தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூத்துக்குடி மாமன்றக் கூட்டத்தில் 48 தீர்மானங்கள் நிறைவேற்றம்

27 May 2026, 10:48 pm
தூத்துக்குடி மாமன்றக் கூட்டத்தில்  48 தீர்மானங்கள் நிறைவேற்றம்
<p><strong>தூத்துக்குடி மாமன்றக் கூட்டத்தில் 48 தீர்மானங்கள் நிறைவேற்றம்</strong></p><p>தூத்துக்குடி, மே 27- தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக கூடிய தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் 48 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் சாதாரண மாமன்றக் கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதல் மாமன்றக் கூட்டம் இதுவாகும். மாமன்ற உறுப்பினர்களின் விவாதங்களுக்கு இடையே, மாநகராட்சியின் பல்வேறு வார்டு மேம்பாட்டுப் பணிகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்த 48 முக்கியத் தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: மாநகர வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்பு போல் தற்போதும் அதிவேகமாகத் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. கோடைக் காலத்தின் பெரும்பகுதி வெற்றிகரமாகச் சமாளிக்கப்பட்டுள்ளது. ஒருசில வார்டுகளில் மட்டுமே குடிநீர்ப் பற்றாக்குறை உள்ளது, அதுவும் விரைவில் சீரமைக்கப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பக்கிள்ஓடை விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அங்குள்ள அம்மா உணவகத்தை வேறொரு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, நடப்பு நிதியாண்டில் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் உள்ள வார்டு அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்களைப் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கால்டுவெல் காலனி, அமுதா நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பகுதி, முத்தையாபுரம் வார்டு அலுவலகங்கள், சிதம்பரநகர் வணிக வளாகப் பிரிவு அலுவலகம், லெவிஞ்சிபுரம் ஆபரேட்டர் அறை ஆகியவற்றைப் பழுதுபார்க்க நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை அருகே நடைபாதை, மழைநீர் வடிகால் வசதிகள் அமைத்தல், காத்திருப்புக் கூடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் கொசுவலைகள் பொருத்துதல், மழைக்கால வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கப் புதிய கழிவுநீர் மோட்டார் பம்புகள் வாங்குதல் போன்ற பணிகளுக்குப் பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய கடைகள் அமைத்தல், கழிப்பறை பராமரிப்பு, ரயில் நிலைய பிரதான சாலையில் மழைநீர் வடிகால் மற்றும் நடைபாதை சீரமைப்பு, தருவைகுளம் பகுதியில் நாய் பாதுகாப்பு மையக் கட்டிடம் புதுப்பித்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தத் திட்டங்களின் மூலம் மாநகரப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்குச் சுகாதாரமான சூழல் உருவாகும் என்று தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.