திருநெல்வேலி - கொல்லம் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல்
11 Oct 2026, 10:16 pm

திருநெல்வேலி - கொல்லம் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி, அக்.11-திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரயில்வே போக்குவரத்து தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு பயண வசதியை மேம்படுத்தும் வகையில் பாரம்பரியமிக்க கொல்லம் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கோட்டை வழித்தடத்தில் மலைகளின் அழகை ரசித்துக் கொண்டே கேரளாவின் கொல்லம் நகருக்குச் செல்லும் காலை மற்றும் பகல் நேரப்பயணிகள் ரயில்கள் ஒரு காலத்தில் நெல்லை மக்களின் அன்றாட வாழ்வோடு ஒன்றிணைந்திருந்தன.இந்தச் சேவை நிறுத்தப்பட்டதால், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக கேரளம் செல்பவர்கள் கடுமையான போக்குவரத்துச் சுமையையும், கூடுதல் கட்டணச் சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர். எனவே, பாரம்பரியமிக்க இந்த வழித்தடத்தில் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் மிக முக்கியமான கோரிக்கையாக உள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து, தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலைப் போலவே, காலை 8 மணிக்கு சென்னைக்கு கூடுதலாக ஒரு புதிய அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும்.

இது நடுத்தர மற்றும் சாதாரண மக்களின் பயணச் சுமையை வெகுவாகக் குறைக்கும்,

மேலும் அவசரப் பயணமாகச் செல்லும் பயணிகள் வசதிக்காக, மாலை 7 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பில் இருந்து தாம்பரம் வரை ஒரு புதிய அந்தியோதயா விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும்.கொங்கு மண்டலமான கோயம்புத்தூருக்கும் திருநெல்வேலிக்கும் இடையேயான வணிக மற்றும் கல்வித் தொடர்புகள் மிக நெருக்கமானவை. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்யும் இந்த மார்க்கத்தில், பயணிகள் நிம்மதியாகத் தூங்கிவிட்டுக் காலை நேரத்தில் சென்றடையும் வகையில் ஒரு புதிய இரவு நேர ரயில் இயக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ரயில்வே துறை கூடுதல் கவனம் செலுத்தி, பாரம்பரிய வழித்தடங்களை மீட்டெடுப்பதோடு, புதிய ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த நெல்லைப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.