இது கீழடிக்கும் நாக்பூருக்குமான போர் திருப்புவனத்தில் கனிமொழி கருணாநிதி அனல் பறக்கும் பிரச்சாரம்!
2 Apr 2026, 3:50 pm
<p><strong>இது கீழடிக்கும் நாக்பூருக்குமான போர் திருப்புவனத்தில் கனிமொழி கருணாநிதி அனல் பறக்கும் பிரச்சாரம்!</strong></p>
<p>மானாமதுரை, ஏப். 2- “தமிழகச் சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் அரசியல் மாற்றமல்ல; இது நமது தொன்மையான கீழடி பண்பாட்டிற்கும், நாக்பூரின் அதிகாரக் குவிப்பிற்குமானப் போர்” என திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சூளுரைத்தார். கீழடியிலிருந்து தொடங்கும் உரிமைப் போர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து, திருப்புவனம் பகுதியில் வியாழனன்று நடைபெற்ற எழுச்சிமிக்கப் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் போது, “எனது தேர்தல் பிரச்சாரத்தை எங்கிருந்து தொடங்கலாம் என முதலமைச்சர் கேட்டபோது, தமிழர்களின் அடையாளத்தை உலகிற்குப் பறைசாற்றிய கீழடி மண்ணிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று கூறினேன். கீழடியின் தொன்மையை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க நமது முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளை முடக்கப் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு, இந்தத் தேர்தல் மூலம் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தமிழர்களின் பெருமையை மறைக்க நினைக்கும் சக்திகளை நாம் அனுமதிக்கக் கூடாது” என்றார். மகளிர் நலனில் திராவிட மாடல் சாதனை திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட கனிமொழி, “மகளிர் உரிமைத் தொகை ₹1,000 என்பது இனி ₹2,000 ஆக உயர்த்தப்படும். அதேபோல், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை ₹1,500 ஆக அதிகரிக்கப்படும். இவை வெறும் வாக்குறுதிகள் அல்ல, கலைஞர் வழியில் முதலமைச்சர் செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்கள். ₹8,000 மதிப்பிலான குடும்பத் தலைவிகளுக்கான கூப்பன் திட்டம் இல்லத்தரசிகளின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும்” என்றார். எதிர்க்கட்சிகளின் போலி வேடம் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் நிலைப்பாட்டைக் கடுமையாகச் சாடிய அவர், “பாஜகவின் நிழலாகச் செயல்படும் அதிமுக, தமிழக உரிமைகளை அடகு வைத்துவிட்டது. மக்கள் எதற்கும் மயங்காமல் ‘சூதானமாக’ இருந்து உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்தத் தொகுதியின் வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார், தொகுதி வளர்ச்சிக்காகவும் கீழடி அருங்காட்சி யக உருவாக்கத்திற்காகவும் தொடர்ந்து பாடுபடுபவர்” எனப் புகழ்ந்துரைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட திமுக துணைச் செயலாளர் சேங்கை மாறன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் மோகன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் முருகேசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி, விசிக மாவட்டச் செயலாளர் பாலையா உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.</p>
