நெல்லையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
5 Oct 2026, 9:33 pm

நெல்லையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருநெல்வேலி, அக்.5 -நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மோகன் தலைமை தாங்கினார். தூய்மைப் பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள், மாநகராட்சியில் 240 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பணிபுரிந்து வரும் தினக்கூலி தூய்மைப் பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி தினசரி சம்பளமாக ரூ.762 வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். காலை உணவுத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் காலை உணவுப் படியாக தலா ரூ.100 வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து தொடர்ச்சியாகப் பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் தொகையை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உடனடியாக செலுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர்

எல்.சரவண பெருமாள், மாவட்டத் துணைத் தலைவர் எம்.சுடலைராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் பேசினர். எனினும் முடிவுகள் எட்டாததால் செவ்வாயன்று இரண்டாம் நாளாக போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.