அடையாளச் சான்று வழங்க மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிப்பதா? திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தல்
10 Jul 2026, 8:53 pm

அடையாளச் சான்று வழங்க மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிப்பதா? திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 10 - அடையாளச் சான்று வழங்குவதற்கு மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மாற்றுத் திறனாளிகள் புதிதாக அடையாளச் சான்று பெறுவதற்கு அல்லது பழைய சான்றுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட கிழமைகளில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் ஒரே நாளில் அடையாளச் சான்று பெறுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலும் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி மற்றும் ஆவடி ஆகிய இடங்களில் அடையாளச் சான்று வழங்கும் இப்படிப்பட்ட நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் 7.7.2026 தேதியிட்டு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், முகாம்களில் இணையதளத்தில் பதிவு செய்வதால் சிரமம் ஏற்படுவதாகவும், எனவே, முகாமிற்கு வருவதற்கு முன்கூட்டியே இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தனியார் ஊழியர்கள் பொறுப்பா?

அச்செய்திக் குறிப்பில், ரைட்ஸ் திட்டத்தில் பணியாற்றும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களின் பெயர்கள், தொடர்பு எண்களை குறிப்பிட்டு அவர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், அவர்கள் அழைத்தால் மட்டுமே முகாமில் பங்கேற்க முடியும் என்றும் அறிவித்திருப்பது, அரசு நேரடியான தனது சட்டப் பொறுப்பை தட்டிக்கழிப்பதாகும். இணையதள பதிவு செலவுகளுக்கு என இந்த ஊழியர்கள் மூலம் முன்கூட்டியே பணம் பெற்று, மாற்றுத் திறனாளிகளை அலைய வைக்கும் செயலாகும்.

போராட்டத்திற்கு தள்ளாதே!

கல்வி விழிப்புணர்வற்ற ஏழை மாற்றுத் திறனாளிகள் நிறைந்துள்ள இந்த சமூகத்தில், அடையாள சான்று பெறுவதற்கு அவர்களை மேலும் மேலும், அலைக்கழிக்கும் வகையிலும், பணம் செலவு செய்ய வைக்கும் வகையிலும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள இத்தகைய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.