குடோன் வசதி இல்லாததால் மழையில் நனைந்து 500 நெல் மூட்டைகள் நாசம்
10 May 2026, 10:12 pm

குடோன் வசதி இல்லாததால் மழையில் நனைந்து 500 நெல் மூட்டைகள் நாசம்

விவசாயிகள் கவலை தூத்துக்குடி, மே 10- சாத்தான்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய குடோன் வசதி இல்லாததால், திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின.

இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளியன்று மாலை முதல் சனிக்கிழமையன்று அதிகாலை வரை கனமழை பெய்தது.

இதில் சுமார் 68 மில்லி மீட்டர் மழை பதிவானது.

திருநெல்வேலி வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சாத்தான்குளம் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குடோன் வசதி இல்லாத சூழலில், மழை பெய்யும்போது மூட்டைகளைப் பாதுகாக்கத் தார்பாய் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் 500-க்கும் மேற்பட்ட மூட்டைகள் மழை நீரில் முழுமையாக நனைந்து முளைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், “நாங்கள் கஷ்டப்பட்டு விளைவித்துக் கொண்டு வந்த நெல் மூட்டைகளைத் தார்பாய் கூடப் போடாமல் வெட்ட வெளியில் போட்டு வைத்துள்ளனர்.

மழை பெய்து மூட்டைகள் நனைந்த பிறகும், அவற்றை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப் பணியாளர்கள் யாரும் முன்வரவில்லை.

இதனால் நெல் அனைத்தும் நாசமாகி வருகிறது. ஆண்டுதோறும் இது போன்ற பாதிப்புகள் தொடர்வதால், சாத்தான்குளம் கொள்முதல் நிலையத்தில் நிரந்தரமான குடோன் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும், மழையினால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.