பவருக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஞாயிறன்று இரவு ஏற்பட்ட தகராறில் மிதுன், ரகுநாத்தை பாட்டிலை உடைத்து நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான காவலர்கள், காயமடைந்த ரகுநாத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, ரகுநாத்தை பாட்டிலால் குத்திய மிதுனை கைது செய்து வழக்குப் பதிந்து சிறையிலடைத்தனர்.

புளியங்குடியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

தென்காசி, ஜூன் 8 - புளியங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து எஸ்.பி. அசோக்குமார் உத்தரவின் பேரில், டிஎஸ்பி மதன் அறிவுறுத்தலின் பேரில், இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையிலான காவல்துறையினர் புளியங்குடி மேற்கு பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு தோப்பில் ஒளிந்து இருந்த நான்கு பேரை விசாரணை செய்ததில், அவர்கள் புளியங்குடி கெங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேலுதுரை (29), டி.என். புதுக்குடி சிதம்பர விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சந்துரு பிரசாத் (26), செக்கடி தெருவைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (26), வாசுதேவநல்லூர் வேலாண்டி கோவில் தெருவைச் சேர்ந்த மருதுபாண்டி (26) என்பதும், இவர்கள் புளியங்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரி மாணவர்களை குறிவைத்து பொட்ட லங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவர்கள் நால்வரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. யாருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பெரிய அளவில் புளியங்குடியில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஞாயிறன்று காலை தென்காசி எஸ்பி அசோக்குமார் புளியங்குடி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் புளியங்குடி போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் லாட்டரி விற்பனை: வாலிபர் கைது; செல்போன் பறிமுதல்

தூத்துக்குடி, ஜூன் 8 - தூத்துக்குடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள கிரேஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (36). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில மற்றும் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை இணையதளம் மூலமாகப் பலருக்கும் ரகசியமாக விற்பனை செய்து வருவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், தாளமுத்துநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்து திடீர் சோதனை நடத்தினர். விசாரணையில், ராம்குமார் தனது செல்போன் மூலமாக ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ராம்குமாரைத் தாளமுத்துநகர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், ஆன்லைன் லாட்டரி வியாபாரத்திற்கு அவர் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வந்த செல்போனையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாட்கோ மூலம் அழகுக்கலை, சிகை அலங்காரம் பயிற்சிகள்

தூத்துக்குடி, ஜூன் 8 - தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட வுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ மற்றும் தனி யார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை (Master Certification in Bridal Makeup Artistry Course) மற்றும் சிகை அலங்காரம் (Diploma in Creative hair dressing chemical treatment Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வய திற்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். இப்பயிற்சிக் கான கால அளவு 45 நாட்கள். திருச்சி மாவட்டத்தில் இப்பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதற் கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.15000 முதல் ரூ.25,000 வரையும் வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

தூத்துக்குடி, ஜூன் 8 - கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலியாக உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு முகவர் பணிகளுக்குத் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தி ருக்க வேண்டும். ஒன்றிய அல்லது மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரி யத்தின் மூலமாக நடத்தப்பட்ட 10 ஆம் வகுப்பு (SSLC) அல்லது அதற்கு நிகரான தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலையில்லாத இளைஞர்கள், சுயதொழில் செய்யும் நபர்கள், முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீடு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் கிராம சபை உறுப்பினர்கள் ஆகியோர் இம்முகவர் பணிக்குத் தாராளமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் முறையான நேர்முகத் தேர்வு (Interview) மூலமாக மட்டுமே முகவர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். இவர்க ளுக்கு நிலையான மாதச் சம்பளம் எதுவும் கிடையாது; மாறாக, அவர்கள் எடுக்கும் காப்பீட்டுப் பாலிசிகளின் பிரீமியம் தொகை யின் அடிப்படையில் உரிய ஊக்கத் தொகை (Commission) மட்டுமே வழங்கப்படும். இப்பணிக்குத் தேர்வு செய்யப்படும் முகவர்கள் அனைவரும் ரூ.5,000-த்தை (ஐந்தாயிரம் ரூபாய்) பாதுகாப்பு வைப்புத் தொகையாக (Security Deposit) தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC) அல்லது கிசான் விகாஸ் பத்திரம் (KVP) வடிவில் ஏதேனும் ஒரு அஞ்சலகத்தில் செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட முகவர்களின் முகவாண்மைக் காலம் (Agency Period) நிறைவடையும் போது, இந்த வைப்புத் தொகையானது உரிய வட்டியுடன் விண் ணப்பதாரருக்குத் திருப்பி வழங்கப்படும். இப்பணிக்கான விண்ணப்பப் படிவங்களை அருகிலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நேரில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை உரிய கல்வி மற்றும் அடை யாள ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து, ஜூன் 30 ஆம் தேதிக்குள் அருகிலுள்ள அஞ்சலகங்களிலோ அல்லது “அஞ்சலக கண்காணிப்பாளர், கோவில் பட்டி கோட்டம், கோவில்பட்டி - 628501” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் (Speed Post) மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என கோவில் பட்டி கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.